மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
நிழல்கள் ஒன்றை ஒன்று ஒளியது ஒன்றை ஒன்று
பெரியது சிறிதை மற்றும் சிறியதே சிறிதாய் பெரிதை,
உறவுகள் ஒன்றை ஒன்று அறிவது ஒன்றை ஒன்று
பணமது குணத்தை என்று பிணமது ஆகும் வரையில்
மறைத்தலே மனிதர் தத்துவம்.
காற்றினில் ஏறி என்றும் கற்பனைக் குதிரை ஓட்டி
கனவிலே இன்பம் கண்டு கண்ணிலே பொய்மை பேசும்.
பொய்யது கண்டு கொண்டால் வாயது இளித்து நிற்கும்
பாசாங்கு செய்தல் என்றால் பல்லது இளித்து காட்டும்
மாற்றமா மனிதம் ? என்றும் மறைத்தலே மனிதம்.
விலங்குகள் மறைத்தல் அறியா.
கோபமோ கண்கள் காட்டும்; ஆத்திரம் வாயில் வடியும்
காதலோ இதயம் காட்டும் இன்பமோ உடம்பே சொல்லும்
மாக்கள் மனிதம் ஆகா; மறைத்தலை மாக்கள் அறியா.
உணர்ச்சிகள் திரையில் அடங்கா; உண்மைகள் கரைக்குள் அடங்கா.
வெளிப்பாடு என்றும் எதற்கும்;வடிந்தது மனமென்றாகும்.
ஆனால் மறைத்தலே மனிதம்.
பூட்டிய உணர்வே பின்னாள் விஷமாகும் என்றான் நீட்ஷெ.
உண்மையும் விஷமும் அறிவோம்; அனைத்தையும் பூட்டி வைப்போம்!
சங்கிலி இடுவோம் நமக்கே; சட்டிக்குள் சுற்றும் குதிரை!
பொங்கிட ஆசை கொள்ளும் மனமதை மறைத்து காப்போம்.
கோபமும் க்ரோதம் வேட்கை, குமைந்திடும் ஆசை மோகம்,
ஏளனம் கண்கள் சொல்லும் இகழ்ச்சியும் வெறுப்பு மற்றும்
துன்பமும் சோகம் வருத்தம், துவண்டிடும் சோர்வு தளர்ச்சி
நாணமும் மருட்சி வெட்கம், நால் வகை குணமுமென்று
அனத்தையும் மறைத்து வைப்போம்.மறைத்தலால் மனிதராவோம்!
மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
மறைப்பதால் மாற்றலாகி மாற்றமும் மாறி மாறி....
மறைத்தலே மனிதர் தத்துவம்!
மறைந்தவர் சொல்லிச்சென்றார் மாற்றமே மனிதமென்று,
மாற்றமே தத்வமென்றால் தத்துவம் மாறுவதென்றோ !
திப்பிலி
(இருட்டு பாதையில் நீள இரவில் ஒரு நாள் நடக்க நேரிட்ட போது தோன்றிய எண்ணக் குழப்பங்கள் கவிதையானது- 1989)