Saturday, September 25, 2010

எண்ணியது எய்தலாம்!--10


துளியவன் நினைவுகொண் டாலும்
...தொடர்வினைத் தீர்த்திடும் ஈசன்
தளியமை அடியரின் உள்ளம்
...தங்கிடும் அரனுமை நாதன்
ஒளிவெளி நீர்புவி காற்றாய்
...உயிர்களைக் காத்திடும் பெம்மான்
எளியனின் தாள்நினை அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Thursday, September 23, 2010

எண்ணியது எய்தலாம்!--9

விரிசடை மேவிடும் கொன்றை
...வெண்மலர் தும்பையும் சூடி
கரியதன் தோலுடை யாகக்
...கண்கவர் நீறணி கோலன்
அரிஅயன் தொழும்தழல் ஆனான்
...அளவிலா அருள்தரும் வள்ளல்
எரிசுடு கானரன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Wednesday, September 22, 2010

எண்ணியது எய்தலாம்!--8

காய்ந்திடு சினமெழக் காலன்
...கலங்கிடச் சிறுவனைக் காத்தான்
ஓய்ந்துடல் வீழ்ந்திடும் போதில்
...உறுதுணை எனவரும் ஐயன்
பாய்ந்திடு நதிசடை ஏற்றான்
...பவமதைத் தூர்த்தருள் பார்வை
ஏய்ந்தவன் தாள்தொழும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Friday, September 17, 2010

எண்ணியது எய்தலாம்!--7

துன்புடன் இன்பமும் சூழ்ந்தே
...தொடரிரு வினைதரு வாழ்வில்
மன்பதை உலகினை காக்கும்
...வரமெனும் அஞ்செழுத்(து) ஓதி,
"என்பரம் என்கதி நீயே!"
...என்றிட அருளினைக் காட்டும்
இன்பனை வழிபடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே.

Thursday, September 16, 2010

எண்ணியது எய்தலாம்! --6

தெழிதரும் முழவொடு பம்பை
...திகழுறு விரிசடை யோடே
எழிலுடை நுதல்விழி யானின்
...இணையிலா நடமிடு பாதம்
அழிவினில் ஆழ்த்திடும் ஊழை
...அண்டிடா(து) அருள்தரும்;விண்ணின்
இழிநதி சடையனின் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

தெழி=ஒலி.

Wednesday, September 15, 2010

எண்ணியது எய்தலாம்!--5

பெரும்பவத் துயரினை மாய்க்கும்
...பிஞ்ஞகன் அருளினை வேண்டி
விரும்பிடும் அடியரைக் காக்கும்
...விகிர்தனின் அருமையென் சொல்ல?
சுரும்புகள் ஆர்த்தெழும் சோலை
...சூழ்தளி மேவிடும் நாதன்
இருங்கழல் பற்றிடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

சுரும்பு=வண்டு

Monday, September 13, 2010

எண்ணியது எய்தலாம் !--4

நிறைவினை அளித்திடும் தாளை
...நிலையெனும் அடியரின் மெய்யன்
கறையுறு கண்டமும் கொண்டான்
...கரமதில் மான்மழு ஏந்திக்
குறையினைத் தீர்த்துயிர் காக்கும்
...குணநிதி மங்கையொர் பாகன்
இறையவன் புகழ்சொலும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Sunday, September 12, 2010

எண்ணியது எய்தலாம்!--3

சுடலையில் நடமிடு பாதம்
...தூதென சுந்தரர்க்(கு) ஏகும்
கடலெழு விடத்தையும் ஏற்கும்
...கருணையில் அமுதெனக் கொள்வான்
குடமிடு சாம்பலும் மங்கைக்
...கோலமாம் படியருள் செய்வான்
இடபனாய் அருள்பவன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Saturday, September 11, 2010

எண்ணியது எய்தலாம்! --2

நீற்றினில் துலங்குவெண் மேனி
...நிலவுடன் சடையினில் கங்கை
ஆற்றினைக் கொண்டவன் தன்னை
...அப்பனென் றடியவர் அன்பால்
போற்றிடும் பாடலுக் கென்றே
...புரிந்திடும் ஆடலைச் செய்யும்
ஏற்றனின் அருள்திறம் கொள்வார்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Friday, September 10, 2010

எண்ணியது எய்தலாம்!

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)

சிந்தையில் பரமனின் அன்பைத்
...தேக்கிநெக் குருகிடச் செய்யும்
செந்தமிழ் வாசகத் தேனில்
...திகழ்மணி வாசகர் உய்ந்தார்!
அந்தமொன் றென்றிலா ஈசன்
...அருளினை வேண்டிடு வார்கள்
எந்தவொர் ஐயமும் இன்றி
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....1

Sunday, September 5, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--10


பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Saturday, September 4, 2010

ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே!--9

மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே.

Friday, September 3, 2010

ஓணகாந்தன் தளிசேர்நெஞ்சே!--8


விலையில் லாத இறையன் பேதான்
...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்
வலையில் சிக்கும் மீனைப் போல
...வலிய மாயை தன்னில் வீழா
நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்
...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்
உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

உலைவு=சஞ்சலம்.

Thursday, September 2, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--7


சுமக்கும் பார மல்ல யாக்கை
...துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே.

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--6

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

Wednesday, September 1, 2010

ஓணகாந்தன் தளிசேர்நெஞ்சே!--5

படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.