Tuesday, April 27, 2010

ஆலவாய் அண்ணல் ---5

விந்தை யான விரிசடை கொண்டவன்
அந்த மில்நடம் ஆடிடும் தாண்டவன்
சுந்த ரேசனாய்த் தோன்றி அருள்பவன்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

நாவி னுக்கிதம் நல்குமஞ் சட்சரத்
தேவி னைத்தெளிந் தேத்தும் அடியவர்
பாவி னுக்குப் பரிந்தருள் செய்பவன்
சேவில் ஏறும் திருஆல வாயனே!

ஆலவாய் அண்ணல் --4

இந்த னம்சிர மேற்றே இசைத்தமிழ்
சந்த தம்வெலத் தந்தருள் செய்தவன்
சிந்தை மேவிடு செஞ்சடை ஈசனாம்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

இந்தனம்=விறகு(விறகுவெட்டியாய் பாணபத்திரனுக்கருள்செய்தது)
வெல்ல =வெல(இடைக்குறை)

ஓயா அன்பினில் உன்னிட நிற்பவர்
நோயாம் வல்வினை நூக்கிடும் அங்கணர்
"நேயா! வந்தருள் நின்மலா!"என்றிடத்
தாயாய்க் காப்பவர் ஆலவாய்த் தந்தையே!

நூக்குதல்= தள்ளுதல்.

Friday, April 23, 2010

ஆலவாய் அண்ணல்! -- 3விரியும் வானில் மிதந்திடும் கோள்களை
உரிய பாதை ஒழுங்கில் சுழன்றிடப்
புரியும் அந்தமில் புண்ணியச் சோதியர்
அரிவை பாகர் எம் ஆலவாய் அண்ணலே!

தந்த இன்னலைத் தாங்கிடும் பக்தியில்
நந்தன் தில்லையின் நாதனைக் கண்டனன்
அந்த மொன்றிலா அன்பினுக்(கு) ஆட்படும்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

Saturday, April 17, 2010

ஆலவாய் அண்ணல் -- 2

நீண்ட பாதையில் நீளிருள் சூழ்ந்திட
வேண்டும் நல்லொளி மேவுமோ? நெஞ்சமே!
தாண்ட வப்பதம் தந்திடும், வானதி
பூண்ட ஆலவாய் அண்ணலைப் போற்றவே!

மூல மானவன் மோ(து)அலை கங்கையைக்
கோல மாகக் குளிர்சடை ஏற்றவன்
ஓல மேயிட உய்வை அளிப்பவன்
ஆல வாய் அமர் கண்ணுதல் அண்ணலே!

Friday, April 16, 2010

ஆலவாய் அண்ணல் -- 1

ஆலவாய் அண்ணல் (திருஆலவாய் - மதுரை)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
முதல் சீர் 'மா'. இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும். 2௩௪ சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வரும்.
நேர் அசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்துகள்.)


சிவ சிவாவுக்கு என் மனமுவந்த நன்றி!


நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!

எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!

Sunday, April 11, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 10
இருவினையில் உழந்து வாடி
...இன்னலுறல் தகுமோ ஐயா!
உருகியுனை நினைந்து போற்றும்
...உள்ளமதை எனதாய்க் கேட்டேன்!
கருவயிற்றில் சுமந்த பெண்ணைக்
...காத்திடவே தாயாய் வந்தாய்!
குருமையெனும் குணங்கொள் மெய்யா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குருமை=பெருமை.

Saturday, April 10, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! ---9

பொய்ம்மைமிகு உலக வாழ்வில்
...புன்மைநிலை நீங்க உன்றன்
மெய்ம்மையுணர் மதுர நாமம்
...மேவிநிதம் பாடி வந்தேன்!
உய்வதற்குன் மலர்த்தாள் தன்னை
...உள்ளமதில் பற்றி நின்றேன்!
கொய்ம்மலர்சூழ்ந் திலங்கும் தேவே!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Thursday, April 8, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!--- 6,7,8.

தும்பிக்கை யானின் தம்பி
...சூர்வென்றான் குருவாய்க் கொண்டாய்!
நம்பிக்கை ஒளியாய்க் காப்பாய்!
...நஞ்சுண்டா! பணிந்தேன் உன்னை!
வம்பிற்கும் வீணே நாளும்
...வாதிற்கும் கழிந்த தந்தோ!
கும்பிட்டு வாழ்வேன் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

சுற்றிவரும் வினையில் சிக்கி
...சோர்வெனுமோர் பிணியில் நொந்து
உற்றதுயர் மிகவும் வாட்ட
...உன்னடியின் அருமை கண்டேன்!
நற்றவசேக் கிழாரும் அன்பால்
...நம்பனுனக்(கு) எடுத்த கோவில்
கொற்றமிக விளங்கத் தோன்றும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

நீறாலே பொலியும் ஈசா!
...நெஞ்சார நினைந்துப் பாடி
மாறாத பக்தி யோடு
...வாழ்நாளும் செல்ல வேண்டும்!
பேறாகப் பெறுப வற்றுள்
...பேறாமுன் அருளே!உன்பேர்
கூறாஅந் நேரம் காப்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Tuesday, April 6, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 5

செண்டான மலரில் கட்டி
...சீராகத் தொடையல் தந்தேன்!
விண்டோத முடியா நாதா!
...வேதங்கள் பணியும் பாதா!
தண்டோடு துவளும் மேனி
...தள்ளாடும் அந்நாள் காலன்
கொண்டோட, என்முன் நிற்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 4

தஞ்சமென அடியார் கூடிச்
...சங்கரனாம் உன்னைப் பாடப்
பிஞ்சுமதி நதியைச் சூடிப்
...பிஞ்ஞகனாய் நடிக்கும் ஈசா!
நெஞ்சமதில் நினைந்து நாளும்
...நின்னருளை நயந்தேன் ஐயா!
குஞ்சிரிப்பில் கருணை காட்டும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Sunday, April 4, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 3

வறுமையினில் நிதியாய் வந்தாய்!
...வரமென உன் அபயம் கேட்டேன்!
சிறுமதியன் எனது கீழாம்
...சிறுமைகளை நீக்கி ஆள்வாய்!
நறுமலரில் தொடுத்த மாலை
...நயமுறவே இலங்கு மார்பா!
குறுநகையில் மிளிரும் ஈசா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 2

தெளிவில்லா உள்ளம் கொண்டே
...செயலொன்றும் அறியேன் காப்பாய்!
துளியாம்வெண் மதியைச் சூடிச்
...சுடர்மேவும் தழலோய்! வானாய்
வெளியாகி புவியாய் காற்றாய்
...விரிந்தெங்கும் இலங்கும் தேவே!
குளிர்கங்கை சடையில் ஏற்றாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Saturday, April 3, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!

துடிகொண்ட இசையில் சேர்ந்து
...சுழல்கின்ற கழலோய்!கூத்தா! !
முடிகொண்ட கங்கை யோடு
...முதிராத பிறையும் சூடி
பொடிகொண்ட மேனி யென்றும்
...பொலிவாகும் அரனே! உள்ளம்
குடிகொண்டு காக்கும் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!