Monday, May 31, 2010

தாள்தொழாய் நெஞ்சமே -- 3

வாய்சொலும் பேர்புகழ் மல்குநீர்ப் பொங்கிடத்
தூய்மலர் மாலையில் தோன்றிடும் சோதியர்
தாய்தரும் நேசமாய்த் தண்ணருள் செய்பவர்
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.

Saturday, May 29, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --2

ஏற்றினில் வந்துமே இன்னருள் செய்பவன்
ஊற்றெழும் பக்தியால் உற்றிடும் சுத்தனாம்
பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

Friday, May 28, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --1

(இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது.


சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"
சிவசிவாவிற்கு என் நன்றி!)


சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதில் சிந்தையாய்த் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!

நாவினுக் கின்புசெய் பேரினான்= நாவினுக்குச் சொல்ல(ச் சொல்ல) இன்பம் தரும் பேரை உடையவன்.

Wednesday, May 26, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --5


அழலார் நுதல்கண்ணால் அனங்கன் தனைச்செற்றான்
கழலை முடிதன்னைக் காணா இருவர்க்கும்
தழலாய் நிமிர்ந்தானின் தஞ்சைப் பெருங்கோவில்
தொழலே வினைதீர்ந்து சுகிக்கும் வழியாமே.

தவமே உருவாகத் தருஆல் நிழல்கீழே
சிவமாய் அமர்மோனத் திருவாய் அருளீசன்
தவள விடையேறி தஞ்சைப் பெருங்கோவில்
எவர்போற் றினும்வேண்டும் எல்லாம் பெறுவாரே.

Sunday, May 23, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --4


புங்கன்; அடியார்கள் போற்றும் அருளாளன்;
கங்கை நதியோடு கனக நிறக்கொன்றைத்
தங்கும் சடையானின் தஞ்சைப் பெருங்கோவில்
உங்கை குவித்தேத்தின் உறுநோய் அடையாவே.

புங்கன்=தூயவன்.

மலையன்; அருள்செய்யும் மன்னன்; சிரமீது
அலையும் நதிசூடி ஆடல் புரிகின்றத்
தலைவன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
தலையால் தொழுவார்கள் தவியார் தரைமீதே.

Wednesday, May 19, 2010

தஞ்சைப் பெருங்கோவில் -- 3


நிழலும் தரைவீழா நீள நெடுங்கோவில்
விழையும் அடியார்க்கு வேண அருள்செய்யும்
தழலன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நிழலை அடைநெஞ்சே! நெருங்கா வினைதானே....5

நிழல்=சாயை

//நிழல் எனில் பல பொருள்கள்.
நிழல் - தானம்; புகலிடம்;
பல பாடல்களில் நீழல் எனவும் வரும்.
திருவடித் தலம், திருவடி நிழல்,,,,//(மிக்க நன்றி!சிவா!)


வரித்தான் கரித்தோலை; மங்கை யொருபாகன்
சரித்தான் மனக்கோவில் தத்தும் நதிகுஞ்சி
தரித்தான் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
கரத்தால் தொழுவாரைக் காலன் அணுகானே.....6

சரித்தல்=வசித்தல்
வரித்தல்=உடுத்துதல்
குஞ்சி=தலை,உச்சி மயிர்.

Monday, May 17, 2010

தஞ்சைப் பெருங்கோயில் --2

வெம்பும் உளமோடு வீணில் அலையாதே
இம்பர் அடியாரின் ஈசன் உமைநேசன்
சம்பு உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நம்பி அடைநெஞ்சே நாளும் வருமின்பே.

மையல் எனுமோக மாய வலைவீழ்ந்து
பைய அழியற்க! பாதி மதிசூடி
தையல் ஒருகூறன் தஞ்சைப் பெருங்கோவில்
ஐயன் அடிபோற்றி அல்லல் அறுநெஞ்சே.

Friday, May 14, 2010

தஞ்சைப் பெருங்கோயில் !

("மா மாங்காய் மா மாங்காய்" - என்ற வாய்பாடு)

(சிவசிவாவின் பின்னிரண்டடிக்கு, நான் முன்னிரண்டு அடி எழுதுகிறேன். சிவசிவாவுக்கு என் நன்றி.)


ஓதை மிகுபாரில் உய்யும் வழிதேடும்
வாதை யினிவேண்டா மன்றில் நடமாடும்
தாதை உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
பாதை அறிநெஞ்சே! பற்றா வினைதானே.....1

ஓதை=ஆரவாரம்
வாதை=துன்பம்.


மதிக்கும் திருமேவும் மன்னர் தமதன்பால்
செதுக்கி உயிரூட்டும் சிற்பக் கலையோங்கப்
பதிக்குப் பணிசெய்த தஞ்சைப் பெருங்கோவில்
துதிக்கும் அடியாரைத் தொடரா துயர்தானே.....2

Wednesday, May 12, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்--- 10

முதுவழி யதுமுயர் தவநெறி முறையினில் இறைவனை அடைவது
பொதுவழி நெகிழுறு அடியவர் புகலென இறைதொழு நவவழி
இதுவழி சிவமதன் திருவினை இகமதில் எளிதினில் அடைகிற
மதுவழி மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

நவ வழி:
ஒன்பது வித பக்தி:
1.ஸ்ரவணம் 2.கீர்த்தனம் 3.ஸ்மரணம் 4.பாதசேவனம்
5.அர்ச்சனம் 6.வந்தனம் 7.தாஸ்யம் 8.ஸக்யம் 9.ஆத்ம நிவேதனம்.

Monday, May 10, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 9

கருவினில் துளியென வளருடல் கடைசியில் முதுமையில் உதிர்வுறும்
வருகிற அரிதெனும் பிறவியும் மறையவ்ன் அருளினில் பொருளுறும்
முருகெனு அழகினில் நிறைவுறு முழுமுதல் குருபரன் நிறமுறு
மருமிகு மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Sunday, May 9, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 8

குறியினை யுறமன உறுதியில் குணமெனும் கருணையும் புரிபவன்
வறியவ ளிறைபணி தமதெனு மனமொடு அடிபடு சிவனவன்
முறியொடு மணமது தடையுற முறையொடு அடிமையும் கொளுமிறை
மறியொடு கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


குறி=இலக்கு
வறியவள்=வந்தி.வந்திக்குக் கூலி ஆளாய்வந்தத்
திருவிளையாடல்.
இறைபணி=அரசாணை
முறி=பத்திரம்.(திருமணத்தைநிறுத்தி
சுந்தரரை அடிமைகொண்டது.)

Saturday, May 8, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 7

பொதிமிகு சுமையென வருவினை பொடிபட இணையடி அருளுவன்
சுதியொடு எழுமிசை இனிதுறு சுகமென உணர்வதில் நிறைபவன்
புதிரொடு புதிரினில் விடையெனும் புரிதலை அளி இறை குளிருறு
மதிதவழ் சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Thursday, May 6, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் -- 6

பதமிடு நடமதில் மனமதும் பரவச நிலையினில் மகிழுறும்
இதமுடன் மவுனமும் உணர்வினில் இசைவுற அளிசெயும் குருபரன்
சதமெனும் அவனருள் நினைபவர் தமதிறை எழிலுடன் மிளிர்கிற
மதகரி உரியணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Wednesday, May 5, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் ---5

முழுமுத லிறைவனை அகமதில் முறையுடன் நெகிழுள மொடுதொழும்
குழுவினில் இணையவும் அருளுறு குருவடி பணியவும் புரிபவன்
உழுவையி னுரியுடை யுடனொரு உரகமு இடையணி குழகனின்
மழுவமர் கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Tuesday, May 4, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 4

பிழையையும் குணமெனும் பெருநிதி யவனடி சிரமதில் அணிகுவம்
இழையணி பணியுடன் இணர்மலர் தொடையலில் இசைவுடன் ஒளிர்பவன்
விழைகிற அடியவர் விதமுற நடமிடு பரமனின் அலைநதி
மழைபொழி சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Monday, May 3, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 3

பழவினை யதிலுழல் விழலெனும் பயனறு பிறவியின் தளையற
அழலுட னுழைதிகழ் கரமுடன் அபயமு மளிதயை மிகுபவன்
தழலுறு சுடலைவெண் பொடியணி சடையவன் இடமுறை உமையுடன்
மழவிடை மிசைவரும் அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

உழை=மான்

Sunday, May 2, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 2

துணிபிறை யணிசடை யினில்நதி துலங்கிட வருநம திறைவனும்
அணிசெயும் நுதல்விழி யதிலுறு அழகினில் திகழ்ந்திட வருபவன்
தணியுறும் பனிமலை யுறைசிவன் சதியுமை அருள்பெறு பவர்தொழு
மணியொளிர் மிடறுடை அரனகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

தணி=குளிர்ச்சி.

மயிலையை அடைபவர் மகிழ்வர்

விலையிலை யெனுமுயர் வழிசெல விதிதரும் இடரதும் விலகிட
வலையெனும் பிணிசெயும் பவமதன் மயலிருள் தொலைவுற அருள்பவன்
கலைமதி நதிசடை மலர்பதம் கருதிட வருபவன் இடமதில்
மலைமகள் இணையரன் உறைநகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!