Friday, January 28, 2011

தேரோடும் திருவிடை மருதூர்!


மருதமர நிழலின்கீழ் மங்கையொரு பங்குடையான்
அருளுருவில் காட்சிதரும் அண்ணலவன் மகிழுமிடம்
பொருவினையைத் தீர்ப்பவன்சீர்ப் புகழடியார்ப் போற்றிசெயத்
திருமலியும் தேரோடும் திருவிடை மருதூரே ! ...6

எவ்விதமும் இணையில்லா எழிலாடல் செய்திடுவான்
திவ்வியனாம் தேசுடைய செஞ்சடையன் மகிழுமிடம்
பவ்வியம்கொள் அடியவர்கள் பரமன்பேர் தொழுதேத்தச்
செவ்விமிகு தேரோடும் திருவிடை மருதூரே! ...7

நிகழ்கின்ற யாவுமவன் நீதியென்று நினையன்பர்
இகழ்வுறினும் அருள்செய்யும் இறைவனவன் மகிழுமிடம்
முகிழ்பக்தி மனமுடையோர் முக்கணனைத் தொழுதேத்தத்
திகழ்கின்ற தேரோடும் திருவிடை மருதூரே! ...8

மருண்டயரச் செய்வினையால் வரும்துன்பம் நீக்குபவன்
சுருண்டமுடி செஞ்சடையன் சொக்கேசன் மகிழுமிடம்
புரண்டுவரும் அலையொலியாய்ப் போற்றுமன்பர் ஒன்றாகத்
திரண்டிழுக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...9

நாவிற்கு மதுரமவன் நாமமது நவின்றிடவே
பாவிற்குள் நின்றருள்வான் பரமனவன் மகிழுமிடம்
கோவிற்கு அடியரெலாம் கொலுவிருப்போன் வீதியுலா
சேவிக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...10

Saturday, January 22, 2011

தேரோடும் திருவிடை மருதூர் !

நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா.

முறைகேட்ட ஆவினுக்கும்,முன்வந்து நீதிதந்துக்
குறைதீர்த்த அரசனுக்கும் கொடுத்தவருள் நினைந்தன்பர்
பிறைச்சடையன் மீதுற்ற பேரன்பில் வடம்தொட்டே
சிறப்பாகத் தேரோடும் திருவிடை மருதூரே ! ..1

ஊணாக உயிராக உற்றிடுமோர் துணையாகக்
காணாத பேரன்புக் கடவுளவன் திகழுமிடம்
பூணாக வெண்ணீற்றைப் புனையடியர் பணிந்தேத்தச்
சேணோங்கு தேரோடும் திருவிடை மருதூரே! ..2

பாந்தமிகு திருநடனம் பரவசமாய் ஆடுமையன்
தீந்தமிழில் தேவாரம் செவிமடுப்போன் விரும்புமிடம்
ஊர்ந்துவரும் ஏறுடையான் உமைநாதன் அடிதொழுதே
சேர்ந்திழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..3

குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்
மன்றினிலே நடம்புரியும் மழுப்படையன் மகிழுமிடம்
நன்றினையே நினையுமன்பர் நாதந்தாள் மலர்போற்றிச்
சென்றிழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..4

ஏர்மலியும் திருமேனி இலங்குமணி பணியோடு
வேர்,மருவு கொன்றைமலர் மேவுமவன் மகிழுமிடம்
வார்சடையன் பேரன்பர் வாயாரத் துதிசெய்யச்
சீர்மலியும் தேரோடும் திருவிடை மருதூரே! ..5

Tuesday, January 18, 2011

திருஆனைக்கா ஈசன்! - 10


அண்ட மெல்லாம் புரக்கும் இனியவனே
...அனைத்து மவனென் றடைந்தார்க் கினியவனே
உண்ட வனருள் ஓது அஞ்செழுத்தே
...உணரும் அடியார் இசைப்பர் அஞ்செழுத்தே
தொண்டர் தமின்பு துன்பில் பங்குடையான்
...துணையாம் உமையை இடதுப் பங்குடையான்
தண்ட பாணி பணியும் ஐயன்நீ!
...தருசூழ் ஆனைக் காவின் ஐயன்நீ! ....10

தண்டபாணி=முருகன்.

அண்டங்களைத் தாங்கி, ஆதரிப்பவன்.
அடைக்கலம் என்பார்க்கு, இனி எல்லாமும் அவனே.
அஞ்செழுத்தை உரைத்தால் நிச்சயம் அருள்வான்.
அடியார் மனமெல்லாம் நிறைவாகி அஞ்செழுத்தைப் பண்ணிசைப்பார்.
அன்பர் இன்ப, துன்பத்தில் பங்கு கொள்ளும் இறைவனவன்.
உமையை இடதுப் புறம் உடையவன்.
முருகன் பணியும் தந்தை நீ.
வனம்சூழ்ந்த திருவானைக்காவின் தலைவன் நீ.

திருஆனைக்கா ஈசன்! -9

ஆதி அந்த மென்றொன் றில்லானே
...அன்புக் குடும்ப முடைய இல்லானே
மோதி அலைக்கும் ஊழைத் தீர்ப்பவனே
...முறையாய் ஆவின் துயர்க்குத் தீர்ப்பவனே
சோதி ஒளிரும் அருவாம் தழலாடி
...சுடுதீ கானில் நடம்செய் தழலாடி
பூதி அடைவோர் உள்ளம் நிறைந்தானே
...பொழில்சூழ் திருவா னைக்கா நிறைந்தானே! ....9

Monday, January 17, 2011

திருஆனைக்கா ஈசன்! - 8

மெய்யும் பொய்யும் எதுவென் றறியோமே
...விமலா! நீயே அவையென் றறியோமே
வெய்ய புலியின் தோலை உடையானே
...விரும்பும் அடியார் உள்ள முடையானே
உய்யும் வழியைக் காட்டும் கழலோனே
...உமையா ளுடனே நடம்செய் கழலோனே
துய்ய அன்பு மனத்துள் அமர்வோனே
...துணையே திருவா னைக்கா அமர்வோனே! ....8

Thursday, January 13, 2011

திருஆனைக்கா ஈசன்!

வினையின் வாதைப் படுத்தும் பாட்டினிலே
...விமலா!துதித்தேன் தமிழ்த்தேன் பாட்டினிலே
எனையும் அருளால் காப்பார் அலைமதியர்
...இறையை நினையார் துன்பில் அலைமதியர்
நினையும் பாடல் ஈசன் தோட்டினையே
...நெகிழ்ந்தே பசியை நீவந் தோட்டினையே
புனையும் பாவும் நுதலோர் கண்ணனுக்கே
...புகழும் ஆனைக் காவின் கண்ணனுக்கே!...6.

நீல மணியாய்க் கண்டக் கறையுடையாய்
...நிலையாய் அடியார் மீதக் கறையுடையாய்
சீல முயர்வாழ் வினைத்தந் தருள்நிதியே
...செல்வ மெல்லாம் நீயே அருள்நிதியே
கோல முறுதாள் மாற்றி நடமிடுவாய்
...கொலுவாய் அம்மை வேண்டும் நடமிடுவாய்
நாலு மறையும் போற்றும் ஐயனையே
...நவில்வோம் திருவா னைக்கா ஐயனையே!...7.

அம்மை = காரைக்கால் அம்மையார்.

Tuesday, January 11, 2011

திருஆனைக்கா ஈசன்!

ஆய்ந்தே சங்கத் தமிழ்தேர் ஏடுடையான்
...அடியார் தமிழ்ப்பா காத்த ஏடுடையான்
ஊழ்வாய்ப் படும்போ தருளும் அக்கரமே
...உய்க்கும் நாமம் அஞ்சாம் அக்கரமே
தூய்தாள் நடிக்கும் ஞானக் கூத்தாடி
...தொங்கும் கழியே வாழ்வாம் கூத்தாடி
பாய்ந்துண் டானே நஞ்சாம் அமுதினையே
...பணிவோம் திருவா னைக்கா அமுதினையே!...5

அக்கரம் = அட்சரம் (எழுத்து),
அஞ்சக்கரம்(அஞ்செழுத்து)

Monday, January 10, 2011

திருஆனைக்கா ஈசன்!

அடியும் முடியும் காணார் மாலையனே
...அணியாம் முடைசேர் எலும்பு மாலையனே
வடிவில் மிளிர நடிக்கும் நடிகன்நீ
...மண்ணோர் நடிக்க இயக்கும் நடிகன்நீ
படியாம் உலகும் தழைக்கும் நீரானே
...பஞ்ச பூதத் திலொன்றாம் நீரானே
புடையில் வைத்தாய் உமையாம் பொன்னினையே
...புகழ்வோம் ஆனைக் காவின் பொன்நினையே! ...4

திருவானைக்காவில் அப்பு(நீர்)லிங்கமாகக் காட்சி தருகிறார்.

Saturday, January 8, 2011

திருஆனைக்கா ஈசன்!

தவமும் துதியும் சேர்க்கும் விடையவனே
...தவிக்கும் மனத்தின் புதிரும் விடையவனே
நவமும் திகழ அணிவார் பணியினையே
...நாடிச் செய்வார் இறைவன் பணியினையே
புவனம் இயக்கும் அரனும் குறைமதியர்
...புரியார் சிவனைத் துதியார் குறைமதியர்
பவமும் தொலைத்தே அருளைப் புரிவானே
...பதியாம் ஆனைக் காவைப் புரிவானே! ...3

பணி = பாம்பு.

Thursday, January 6, 2011

திருவானைக்கா ஈசன்!

அருளால் சடையில் ஏற்றாய் ஆற்றினையே
...அகலா அன்பர் துன்பை ஆற்றினையே
தருஆல் நிழலில் மோன குருவென்றாய்
...தகப்பன் சாமி யுமுன் குருவென்றாய்
திருவாய்ப் பொலியும் தில்லை மன்றாடி
...சிவனுன் அருளே வேட்பர் மன்றாடி
புரைதீர் வெண்ணீ றணியும் மெய்யானே
...பொழில்சூழ் திருவா னைக்கா மெய்யானே! ...2

Wednesday, January 5, 2011

திருவானைக்கா ஈசன்!

==============
திரு இயமகம்.
==============

ஆடல் புரிவான் மதுரைக் கூடலிலே
...அடியார் மனமும் பக்திக் கூடலிலே
வேடம் புனையும் விருப்ப முடையானே
...வேண்டும் பலிதேர் சிரம்கை முடையானே
காடன்,உமையாள், குகனும் மலையாரே
...கருணை அவர்தம் இயல்பே மலையாரே
பாடல் விழைவன்;உகப்பன் ஏற்றினையே
...பணிவாம் திருவா னைக்கா ஏற்றினையே!

விளக்கம்:
சுந்தரேசனாய் மதுரைக் கூடலில், திருவிளையாடல்கள் புரிவான். அடியவர் உளமும் பக்தி நெறியில் ஒன்று கூடும்.

விதவிதமாய்(விறகுவெட்டி, கூலியாள், வளையல் வியாபாரி...போன்ற) வேடங்கள் ஏற்பதை
விரும்புவான்.(அடியருக்காக)தனக்குத் தேவையான உணவைப் பிச்சையாக ஏற்கும்
கையொடுள்ள முடைநாற்றமுள்ள பிரமகபாலம் கொண்டவன்.

குடும்பமே மலைவாசிகள்.(சிவன்,உமை,முருகன்) தயை செய்வது அவர்களின் இயல்பே
எனவே மலைத்து வியப்பதற்கொன்றுமில்லை.

அன்பர்களின் பாடலை விழைபவனாய் இடபத்தை வாகனமாய்க் கொள்வதில் மகிழ்பவன்.
அந்தத் திருவானைக்கா காளையைப் பணிவோம்.

அன்புடன்,
தங்கமணி.

Saturday, January 1, 2011

புதிய வருட நல்வாழ்த்துக்கள் !