Saturday, August 27, 2011

திருவிற்கோலம் (இக்கால ஊர்ப்பெயர் - 'கூவம்')

திருவிற்கோலம் (கூவம்) கோயில் விவரங்களுக்கு இங்கே காண்க:
http://temple.dinamalar.com/New.php?id=124

கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு.
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று
வாரா);

அம்பல மாடிடும் ஆடல் வல்லஎம்
சம்புவின் தாள்மலர் சாற்று நெஞ்சமே!
கும்பிடும் அன்பரின் குறைகள் தீர்த்திடும்
செம்பெரு மானுறைத் திருவிற் கோலமே....1

ஆர்கலி யாம்பவம் அடையல் நெஞ்சமே!
கார்முகில் என்னவே காக்கும் எம்பிரான்
ஏர்சிலை தோளினில் இலகும் வான்பிறை
சேர்சடை யானுறை திருவிற் கோலமே....2

ஆர்கலி =கடல்
சிலை=வில்.

ஆதியாய்ப் பாதியை ஆக மேற்றவன்
ஓதிடா மோனியை உன்னு நெஞ்சமே!
சோதியாய் ஓங்கியே தோற்றும் அம்பரன்
தீதிலா தானுறை திருவிற் கோலமே.

அம்பரன்=ஆகாயமாயிருப்பவன்....3

கவலையி லாழ்த்திடு கன்மத் தாலுறும்
அவதியும் அற்றிட அடைஎன் நெஞ்சமே
தவனமும் கொன்றையும் சடையில் சூடுமெம்
சிவபெரு மானுறை திருவிற் கோலமே....4

உரித்தவெம் மாஉரி உடுத்தி வெண்பொடி
தரித்தவன் தண்ணளி தனைஎண் நெஞ்சமே!
எரித்தவன் வேளினை எரியும் சினமிகச்
சிரித்தவன் தானுறை திருவிற் கோலமே....5

Saturday, August 20, 2011

இராமேச்சுரம் (இராமேஸ்வரம்)--- 2

உளிசேர் ஒலியாகி உளத்துள் வளரும்கற்
றளியே குடிலாகத் தங்கும் அருளாளன்
துளிவான் பிறைசூடும் துய்யன் அடியார்க்கே
எளியான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....6

தொடரும் வினைதீர்க்கத் துணையாய் வருமீசன்
விடமும் அமுதாக விழுங்கும் கறைக்கண்டன்
சுடரும் ஒளியாவன் தூயன் விழவூரும்
இடபன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....7

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும்
திருப்பா விசையாகச் செய்யும் துதிமாந்தி
இருப்பான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....8

கருப்பு=கரும்பு (வலித்தல் விகாரம்)

தொடுத்தான் புரமூன்றும் சுடுதீ அழலாக
விடுத்தான் வரையொன்றை வில்லாய்க் கணையோடு
மடுத்தான் இசைப்பாடல் மலர்தாள் நடமாட
எடுத்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....9

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே....10

Tuesday, August 16, 2011

இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

('மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)

சிம்மா தனமின்றி சிந்தை மகிழ்வாக
வெம்மா வனமேகும் மெய்யன் இராமன் தான்
அம்மா வினைதீர ஆர வழிபட்ட
எம்மான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....1

'மெய்சேர் பொடிபூசும் வேதன் அடிபோற்றும்
வெய்தாய் இராமன் தன் மிஞ்சும் வினைதீரச்
செய்தான் புரமூன்றும் தீயா கிடஅம்பொன்
றெய்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....2

வேசம் பலவேற்று விந்தை விளையாடல்
நேச முடன்செய்த நிமலன் அருளென்னே
பேச இனிக்கின்ற அஞ்சக் கரத்தானாம்
ஈசன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....3

சாந்து மணமேவும் தண்ணார் தமிழ்வேதம்
மாந்தி மகிழ்வாகும் மதியன் உமைபங்கன்
காந்தி ஒளிர்கின்ற கண்கள் அருள்தன்னை
ஏந்தி அமர்கோவில் இராமேச் சுரம்தானே....4

சாந்து=சந்தனம்.

கூற்றை உதைசெய்யும் கூத்தன் திருஞானப்
பேற்றை அருளாகப் பெய்யும் நிதியாகி
மாற்று நிறைபைம்பொன் மணியா யொளிர்கின்ற
ஏற்றன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....5

Monday, August 15, 2011

பாரதத் தாயே வணக்கம்!

அருமையான சுதந்திரத்தை அடைந்தவிதம் சொலப்போமோ?
ஒருமனதாய் இளைஞர்தம் ஊனுணர்வில் சுதந்திரமே
வருநாளின் நிச்சயமாம்,மாண்புதரும் விடுதலையே
கருமமென வேள்விதனில் தமையிழந்தார்!புகழ்பெற்றார்!

சிதைந்திடுதல் எண்ணாது செயலொன்றே குறியாக்கி
சுதந்திரமே மூச்செனவும் சொத்தெனவும் கொள்வதொன்றே
இதந்தருமாம்;கவிமொழியில் எடுத்துரைத்த பாரதியின்
பதந்தன்னைத் தொழுதுயர்த்திப் பாரேற்றப் புகழ்ந்திடுவோம்!

நூதனமாம் சாத்திரங்கள் நுவலுகின்ற நுட்பங்கள்
சாதனையாய் பெண்கல்வி சாதிக்கும் என்றுரைத்த
நீதிமன்னன் பாரதியின் நெஞ்சுநிறை வாக்குண்மை!
பேதமின்றி ஆண்பெண்ணும் பெற்றயிரு கண்ணன்றோ?

பாரதத்தாய் விலங்கவிழ்க்க பாரதிவான் முரசறைந்தான்!
வீரமிகு கவிமுழக்கி விடுதலைபெற் றோமென்றான்!
வேரதனில் நீரெனவும் வெல்லுகவி வண்மையினால்
நேரெதிரே சாவினையே நெஞ்சணைத்த வீரருண்டு!

சிறுமியென ஊர்வலத்தில் சென்றமுதல் சுதந்திரநாள்
உறுகின்ற உணர்வதனில் உத்வேகம் உண்டாச்சு!
பொறுப்புடைய அகிம்சையெனும் பொற்புடைய காந்திஜியால்
பெறுமிந்த சுதந்திரத்தில் பெருமிதமாய் நாடுயரும்!

துறவியரும் தியாகிகளும் தோன்றுமுயர் பாரதமாம்!
குறைவில்லா அறிவுவளம் குவிந்துள்ள நாடிதுவாம்!

மண்ணுள்ள நாள்மட்டும் மறவாமல் தீரர்புகழ்
பண்ணதனில் கவிதைதனில் வருமக்கள் உணரச்செய்வோம்!
கண்பனிக்க வந்தித்து கையுயர்த்தி வணங்கிடுவோம்!
விண்ணவரும் பூச்சொறிந்து வீரரையே வாழ்த்துவரே!

(சந்தவசந்தக் குழுவில் சுதந்திரதினம்(2007 வருடம்)நான் எழுதிய பாடல்.)


Monday, August 8, 2011

வானம் கூப்பிடு தூரமே!-- 2

வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6

நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7

கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8

குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.

சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9

கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10

Saturday, August 6, 2011

வானம் கூப்பிடு தூரமே!

"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.

கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1

மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2

ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3

வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.

நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4

மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.

அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5