Saturday, June 27, 2009

அஞ்சல் அருளும் ஐயா போற்றி!

1.அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கை தீர்க்கும் சதுரா போற்றி!

2.மோன நிலையில் மொழிந்தாய் போற்றி!
ஞான ஒளியே நாதா போற்றி!
தீன தயாள சிவனே போற்றி!
கான நடத்தில் களிப்பாய் போற்றி!

3.நீறு புனைந்த நிமலா போற்றி!
கீறு பிறையோய் கீர்த்தி போற்றி!
ஏறுடையவா  ஏற்றம் போற்றி!
மாறு முலகின் மன்னே போற்றி!

4.பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயன் நதோளி மணாளா போற்றி!
தோயும் அன்பின் துணையே போற்றி!
தாயும் ஆகும் தலைவா போற்றி!

5.ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!

6.மன்றுள் ஆடும் மகேசா போற்றி!
கன்றின் ஆவாய் காப்பாய் போற்றி!
என்றும் இலங்கும் இன்னருள் போற்றி!
என்றன் தேவே இறையே போற்றி!

7.செஞ்சொல் பரவும் சிவமே போற்றி!
விஞ்சும் நடம்செய் வேதா போற்றி!
அஞ்சல் அருளும் ஐயா போற்றி!
நஞ்சம் உண்டோன் நற்றாள் போற்றி!

Monday, June 22, 2009

உனையே கும்பிடுவேன்!

தண்ணார் பொழிலே! தண்தடமே!
...தவமாய் அருளும் சிற்பரனே!
பண்ணார் இசையில் நெஞ்சினிக்கப்
...பரவும் அடியார் தம்மிறையே!
கண்ணே! மணியே! கண்நுதலே!
...கனியே! சுவையே! தெய்வதமே!
விண்ணோர் அமிழ்தே! கற்பகமே!
...விகிர்தா! உனையே கும்பிடுவேன்!

Thursday, June 18, 2009

கவிதை ஊறும்!

கோலமயில் நடமாடி அழகை வார்க்கும்!
...குமரனவன் வாகனமாய் மனதை ஈர்க்கும்!
ஓலமிடும் கடலாடும் அலையும் மோதும்!
...உவகையினில் வேலவனின் புகழை ஓதும்!
சீலமிகு அடியாரின் தெளிவில் தோணும்
...சிவகுருவின் பார்வையெனும் ஒளியில் காணும்!
மாலவனின் மருகோனை மறையும் கூறும்!
...மனமுருகும் பக்தியினில் கவிதை ஊறும்!

Tuesday, June 16, 2009

நின் தாள் புகல்!


என்றென்றும் தீனர்க்(கு) இரங்கியருள் செய்திடுவாய்
என்றுன்னை வேண்டிநின்றேன் ஈஸ்வரியே!-- இன்றெங்கும்
காணுகின்ற தீங்குகளைக் கண்டும்நீ தீர்க்கவில்லை!
பூணுகின்ற நின் தாள் புகல்.

Tuesday, June 9, 2009

மன்று ளானை வேண்டுவம்!

இளம்பிறை அணிந்தவன் இரங்கிடும் பரஞ்சுடர்
...எந்தை அன்பை நினைந்தின்பு கொள்வமே
களம்கறை அணிந்தவன் கனிந்தருள் வழங்கிடும்
...கால காலன் பதந்தன்னை வாழ்த்துவம்!!
உளம்நிறை வடைந்திட ஒளிர்ந்திடும் திகம்பரன்
...உந்து பாத நடம்தன்னை ஏற்றுவம்!
வளம்தரும் அவன்துணை வரம்தரும் தினம்தொழ
...மன்று ளானை மனம்கொள்ள வேண்டுவம்!

வேசங்கள் உன்றன் விருப்பு.

வந்தியின் பிட்டுக்கு மண்சுமந்தாய்!உன் தோழன்
சுந்தரர் சொற்படி தூதுசென்றாய்!--எந்தையே!
ஏசல்கள், ஆடல்கள், எண்ணிடக் கூடுமோ?
வேசங்கள் உன்றன் விருப்பு.