Friday, September 5, 2008

அந்தி வரும் நேரம் !

அந்தியின் வெட்கமா, அழகிய கவிதையா
...அழகினை என்ன சொல்வேன்?
சிந்திடும் ரத்னமா, சிவந்தநற் பவளமா
...செறிந்திடும் செக்கர் வானம்?
செந்தழல் கோலமா, குங்குமக் கமலமா
...சிந்தையைத் தூண்டும் காட்சி?
சுந்தர மெகந்தியா, குல்மொகர் மலர்களா
...சொக்கிடும் மாலை நேரம்?


மாலையில் ஆநிரை மந்தையாய் வந்திடும்
...மணியொலி ஓசை கேட்கும்!
சோலையில் பறவைகள் சொந்தமாய்க் கூட்டினுள்
...சுகமுடன் பார்ப்பைக் கொஞ்சும்!
மாலையின் காட்சியும் மாறிடும் வானமும்
....மங்கலாய் சாம்பல் தோற்றம்!
ஆலயம் தொழுதெம் அன்பரும் வேண்டுவர்
...அகிலமும் நன்றாய் வாழ!

1 comment:

dhileep said...

அம்மா
கவிதை அற்புதம்
கண்டு நான் மகிழ்ந்தேன்
இலக்கண முறையும்
இலக்கிய நிரையும்
மனத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஊட்டுகிறது !

தொடரட்டும் உனது
தமிழ்ப் பணி.!

-திப்பிலி