Wednesday, December 19, 2012

இலம்பையங்கோட்டூர் -- 2

பாடிடும் அன்பரின் பாவலங்கல்
சூடிடும் அருள்நிதி தோன்றுமிடம்
தேடிடும் பொழில்மலர்த் தேனளிகள்
கூடிடும் இலம்பையங் கோட்டூரே....6

நளிர்மதி சடையனை நாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல் அருள்பவன் உறையுமிடம்
துளிர்விடு முகைமலர்ச் சுரும்பினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே....7

 நிசமவன் தீங்கினை நீக்கியன்பில்
வசமுற அருள்கிற வள்ளலிடம்
அசைவுறு வணம்குயில் ஆர்த்திடும்பண்
இசைமலி இலம்பையங் கோட்டூரே....8

பன்னகம் அணிபவன் பைந்தமிழில்
சொன்மலர் மாலைகள் சூடுமையன்
பொன்னவன் உறைவிடம் பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும் இலம்பையங் கோட்டூரே....9

திசையறி கிலாவெளித் திரிகோள்கள்
விசையுறு கதிசெல விதித்தவன்நல்
இசையது வானவன் இருக்குமிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே....10








Saturday, December 15, 2012

இலம்பையங்கோட்டூர்-- 1

இலம்பையங்கோட்டூர்
-----------------------------
('
விளம் விளம் காய்' - என்ற அமைப்பு.சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")

வார்சடை மீதொளிர் மதியுடையான்
சீர்மிகு பேர்தொழும் அன்பருளம்
சார்பவன் உறைவிடம் தண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே....1

விழிநுதல் உடையவன் வெவ்வினைசெய்
பழியினில் தொடரிடர்ப்  பார்த்தருளைப்
பொழிகுவன் உறைவிடம் பூஅளியார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே....2

கரும்பினை கரம்கொளும் காமாட்சி
விரும்பிடும் ஈசனும் வேண்டுவதைத்
தரும்பதி உறைவிடம் தண்ணளியார்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே....3

ஊர்விடை அமர்பவன் உண்பலிதேர்
ஓர்முடைத் தலையெனும்  ஓடுடையான்
நீர்மடை எனவருள் நெஞ்சனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே....4

தருஞ்சுக மவன்கழல் சாற்றுமன்பர்
பெருஞ்சுமை யெனும்வினை தீர்த்தருளும்
அருஞ்சுவைப் பேருடை ஐயனிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே....5





Thursday, December 6, 2012

திருக்கானூர் -- 5

 பொன்றும் காலம் வந்திடுமுன்
....புனிதன் தாளே கதியென்று
ஒன்றும் சித்தம் கொண்டன்பில்
....ஓதி உய்ய அடைநெஞ்சே
கன்றின் தாயாய்ப் பேணுபவன்
....கனிவாய் அருட்கண்  பார்த்திடுவான்
கொன்றை சூடி உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

ஆண வமெனும் மாசுதனை
....அகற்றி உய்வை அடைநெஞ்சே
வீண  டைவதோ இப்பிறவி
....விருதாய் மூப்பில் வருந்துவதென்
காணக் கண்செய் தவமாகக்
....கருணை தவழும் நுதல்விழியன்
கோணற் பிறையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10

Wednesday, December 5, 2012

திருக்கானூர் --4

காலக் கணக்குத் தவறாமல்
....காலன் வந்து நிற்குமுன்னே
மூலப் பொருளாம் முன்னவனின்
....முடி,தாள்  போற்றி அடைநெஞ்சே
சீலச் சுடராய்த் திகழ்கிறவன்
....தேடி அருளைத் தந்திடுவான்
கோலப் பிறையன் உறைகோவில்
....கொள்ளி  டஞ்சூழ் கானூரே....7

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்
....துன்பை எண்ணிக் கலங்காமல்
உடுக்கை ஒலியில் நடமாடும்
....ஒருவன் போற்றி அடைநெஞ்சே
எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட
....இணையில் அருளை வரமாகக்
கொடுக்கும் பெருமான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

Monday, December 3, 2012

திருக்கானூர் -- 3

சீரார் இளமை தேயபிணி
....தேடி வரவும்  இயமபடர்
ஓரா துயிரைக் கொள்ளுமுனம்
....உய்வை நாடி அடைநெஞ்சே!
காரார் கண்டன் கதியாகி
....கனிவோ டருளும் கழலனவன்
கூரார் மழுவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

தள்ளும் வயதில் தடுமாறித்
....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்
விள்ள முடியா வேதனையை
.... விட்டு விலக அடைநெஞ்சே
அள்ளும் மலரின் மணமாக
....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை
கொள்ளும் சடையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

தள்ளும் வயது என்றால்,
நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல்
'தள்ளும்'வயதான முதுமையில் என்ற பொருளில்.

திருக்  கானூர்