Friday, July 30, 2010

திருப்பாதிரிப்புலியூர்! -- 4

பனிபடரும் வெள்ளிமலை பணியவரும் தெய்வமவன்
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்
இனிதறியா அமண்தீயர் எறிதிரையிட் டாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே....7.

புகைகொண்ட எரிகானில் பொற்கழலன் நடனமதில்
அகலாத அன்புகொள்ளும் அடியவரின் அருளாளன்
பகைகொண்டார் நாவரசைப் பாழியிட்டும் அஞ்செழுத்தைப்
 புகலென்றே கரையேறு பாதிரிப் புலியூரே....8.

பாழி=கடல்.

Wednesday, July 28, 2010

திருப் பாதிரிப்புலியூர் -- 3


துணியாகும் பிறைதன்னை சுடர்மேவும் சடைசூடும்
மணிநீல மிடறுடையான் மனத்திருத்தும் ஆயிரமாம்
அணியான நாமமதற்(கு) அன்புடைய நாவரசர்
பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே....5

கணைவீசு மதனைத்தன் கண்ணுதலால் செற்றவர்க்கு
அணையாத அன்புகொண்டால் அருள்கின்ற ஈசனவன்
அணைகின்ற இறையன்பால் ஆழ்கல்லும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே....6

Tuesday, July 27, 2010

திருப் பாதிரிப் புலியூர்! --2


வான்பிறையும் கங்கையையும் வார்சடையில் அணிந்தவனாம்
மீன்விழியாள் உமைமகிழும் வெண்ணீற்றன் ஈமயெரி
கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப் பாதிரிப் புலியூரே....3

தொடர்வினைகள் தருதுயரைத் தொலைந்தோடச் செய்திடுவான்
சுடரொளிரும் நுதல்விழியன் சோதியெனும் அருள்பெருக்கில்
அடைவிக்கும் அரன்பேர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவரடைந்த பாதிரிப் புலியூரே....4

திருப்பாதிரிப்புலியூர் --1


(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

சரமாகப் பாய்கின்ற சகலவினைத் தொடரறுக்கும்
வரமாகத் திகழ்கின்ற வல்லவனின் அஞ்செழுத்தைத்
திரமாகும் கதியாகச் சிந்தைகொளும் நாவரசர்
பரனேற்றிக் கரையேறு பாதிரிப் புலியூரே....1

வாடியுளம் வெம்பவரும் வல்வினைகள் பொடியாகத்
தேடிவரும் அருளாளன் சீருரைக்கும் நாமமதைச்
சூடிமகிழ் சிந்தைகொளும் துய்யடியார் நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே....2

Sunday, July 4, 2010

அம்மானை!


கனல்கரத்தான் தீப்பறக்கும் கண்விழியான் வெந்தழலான்
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் அம்மானை!
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் ஆமாயின்
மனங்கொண்ட அன்பர் மலையாரோ அம்மானை!
முனம்வந்து ஆல்நிழல்கீழ் மோனமுற்றார் அம்மானை!

Saturday, July 3, 2010

முயற்சி!

துயிலா மனமொடு பயணம் செய்திடத்
...தொலைவாய் சென்றிடலாம்!
துயராம் தளர்வினை வென்றால் கிடைத்திடும்
...தொடராய் நன்மைகளே!
உயிராம் உணர்வினில் உதிக்கும் கருத்தினில்
...உயர்வாய் கவிபடைப்போம்!
அயரா முயற்சியில் வாய்க்கும் இலக்குமே
...அடைதல் கூடுமன்றோ?


(சந்தவசந்தக் குழுமத்தில் பயிற்சிக்காக முன்பு இட்ட
அறுசீர்விருத்தம்.)