Tuesday, December 1, 2009

அருணேசா! அருள்வாயே!

அண்ணா மலையே!அருணேசா!
...அருவாய் அழலாய் ஒளிர்வாயே!
பெண்ணாய் ஆணாய் அலியானாய்
...பிறைவான் நதிசேர் சடையானே!
விண்ணோர் உனையே துதிசெய்ய
...விடத்தை மிடற்றில் உடையானே!
பண்ணாய் இசையாய் இசைவோனே
...பாரி டமுய்ய அருள்வாயே!

Sunday, November 29, 2009

நிமலனே!உனைப் பாடுவேன்!

[புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
...புளிமா கூவிளம் புளிமா கருவிளம்]
(1-௫ மோனை)

முனைந்த வேதமும் விளங்க ஓதியும்
..முயன்று தேடியும் அறிந்தி டாதெம திறைவனே!
புனைந்த பூமலர் சுகந்த மேவிடப்
..பொலிந்த மாலையை அணிந்து காணுமென் தலைவனே!
வனைந்த ஊனிதைத் தொடர்ந்த ஊழ்வினை
..வருத்தி வாட்டுமென் றிரங்கி யாளுமெம் நிமலனே!
நினைந்த போதிலும் உணர்ந்த போதிலும்
..நிறைந்த வாறுளம் நெகிழ்ந்து பாடிட விழைவனே!

முனைதல்=முற்படுதல்
முனைந்த வேதமும்=முற்படும் வேதமும்
வனைந்த=உருவாகிய

Saturday, November 21, 2009

புடமிடு பொற்பில் புரிதவ யாக்கைக்
கடனென அம்மைக் கருதிடும் காட்சி
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்
நடமிடு கோலம் நயந்தளித் தானே.

(காரைக்கால் அம்மைக்கு ஈசன் அருள்செய்தது)

புடமிடு பொற்பில்=புடமிட்டப் பொன்னின் தன்மையில்
புரி தவ யாக்கை=செய்த தவத்தால் கிடைத்தப் பேய் யாக்கை,

"நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்" ஈசன் கூற்று.(சேக்கிழார்)
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்=சுடலையின் வெண்பொடிப் பூசிய
ஈசன்.
அம்மைக் கருதிடும் காட்சி = "அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருந்து,பாடி உன்நடம் காண வேண்டும் என்ற வேண்டுதலுக்கு இறைவன் "ஆலம்காட்டில் என்நடம் காண்!"என்று காட்டுவித்தார்.


அன்புடன்,
தங்கமணி

Wednesday, November 18, 2009

அவர்நமர்!

சிவமய மாகத் திகழுருக் கொண்டே
கவருறக் கொல்லக் கருதிடு வோனை
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்
அவர்நமர் என்பார் அருள்நினை மனமே!

(மெய்ப்பொருள் நாயனார் தன்னைக் கொல்லவந்த பகைவன்
முத்தநாதனுக்கும்
அருள்செய்தது)

திருமுறைப் பாடல்!

சிவமய மாக்கும் திருமுறைப் பாடல்
தவமுறைக் காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் நாட்டும்
அவனியை உய்க்கும் அருமருந் தாமே!

Monday, November 16, 2009

பெம்மானே!நம்பினேன்!

சோதித்தே ஆட்கொள்ளும் சூக்குமம்தான் நானறியேன்
போதித்தும் காத்திடுவாய் பூரணனே!-- பாதிக்கும்
துன்பவினை தீர்க்கும் துணையாவாய்! பெம்மானே
நம்பியுனைப் போற்றுமென் நா.

Wednesday, November 4, 2009

முத்தமிழ் வாழ்க


திரு.பசுபதி அவர்கள்,
புலவர்.குழந்தை அவர்களின் ஈற்றடியை வைத்து
ஓர் ஒன்பதின் சீரடி
விருத்தம் இயற்ற,பயிற்சியாகக் கொடுத்தார்.
அதற்கு நான் இயற்றிய விருத்தம் இது.


குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்

படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்

பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்

முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!

Wednesday, October 28, 2009

மதிசூடி துதிபாடி-2

ஆற்றையுன் செஞ்சடைக் கற்றையுள் வைத்தவா
நீற்றனென் றுன்னெழில் நெஞ்சினில் போற்றுவேன்
ஏற்றனுன் நாமமே என்றுமென் தாரகம்
சாற்றுகின் றேன்மலர்த் தாளினைப் பற்றியே!

Wednesday, October 21, 2009

மதிசூடி துதிபாடி!

பாதியன் வேதியன் பக்தரெம் நாயகன்
சோதியன் பேர்புகழ் சொல்லிடக் கூடுமோ
ஆதியென் றொன்றிலான் அந்தமென் றொன்றிலான்
நாதியென் பேனவன் நற்றுணைப் பாதமே!

நீலகண்டனை ஏத்து மனமே!-- 3.

நுரையுடன் தோன்றும் நீர்க்கு மிழியாகும் வாழ்வில்
...நுதல்மேவு கண்ணன் தொழுவாய்!
இரைதரும் பாறைக் குள்ளும் சிறுதேரை வாழ
...இயல்பாகும் ஈசன் அருளே!
விரைமலர் மாலை மார்பில் அணியாகக் கொண்டு
...வினையாவும் தீர்க்கும் பரமன்
வரைமகள் நேயப் பங்கன் ,மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!