Saturday, August 30, 2008

சதங்கைக் கொஞ்சிவரும் சித்திரமே!

சின்னவடி நடைபயிலும் செஞ்சதங்கை கொஞ்சிவரும்
...சித்திரத்தின் முதலாண்டு நிறைவுதனில்
தென்றலவள் பட்டணிந்துத் திரியுவண்ணப் பூச்சியெனச்
... சிரிப்புடனே வருகையிலோர் காட்சியதோ
பொன்னொளிரும் கற்பூரப் பூவொளியில், மணியொலியில்
...பூரணனைப் பெரியவர்கள் போற்றுமுன்னே
தன்னழகுக் கண்மூடித் தலைசாய்த்துக் கரங்குவிக்கும்
...தளிர்மழலைச் செய்கையினில் மனங்குளிர்ந்தேன்!

பொழிவினில்!

கண்களின் பொழிவினில் கரைந்திடும் துயரமும்
...கனியும் பக்தியும் தோன்றும்!
விண்ணதன் பொழிவினில் விளைந்திடும் பயிரெலாம்
...வேண்டும் வளங்களைச் சேர்க்கும்!
புண்ணியப் பொழிவாம் பொருள்பெறு சொற்களில்
...பொலியும் மாந்தரின் மாண்பு!
பண்ணியம் பொழிந்திடும் பரமனின் அருள்திறம்
...பாக்கள் மலர்களாய்ப் பூத்து!

அன்புடன்,
தங்கமணி.

Friday, August 29, 2008

கனவே.. கலையாதே...

கண்மூடிய கனவில்
கைக்கு கிட்டியவை..
எட்டாமல் ஓடியதேன்..
நிற்காமல் ... நிஜத்தில்..

கனவே.. நீ .. கலையாதே..
இமை எனும் கதவிலே.
.இழுத்து பூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை ..
காணாமல் போய்விடுவாயே .. நீ .. என்று

Wednesday, August 27, 2008

'முள்ளிள்ளா ரோஜா?' அல்லது 'வாழ்க்கை காசின் இரு பக்கம்'

மூடியிட்ட துன்பந்தான் இன்பம்போல் ஏமாற்றும்(கலீல் கிப்ரான்)
வாடுவதால் என்ன வாழ்க்கையா மாறிவிடும்?
தவிக்காமல் இன்பமதை தருவிக்க முடியாது
கரிக்காத உப்பேதும் உண்டோ?

திப்பிலி

காயம்.

வந்தாரும் போனாரும் இருந்தாரும் என்செய்வர்?
சொந்தம்பின் பந்தமென என்னாளும் இருந்திடுமா?
இறந்த பின்னால்தான் எரிந்திடுவாயென் நெஞ்ஜே,
இப்போதே உனக்கேன் ஆசைத்தீ மோகத்தீ?

கூடு போல் காயமிது குன்று போல் நின்றிடுமா?
ஆடுவான் ஒரு நாள் ஆண்டவனும் தாண்டவம்தான்.
ஆடிக்காற் றூழியில் அத்தனையும் பறந்து விடும்
கூடது மட்டுமிங்கே; வீடது செல்வது யார்?

குப்புறப் போட்டுவிட்டால் நிமிறாத ஆமை போல் நாம்.
குடும்பமும் சொந்தம் பந்தம் கும்பலாய் வாழ ஆசை.
உடும்பு போல் ஆசை பற்றி உண்மையை உதறி விட்டோம்

குடத்திலே அரிசி போட்டு குரங்கு போல் நம்மை ஆக்கி
இடக்காய் கை மாட்டிய பின் இக்கட்டில் சிரிப்பவன் யார்?

திப்பிலி

மனமென்றோர் மாயை!

மனத்தொடு ஒருமை குன்றின் மார்க்கமே வாயென்றாகும்
உளத்தொடு சமரச மின்றேல் உண்மைகள் உறிக்கப் படலால்
பேசுதல் தேடி நீவிர் பேதை போல் ஓடுகின்றீர்!
பேசுதல் தவிர்க்க வேண்டின், நீங்களும் உங்கள் மனமும் நிசப்தமாய் கூடல் வேண்டும்.
மௌனமே பரம நண்பன்; மௌனமே பரம சத்ரு.
மௌனமே பரம ஆசான்; மௌனமே உலக சாந்தி!
மனத்தொடு தர்க்கம் வேன்டாம்; மாயையைக் கிளற வேண்டாம்!

திப்பிலி

முதற்கவிதை.

அஞ்சற்க நெஞ்சே!
என்ன நடக்குமென் றேதுமறிகிலேம்.
ந்ன்மை பயப்பன நடக்குமென் றெண்ணுவேன்.
இன்றில்லையெனினும் என்றேனும் என்றேனும்.
யாவற்றுக்குமப்பால்,
கூதலிற் பின் வசந்தம் வாராது போகுமோ!

தென்னீச பிரான்.
(தமிழாக்கம் திப்பிலி)
A verse by Lord Tennyson.
(translated by me)

Behold,We know not anything;
I can trust that good shall fall,
At last - far off- at last, to all,
And every winter change to spring.

Saturday, August 23, 2008

கண்ணன் வந்தான்!

கண்ணன் வந்தான்!
-----------------
கண்ணன் தண்டையின் ஓசையில்
...கன்னங் குழிந்திடும் முறுவலில்,
எண்ணங் கவர்ந்திடும் சேட்டையில்,
...இன்பக் களியுறும் வையகம்!
கிண்ணம் நிறைந்திட வெண்ணையைக்
...கெஞ்சிக் கொஞ்சியே உண்ணுவான்!
பண்ணில் குழலிசை நாதமும்
...பாகாய் உருகிடப் பண்ணுவான்!
அன்புடன்,தங்கமணி.

Friday, August 22, 2008

பிள்ளையார் சுழி

வினாயகனே..

வினாயகன்.. வினை தீர்ப்பவன்..

விளையாட்டாய் ,சித்தி வினாயகனாய்
வலஞ்சுழியாய் வடிவு கொண்டு..
வருந்துயர் அகற்றுபவன்..

அழகன் ஆறு முகனை
ஆண்டியாக்கிய ஆனைமுகன்..
அம்மை அப்பனன்றி..
அவணி வேறில்லை என்றமகன்..

தடுக்கி விழும் இடமெல்லாம்..
தனியாக இருப்பான் அவன்..
தடுத்திடுவான்.. தடைகளை..
தவிக்க விடாமல்.. தன் பக்தர்களை!!!!!!!!!

உன்பாதம்.. தேடிவந்தேன்..
உள்ளத்து தூய்மையுடன்
ஊழ்வினைகள் தீர்ப்பாயே..
உமைமைந்தன் நீயுந்தான்..

அன்புடன்

அகிலா

Tuesday, August 19, 2008

இதயம் என் கோவில் !

எனக்கெனும் கோவிலென் இதயம்
...இறைவனுள் வாழ்ந்திட வருவான்!
மனத்திருள் மாசினை ஒழித்தே
...மலர்ந்திடும் அன்பினை வளர்ப்பான்!
வினைதரும் துன்பினை எளிதாய்
...விலக்கிநல் பாதையை அருள்வான்!
நினைப்பினில் மோனத்தை நிறைத்தே
...நிதமவன் பாதமே துதிப்பேன்!


என் 66ஆம் வயதில், சந்த வசந்தக் குழுமத்தில் மரபுக் கவிதைப் படிக்கும் ஆர்வத்தில் சேர்ந்தேன்.

ஆனால் கவிதை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது,அங்குள்ள சான்றோர்கள் பொறுமையுடன், அன்புடன் கற்றுத் தருகிறார்கள்!

இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சந்த வசந்தத் தலைவர் கவிமாமணி. திரு. இலந்தை அவர்கள், திரு. அனந்த் அவர்கள், திரு. பசுபதி அவர்கள், திரு. யோகியார் அவர்கள், இன்னும் பலர்!

இந்த அன்புச் சகோதரர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி

பானை பிடித்தவள் பாக்கியம்

அள்ளஎன்றும் குறையாத அன்புநிறைப் பொக்கிடமாய்
...அவனிதனில் வந்துதித்த தேவதையோ?
வெள்ளமெனத் துள்ளிவந்து வேகமுடன் வழிநடக்கும்
...விளைச்சலெனப் பயிர்தழைக்கும் பெண்ணதியோ?
கொள்ளையின்பக் கருணையிலே கொலுவிருக்கும் சக்தியைப்போல்
...குடும்பமதைக் காக்கின்ற குலமகளோ?
பிள்ளைகளும், கணவனுடன் பெரியவரும் போற்றுகின்ற
...பெண்ணிவளே பாக்கியத்தைப் பெற்றவளாம்!

Thursday, August 7, 2008

ஊனாகி உயிராய்..!


ஊனாகி உயிராய் ஊணாய் உணர்வாய் உருவாய் உதிக்கும் ஒண்பொருளே!
கானாகித் தருவாய் கனியாய் மலையாய் கதிராய் விளங்கும் கண்மணியே!
தேனாகிப் பாகாய் தெவிட்டாக் கன்னல் சாறாய் இனிக்கும் தெள்ளமுதே!
வானாகி வெளியாய் வளியாய் விரிவாய்க் கருணை தழைக்க வந்தருள்வாய்!

அன்பே நிறைவு..!

-------

ஓடுகிறோம் ஆடுகிறோம் உண்டயர்ந்து தூங்குகின்றோம்
வாடுகிற வாழ்வில் வருவதென்ன?--தேடியிங்குக்
கூடுமுயர் நன்மைபெறக் கும்பிடுவோம் தெய்வத்தை
நீடுலகில் அன்பே நிறைவு.

Monday, August 4, 2008

சிவன் , முருகன் துதி...!


சிவன் துதி
-----------
செஞ்சடையில் பிஞ்சுமதி சேர்ந்திலங்கும் கங்கைநதி!
அஞ்செழுத்தைச் சிந்தித்தல் ஆனந்தம்!--கொஞ்சுமெழில்
மஞ்சுதவழ் மன்னிமய மங்கையொரு பாகத்தன்
கஞ்சமலர்த் தாளிணையே காப்பு.
---------------

முருகன் துதி
--------------
செந்தமிழின் சந்தங்கள் சிந்துக்கள் விந்தைகள்!
கந்தனின் காவடிபோல் கண்ணிமைக்கும்--சந்நிதியில்
சிந்தைமகிழ் சுந்தரனை செந்தில்வேல் சண்முகனை
வந்திப்போம் நெஞ்சமதில் வைத்து.

Sunday, August 3, 2008

இன்பம்!

..
தென்றலினில் தலையாட்டிச் சின்னமலர் அசைவினிலே
...சிறுமழலை சிந்தும்பூஞ் சிரிப்பதின்பம்!
கன்றுதுள்ளிப் பாய்ந்தோடிக் களித்தாடி தனதனையைக்
...கனைத்தழைத்துத் தேடுகின்ற குரலதின்பம்!
குன்றதனில் தண்டுகொண்ட குமரனைதன் குருவெனவே
...கொண்டாடும் சிவனருளை நினைப்பதின்பம்!
என்றுமுள இயற்கைதரும் எழிலதனில் உளமுருகி
...இன்தமிழில் கவியியற்றித் திளைப்பதின்பம்!

அனை = அன்னை (இடைக்குறை)

அன்புடன்,
தங்கமணி.