Saturday, September 6, 2008

பிறிதொரு மரணம் !

(எனது உறவினர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புக்களின் ப்ரதிபலிப்பு (1988))

---------
பெற்று வளர்த்து நம்மை பெரியவராக்கும் தாய்.
கற்றுக் கொடுத்து குடும்பக் கலை வளர்க்கும் சுற்றம்
முற்றி முதிர்ந்து உடலும் முதுமையால் மாறும் தானாய்
இற்று விழுந்திடும் நாளை எதிர்பார்திருப்பாய் நீயும்.

பெற்று வளர்த்த பிள்ளை பேசிடுவான் 'கிழம் தொல்லை'
சுற்றிடும் மாயை தன்னில் சூதுவாதறியா மகனும்
பற்றது விட்டே மரணப் படுக்கையை தயாராய் வைப்பான்
பிற்பகல் அறியாதான்; முற்பகல் ஆடுகின்றான்!

மருத்துவரும் வந்திடுவார் 'மறு நாள் மாலைக்குள்
பருத்த உடலை விட்டே பறவையும் பறந்திடும்' என்றே
இறப்புக்கு நாள் குறிப்பார்;இவனும் கேட்பான் ' நாளை
இறக்காவிடில் என்று இறந்திடுவார்?' என்றே!

உயிரது பிரியும் முன்னே உண்மைகள் புரிந்து போகும்
மரணம் வரும் முன்னே மடிந்தது மனம் என்றாகும்.
உறவுகள் சுற்றம் எல்லாம் உன்னருகே சூழ்ந்து நின்று
பெருமைகள் பேசி அழுவர்; பிளந்தவாய் முதலைக் கண்ணீர்!

உயிரது பிரியும் நேரம் உடனே வாராதா என்று பாசக்
கயிரது தேடி அலைவாய்; கண்களில் வழியும் கண்ணீர்.
பேசுதல் நின்று போகும்;பார்வையும் மங்கிப் போகும்
சேற்றுழல் யானை போல சோர்ந்தது மனம் என்றாகும்.

மூச்சதும் நிற்கும் முடிந்தது கதையென் றறிந்து
காத்திடும் சுற்றமெல்லாம் கலங்குதல் போலக் காட்டும்.
அழு குரல்,கதரல்,கத்தல் அரற்றல் புலம்பலென்று
மறுபடி முதலைக் கண்ணீர்,மாண்ட பின் மாற்றமென்ன?

சாவது வந்த பின்னே சடங்குகள் பெரிதாய் நடக்கும்
ஆவது என்ன? பிரிந்த ஆவி தான் திரும்பி வருமோ?
கூவிடும் கோழி மறு நாள் கும்பலும் பறந்து போகும்
காடது வரையில் வந்த காயமும் பிரிந்த தாகும் !

திப்பிலி

2 comments:

Uma said...

Piridhoru PATTINATHTHAR!!!!!

Anonymous said...

மரணம் வரும் முன்னே மடிந்தது மனம்..........
பிற்பகல் அறியாதான், முற்பகல் ஆடுகின்றான்.....
ஒரு கடைசி காலத்தை கண் முன்னே காட்டி விட்டாய்!!
படித்து விட்டு ரொம்ப நேரம் உறைந்து விட்டேன்.
என்னை சிந்திக்க வைத்துவிட்டாய்!!