

மழையில் கலவம் மகிழ்வுற விரித்திடும்
...மஞ்ஞையின் நடனம் அழகு!
பொழிலில் மணமாய்ப் புதுப்புது நிறங்களில்
...பூத்திடும் மலர்கள் அழகு!
விழையும் உளமாம் வெளியினில் நிலைத்திடும்
...சித்தமும் மவுன அழகு!
இழையும் அணியும் இசைவுடன் இலங்கிடும்
...இன்னருள் குமரன் அழகு!
7 comments:
அழகென்றால் முருகனே!
அன்புள்ள கிரி!
ஆமாம்.அழகே முருகன்!
"அழகெல்லாம் முருகனே!" இந்தப் பாடலை
சூலமங்கலம் சகோதரிகள் பாடிக் கேட்டதுண்டு!
கருத்துக்கு நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
//கலவம் விரித்த மட மஞ்ஞை//
பொருநர் ஆற்றுப்படை!
அருமை!
ஓர் வினவல்:
இன்னருள் = இனிய + அருள்?
அன்புள்ள ஜீவா!
பொருநர் ஆற்றுப்படையில் அழகான ஒரு
எடுத்துக்காட்டு கொடுத்தீர்கள்! அருமை!
மிக்க நன்றி!
ஆம்.இன்னருள்=இனிய அருள் தான்."இன்னறு நீர்க்கங்கை"
"இன்னுயிர் தந்தெமை"என பாரதியும் பாடுகின்றார்!
மிக்க நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
அருள், எப்போதுமே இனிது அல்லவோ!
எதற்காக இனிய அருள் என குறிக்க வேண்டும் - என நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.
இலக்கியத்தில் பலரும், 'இன்னருள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!.
அனேகமாக - சந்தத்திற்காக அப்படிச் செய்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது!.
திரைப்பாடல் ஒன்று:
"இன்னருள் தரும் அன்னபூரணி..."
அன்புள்ள ஜீவா!
நீங்கள் கூறுவதுபோல சந்தத்திற்கும்
இசைகிறது!
இன்னருள் என்ற சொல்,
அருளைச் சிறப்பிக்க "இன்னருள்" எனக் கொள்ளலாமே!
"செஞ்ஞாயிறு" என்றால் ஞாயிறைச் சிறப்பிக்க
செம்மை ஞாயிறு என்பது போல! நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
//அருளைச் சிறப்பிக்க "இன்னருள்" எனக் கொள்ளலாமே!//
ஆம், அம்மா, நல்லது!
பண்புத்தொகை போலும்!
நன்றி!
Post a Comment