Thursday, October 30, 2008

முழுமுதலே!

நிறைசுடரோ நெறிமுறையோ
..நெகிழ்ந்துருகும் அருளமுதோ!
பிறைமதியோ பெருநிதியோ
..பெரும்புணையாம் இறைகழலோ!
தெறிகடலோ திரவியமோ
..தெய்வமதன் தெரிசனமோ!
முறையிடவோ முழுமுதலே!
..முற்றுமுனைப் பற்றிநின்றேன்!

மலர்தாள் தருவான்!

கனைகுரல் நிரையிடை தெரிகிறது
..கருணை அமுதாய் கறவை பொழியும்!
நினைவீனில் நிகழ்வினில் நிறைகிறது
..நெகிழும் பரிவில் உறவும் இனிக்கும்!
தினைதுணை பிறர்நலம் நினைத்துவிடின்
..திகழும் அமைதி உளத்தில் நிலைக்கும்!
வினைதனை விலக்கிடும் இறையவனும்
..விரும்பும் புணையாய் மலர்தாள் தருவான்!

பரமனின் பதமலரே!

கூடு கின்றனர் கும்பிடும் மனமொடு
...குவிந்திடும் இறையுணர்வில்
தேடு கின்றனர் திருவருள் அமுதினை
...தெளிவுறும் உள்நினைவில்
ஆடு கின்றனர் அகிலமும் புரந்திடும்
...அருமையை நினைந்தபடி
பாடு கின்றனர் பைந்தமிழ் பனுவலில்
...பரமனின் பதமலரை!

புரந்திடும்--காத்திடும்

Tuesday, October 28, 2008

உயர்க!

இரும்பி நுறுதி கொண்டு நெஞ்சின்
...ஏழ்மை வேர றுத்திடு!
துரும்ப நித்ய சஞ்ச லத்தை
...தொலைத்து வானை அளந்திடு!
விரும்பி ஏற்கும் பெருமையோ
...வெறுத்தொ துக்கும் சிறுமையோ
தெரிந்தி ரண்டும் ஒன்றாய்க் கொள்ளும்
...திண்மை யோடு யர்ந்திடு!

அன்புடன்,
தங்கமணி.

Sunday, October 26, 2008

தீபாவளி!

தீபாவளி!

தீபச் சுடரில் ஒளிரும்
...தேவி முகமே திகழும்!
தூபம் புகைந்து மணக்க
...துய்ய மலரால் தொழுதோம்!
பாபம் யாவும் அகற்றி
...பரிவாய் எவர்க்கும் அருள்வாள்!
தீப வரிசை விளங்கும்
...தீபா வளிநாள் மகிழ்வோம்!


அன்புடன்,
தங்கமணி.

Friday, October 24, 2008

உனதருள் பேறு!

உனதருள் பேறு!

பித்தா! என்றிடின் பெரிதுவந்(து)இறைவ!நீ
...பீடாய் தோழமை கொண்டாய்!
அத்தா! உன்றனின் அடிதொழ மறக்கிலேன்
...அன்பும் கருணையும் தாராய்!
நித்தா! நிர்மலா! நிதமுனை வேண்டினேன்
...நெஞ்சில் அமைதியை வைப்பாய்!
மத்தாய் சுழலுறும் மனிதரின் வாழ்விலே
...மங்கா துனதருள் பேறாம்!

Wednesday, October 22, 2008

இனிக்கும் மழலை!

சின்ன அடி சிவக்க ஆடும்
...சேயின் சிரிப்பு மனமயக்கும்!
மின்னுகின்ற நயனம் கூறும்
...மீனும் மானும் நிகரிலையே!
கன்னலெனும் சுவையில் ஊறும்
...காதில் இனிக்கும் கனிமழலை!
பின்னமாகும் என்றன் ஆவி
...பிஞ்சு மனதைக் கொஞ்சிடவே!

Monday, October 20, 2008

உருகுதல்!

கருணை யிலுருகும் மனது!
...கருத்தி லுருகிடும் கவிதை!
அருமை யிலுருகும் உறவாம்!
...அழகி லுருகிடும் இயற்கை!
முருகி லுருகிடும் மொழியே!
...முகிலி லுருகிடும் மழையே!
திருவி லுருகிடும் நினைவு!
...தினமும் உருகிடும் உயிர்ப்பு!

ஏன்?

ஏன்?

சின்ன வயதினில் சிரித்திடும் வாழ்வினில்
...சேர்ந்தே கூடி மகிழ்ந்ததுமேன்?
பின்னர் வறுமையின் பிடிதனில் மூழ்கியே
...பீழையாகிப் போனதுமேன்?
இன்னல் வளர்ந்திடும் ஏழ்மையில் உறவுகள்
...எங்கோ காணோம் என்றதுமேன்?
என்ன நினைவுகள்! எத்தனை நிகழ்வுகள்!
...இன்று காலம் மருந்தாகும்!

Thursday, October 16, 2008

ஊட்டி மலையில்...

ஊட்டி மலையில் விரைவுவண்டி
...ஊர்ந்து வளைவில் தொடர்கிறது!
வாட்டும் குளிரில் மழலையுடன்
...மங்கை ஒருத்தித் தவிப்பினிலே!
சாட்டும் வறுமை தெரிகிறது!
...சால்வை கொடுத்துக் குளிர்குறைத்தேன்
காட்டும் விழிநீர் அவள்நிலையை;
...கரங்கள் குவித்தாள்! இறைநினைந்தேன்!

உனையே பாடும் வரம்தருவாய்!

கண்ணால் காணும் பொருளாய்
...காட்சி அருளும் ஒளிப் பிழம்பே!
தண்ணார் புனலாய் வளியாய்
...தரணி காக்கும் பரஞ்சுடரே!
விண்ணோர் பரவும் விடையூர்
...விமலன் அருணா சலசிவமே!
பண்ணார் இசையில் உனையே
...பணிந்து பாடும் வரமருள்வாய்!

Monday, October 13, 2008

செய்தொழிலில் சிகரம்!

களிகொண்ட உள்ளத்துள் கற்பனைகள் சிறைப்பட்டு காவியமாய்,
...கவிஞனென உயர்ந்தான்!
உளிகொண்ட சிற்பங்கள் உன்னதமாய் உறுகல்லில் வெளிப்படவே
...உயர்சிற்பி படைத்தான்!
வெளிதன்னில் விஞ்ஞான வேள்வியென்றே விளைவுகளை உலகினுக்கு,
...விஞ்ஞானி அளித்தான்!
தெளிவுடனே அவரவரின் திறமையுடன் உழைப்பைநல்க செய்தொழிலில்
...தெரிந்திடுமே சிகரம்!

Sunday, October 12, 2008

பேறு!

பேறு!

கவிதையில் திளைப்பது பேறு!
..கவினுறு நவரசம் பேறு!
செவிநுகர் செல்வமோர் பேறு!
..சிறப்புறு கல்வியும் பேறு!
குவிந்திடு மனமுமோர் பேறு!
..கொண்டிடும் பக்தியும் பேறு!
தவிப்பினில், தளர்வினில் தாயாய்---தாங்கும்
..தனிப்பெரும் இறையருள் பேறே!

Saturday, October 11, 2008

பாட்டியின் சிரிப்பு!(படக் கவிதை)

பாட்டியின் சிரிப்பு!(படக் கவிதை)

தொடரும் துயரமதைத் துணிவாய்த் தொலைத்துவிட
...துணையாய் உழைப்பினையே சுவாசமாய்
படரும் விடியலிலே பசுமை வயலினிலே
...பதமாய் மேழிதனைச் செலுத்துவாள்!
இடரும் விலகிவிடும் இளைஞன் பேரனவன்
...இசைவாய் உழவியலைப் பெருக்குவான்!
படமாய் அவள்சிரிப்பு பார்க்க மனம்நிறையும்
...பனியாய் வெள்ளைநகை பரவசம்!

Tuesday, October 7, 2008

கலைமகள் துதி!


கலையரசி பெறவரிய கலையறியத் தருவாய்!
நிலைபெறுமுன் திருவருளில் நிறையுமனம் அருள்வாய்!!
உலைவிலையென் றொளிருமுனை உணர்வதனில் பதித்தேன்!
இலையெனமுன் வினையொழிய இணைமலர்தாள் துதித்தேன்!

Sunday, October 5, 2008

அன்னையின் தண்ணளி நிறம் பசுமை!

பச்சை பசுமையில் சூழ்வயல் தோற்றிடும்
...பாங்கினில் நெஞ்சமும் துள்ளும்!
இச்சை மொழிசொலும் பைங்கிளி வண்ணமும்
...எண்ணிட இன்பமே கொள்ளும்!
விச்சை மரகத வண்ணமும் அன்னையின்
...மின்னிடும் தண்ணளி அள்ளும்!
மெச்சும் செழுமையும் பச்சையின் வண்ணமாய்
...மேன்மையைத் தந்திடக் கொள்வோம்!

Wednesday, October 1, 2008

இயற்கை எனும் எழில்வரம்!

சிறைவிரிக்கும் பறவை செறிந்திலங்கும் தருக்கள்
...திரையலைக்கும் நதிகள் சிறப்பாகும்!
உறைபனியின் குளிரும் ஒளிபொழியும் நிலவும்
...ஒழுகருவி நடையும் சிலிர்ப்பாகும்!
முறையியைந்த நெறியில் உலகமுடன் யுகமும்
...முரணின்றி சுழல்தல் வியப்பாகும்!
இறையழகை இயற்கை எழில்வரமாய் விளக்கும்
...இனிமையினில் உணர்வும் உயர்வாகும்!