Tuesday, May 29, 2012

எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா) --2

பெறுபவற்றுள் பெரிதவன்சீர் பேறாகப் பாடுபவர்
அறுவினையும் தீர்க்கின்ற ஐயனவன் அமருமிடம்
மறுவறு மணமலர்த்தேன் மாந்துகிற வண்டினங்கள்
உறுபொழில்கள் மஞ்சுவரை உயரானைக் காநகரே....6

அழுதவனை சிந்திக்கும் அன்பரிடர் யாவையுமே
நழுவியகல் வழிசெய்வான் நம்பனவன் அமருமிடம்
கொழுமலரில் தேனருந்தக் கூடுமளி முரலுமொலிக்
கெழுமுகிற பொழில்சூழும் கேடிலா.னைக்காவே....7

கண்ணீரில் ஆணவமும் கரையவழும் இராவணனின்
பண்ணாரும் மறைகேட்கும் பரமனவன் அமருமிடம்
வெண்ணீறு மெய்பூசி விரிசடையன் புகழ்பாடி
மண்ணோர்கள் அடைகின்ற மணிஆனைக் காநகரே....8

நன்றினையே நவகோளும் நல்கிடவும் செய்தருள்வான்
அன்றயன்மால் அறியரியான் அழலானான் அமருமிடம்
நன்மலரில் தேன்மதுவை நாடிமுரல் அளியினங்கள்
பன்மலர் ஆர் பொழில்சூழும் பதிஆனைக் காநகரே....9

பித்தனவன் எரியாடும் பேயனவன் தயைசெய்யும்
நித்தனவன் பவமழிக்கும் நிமலனவன் அமருமிடம்
புத்தலர்கள் மலர்ந்திருக்கும் பூவனத்தில் வண்டினங்கள்
தெத்தெனவென்(று) ஆர்த்திருக்கும் திருவானைக் காநகரே....10

Wednesday, May 23, 2012

ஆனைக்கா! (திருவானைக்கா

எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா)
------------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

ஒருமன்றில் நட்டமிடும் உமைகேள்வன் மதியுறையும்
மருள்விளைக்கும் மயல்நீக்கும் மதிசூடி அமருமிடம்
பருகென்று பொன்னியன்னை பசுமைநிறை காட்சியள்ளித்
தருகின்ற வயல்சூழும் தண் ஆனைக் காநகரே....1

வெருவவரும் வினைத்தளையை விடுவித்து நலம்சேர்க்கும்
அருளுருவில் திகழ்வோனாம் அம்பலத்தான் அமருமிடம்
திருவடியைப் போற்றிடவே தேடிவரும் பொன்னிநதி
அருகடையும் அழகுடைய ஆனைக்கா நகர்தானே....2

அப் புரங்கள் மூன்றினையும் அனலெரிக்க நகைத்தவன்நம்
ஒப்பரிய அப்பனவன் உமையோடும் அமருமிடம்
எப்புறமும் இருளெனவே நிழலடர்ந்த பசுமரங்கள்
செப்பரிய எழிலாரும் திருவானைக் காநகரே....3

ஆல்தருவின் நீழலிலெ அருள்மோன குருவவனை
நால்வகையாம் மறைபுகழும் நம்பனவன் அமருமிடம்
பால்நுரையாய்ப் பொன்னிநதி பாய்வாய்க்கால் வயலூடே
சேல்பாயும் வளம்சேரும் திருவானைக் காநகரே....4

 சஞ்சலத்தை நீக்கியருள் தஞ்சமதைத் தந்தருளும்
குஞ்சரத்தின் தோலுடையான் கூத்தனவன் அமருமிடம்
அஞ்சுகயல் விழிமாதர் அளைந்தாடும் காவிரிபால்
மஞ்சடையும் பொழில்சூழும் மணிஆனைக் காநகரே....5

Sunday, May 13, 2012

திருச்சோற்றுத் துறை!-- 2

வாழ நிலையாம் வழிகாண் பதுவே
தாழ விரிசெஞ் சடையன் தொழுதல்
சூழ வருமூழ்த் தொலைப்பான்;அடியார்த்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே....6

வேத வடிவில் விளங்கும் பரமன்
நாத வெளியில் நடனம் புரியும
பாதன்;நடையாய் பரவை யிடம்செல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே....7

உடுப்பான் புலித்தோல் உடையாய்; கைலையை
எடுத்தான் வலியோ டிசைப்பான் மடுப்பான்
கொடுப்பான் அருளை கொடிய வினையைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே....8
 
உரியான் அடியார் உளமே தளியாய்ப்
பரிவான் எளியர் படுதுன் பகலப்
புரிவான் தயையைப் பொழிவான் அருளாய்ச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே....9
 
 உண்டன் புநிறை ஒருவன் கறையார்
கண்டன் அருளும் கழலார் பதத்தான்
அண்டும் வினைகள் அகற்றும் நிலவுத்
துண்டன் பிரியான் சோற்றுத் துறையே....10

Wednesday, May 9, 2012

திருச்சோற்றுத்துறை!-- 1

திருச்சோற்றுத்துறை
----------------------------------

கலிவிருத்தம். 'மா புளிமா புளிமா புளிமா' என்ற வாய்பாடு.
ஒரோவழி தேமா வரும்.
 
கல்லால் தனுசால் கனிவில் வசவால்
எல்லா இடரும் எளிதாய்ப் பொறுப்பான்
வல்லான் குருவாய் வருவான் அறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே....1
 
எடுதாள் நடம்செய் இறையைத் தொழவே
அடுதீ வினையும் அகன்றோ டிடுமே
நெடுமூ வெயிலை நெருப்பாய் விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே....2

கணையார் மதனைக் கடுகிப் பொடித்தான்
இணையாம் வினையின் இடரைக் களைவான்
அணைவான் எளியர்க் கருள்வான் அடியார்த்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே....3

ஆல மமுதாய் அருந்தும் அருளன்
பாலன் இடரை பரிவாய் தீர்க்கக்
காலன் நடுங்கக் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே....4

நாடித் தொழுவார் நலிவும் அகல
ஓடி வருவான் உவந்தே அடியார்
ஆடி டுமெழில் அடிபா டலங்கல்
சூடிப் பிரியான் சோற்றுத் துறையே....5

Saturday, May 5, 2012

அருளாய் அறம்வளர்த்த நாயகியே!-- 2

வாரணநன் முகத்தானை மகனாகப் பெற்றவளே
நாரணனின் சோதரியே நலியவைக்கும் வினைதீராய்
தோரணமும் கட்டிநறுந் தூபமுடன் மலர்தூவி
ஆரணங்கே அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....6

சோதியுயர் அழலாகத் தொழுமன்பர்க்(கு) அரியானின்
பாதியுனைப் பணியுமன்பர் பாவினிலே உறைபவளே
மோதியெமை தாக்குகின்ற மூள்வினையை போக்கிடுவாய்
ஆதியுனை அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....7

பாலகனின் பயம்தீரப் பாய்ந்துவந்து சினத்தோடு
காலனையே உதைசெய்த காலனவன் கண்மணியே
ஓலமிட வருமிடர்செய் ஊழ்வினையைப் போக்கிடுவாய்
ஆலமுண்டான் பங்கிலுறை அறம்வளர்த்த நாயகியே....8

வெங்கடம்சேர் துஞ்சினார் மேனிலைக்காய் ஆடுபவன்
திங்களையும் கங்கையையும் சென்னிதனில் சூடியவன்
பங்கிலுறை பூரணியே பாரமிகு வினைதீராய்
அங்கயல்போல் கண்ணுடையாய் அறம்வளர்த்த நாயகியே....9

மையாரும் வேல்விழியாய் மஞ்சிமய மங்கையுனை
கையாரக் கும்பிடுவேன் காய்வினையைத் தீர்த்தருளாய்
பையாரும் விடவரவம் படர்மார்பன் பங்குடையாய்
ஐயாறோ டொன்றொடொன்றாம் அறம்வளர்த்த நாயகியே....10