Thursday, October 25, 2012

உனை நினைத்திடும் அகத்தினை அருள் (திருக்கழுமலம்)

 'தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
  தனத்தன தனத்தன .. தனதான' 


அரிக்கிற வினைத்தொடர் அறுத்திடு திறத்தஉன்
...அடித்தொழு பவர்க்கருள் ..புரிவாயே
கரிக்கிற விழித்துளி அருச்சனை எனப்பெறு
...கரத்துடை பலிக்கலன் ..உடையோனே
தரிக்கிற பொடித்துகள் தளர்ச்சியை விடுத்திடும்
...சடைத்தலை வனப்புடன் ..மிளிர்வோனே
சிரிக்கிற முகத்தொரு விழிச்சுடர் படைத்தவ
...திருக்கழு மலத்துறை .. பெருமானே! 



மயி லாடுது றை--- 2


முந்தாவணம் ஊழ்வினை முற்றுமே நீங்கத்
தொந்தோமென ஆடிடும் துய்யவன் ஊராம்
கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5


நோவாய்வரும் ஊழினை நூக்கியே மாய்க்கும்
சேவூர்பவன் ஊண்பலித் தேர்பவன் ஊராம்
தூவார்மலர்த் தேனுணும்  தும்பிகள் பாடல்
ஓவாப்பொழில் ஒண்மயி லாடுது றையே....6

தூ+ஆர்=தூவார்
தூ=தூய்மை
நூக்குதல்=தள்ளுதல்

மீண்டும்கரு வாயுரு மேவிடேன் என்று
வேண்டும்சிவ பத்தரின் மெய்யிறை ஊராம்
தூண்டும்கவின் வான் தரு தொட்டுயர் திங்கள்
தீண்டும்பொழில் தென்மயி லாடுது றையே....7 


தூண்டுகிற எழிலுடைய வான் திங்களை உயர் தரு
தொட்டுத்தீண்டும் பொழில் என்று கொண்டுகூட்டிப்
பொருள் கொள்ளவேண்டும்.

 
கண்டார்பிணி தீர்த்திடும் கண்ணுதல் ஆடல்
கொண்டாடிடு வார்க்கருள் கூட்டுவன் ஊராம்
தண்டாமரைப் பூவினில் தங்கியே தேன் தேர்
வண்டார்பொழில் மாமயி லாடுது றையே....8


நீரானவன் தீவளி நீள்விசும் பாகிப்
பாரானவன் அன்பரின் பற்றவன் ஊராம்
ஏராழ்வயல் நெற்கதிர் எங்குமே சாய்ந்து
சீரார்கிற தென்மயி லாடுது றையே....9


பிட்டேயுணக் கூலியாய்ப் பேதைமுன் வந்து
பட்டானடி அன்பருள் பண்பினன் ஊராம்
மொட்டாயலர்ப் பூவளி  மோதியே பாடும்
மட்டார்பொழில் மாமயி லாடுது றையே....10 

Monday, October 22, 2012

மயிலாடுதுறை-- 1

(தேமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா)

தெம்போடரன் ஆடிடும் சீர்கழல் எண்ணி
சம்போவெனும் அன்பரைத் தாங்குவான் ஊராம்
செம்போதலர் தேனுணச் சேர்ந்தளி ஆர்க்கும்
வம்பார்பொழில் மாமயி லாடுது றையே....1

அஞ்சேவடி பாடிடும் அன்பரை உய்க்கும்
பிஞ்சார்பிறை சூடிய பிஞ்ஞகன் ஊராம்
செஞ்சேலுகள் நீர்வயல் சீருறக் காணும்
மஞ்சார்பொழில் மாமயி லாடுது றையே.2

தானாயவன் வந்தருள் தந்திடும் நேயன்
மீனார்விழி மாதவள் மேயவன் ஊராம்
தேனார்குயில் கூவிடும் செவ்விசை சூழும்
வானார்பொழில் மாமயி லாடுது றையே....3

ஐந்தாகிய அக்கரன் அஞ்சலைத் தந்து
நைந்தார்வினை நீக்கும் நம்பரன் ஊராம்
பைந்தேனுணும் வண்டினம் பண்ணொலி ஆர்க்கும்
மைந்தார்பொழில் மாமயி லாடுது றையே....4

முந்தாவணம் ஊழ்வினை முற்றுமே நீங்கத்
தொந்தோமென ஆடிடும் துய்யவன் ஊராம்
கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5

Tuesday, October 9, 2012

சண்பை நகர் (சீகாழி) --- 2

நாவும் மொழியும் நம்பன் திருப்பேரை
பாவும் பாடப் பத்தர்க் கருளூராம்
கூவும் குயில்தேன் குரலில் மகிழ்மந்தி
தாவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....6

சேரும் வினையைத் தீர்க்கும் அருளாளன்
ஊரும் விடையன் உறுநர்க் கருளூராம்
தேரும் சுவையின் தேனார் மலர்வண்டு
ச்
சாரும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....7


சித்தம் தெளியும் செம்மை மருந்தான
அத்தன் அன்பால் அடியர்க் கருளூராம்
பத்தர் பரவும் பாவை நிதம்கேட்கும்
தத்தை தமிழ்சொல் சண்பை நகர்தானே....8


வாமம் தன்னில் மங்கை யுடையானின்
நாமம் பலவும் நவில்வர்க் கருளூராம்
தூமென் மலர்த்தேன் சுவைக்கும் அளிகூடிச்
சாமம் பாடும் சண்பை நகர்தானே. ...9

தாயும் ஆன தந்தைக் கழலெண்ணித்
தோயும் அன்பில் தொழுவர்க் கருளூராம்
பாயும் சிட்டுப் பற்றும் கொடியாடச்
சாயும் பொழில்சூழ் சண்பை நகர்தானே. 

Tuesday, October 2, 2012

சண்பை நகர் (சீகாழி) -- 1

சண்பை நகர் (சீகாழி)
------------------------------
(மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு) 


அழுது நெகிழ்வர்க் கணுக்கன் மதிசூடி
தொழுது மகிழத் துணையென் றருளூராம்
எழுமின் னிசையை ஏந்தித் தவழ்தென்றல்
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....1


அணுக்கன்=அண்மையில் இருப்பவன.

பொங்கும் அழலாய்ப் பொலியும் மலைஈசன்
பங்கம் தீர்த்துப் பரியும் அருளூராம்
தெங்கின் கீற்றில் செழுமைக் கிளியாடித்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....2


தீங்கும் அழிப்பான்  சீரார் மணிகண்டன்
தேங்கும் அன்பில் தேடி அருளூராம்
ஓங்கும் மரங்கள் உயர்ந்து முகில்மோதித்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....3


துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன்
பவள வண்ணன் பத்தர்க் கருளூரான்
தவளை ஒலிக்கச் சாரல் சொரிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....4 


சடையன் முடையார் தலையில் பலிதேரும்
நடையன் துதியில் நனைந்தின் பருளூராம்
தடையின் றுயர்ந்த தருக்கள் முகில்மேவித்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....5