Friday, March 30, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) -- 4

7)
பொருத்த மான சதங்கை கழலில் பொலிய ஒலிசெய்தாள்
வருத்தும் வினைசெய் நோயைத் தீர்க்கும் மருந்தா கிடும்பொற்றாள்
கருத்தில் என்றும் நிலையாய் நின்று காக்கும் வரமாம்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன் தாளே.
8)
தலையில் அரவு கொன்றை மதியும் தாங்கி அருளும்தாள்
அலையும் மனத்தை அடக்கி அருளில் அணைக்கும் புனிதத்தாள்
கலையும் கனவாம் உலக வாழ்வை கதியில் செலுத்தும்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன் தாளே.

Wednesday, March 28, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --௩

5)
துண்டப் பிறையும் விண்ணின் நதியும் துலங்கும் அணியாகக்
கண்டு நிகர்த்த மொழியாள் உமையின் காந்தன் நடம்செய்தாள்
செண்டு மலர்த்தார் சூட்டி அடியார் சிந்தை குளிரும்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன் தாளே.
6)
கன்றிச் சிவக்கத் தெருவில் விறகுக் கட்டைச் சுமக்கும்தாள்
தொன்று கைலையில் அம்மை பாடத் தூக்கி நடம்செய்தாள்
மன்றில் சக்தி நாணும் படியே வாகாய் உயர்பொற்றாள்
அன்று தூதாய் நண்பர்க் கலைந்த ஆரூர் அரன் தாளே.

Saturday, March 24, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --2

3)
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே.
4)
பாவை புனித வதியாம் அம்மை பற்றிப் பரவும்தாள்
கோவை கைலை வெற்பில் ஆடல் குறித்தே பணியும்தாள்
நாவை பழக்கி அஞ்சக் கரத்தை நவில வினைசெய்நோய்
யாவை யும்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன் தாளே.

Thursday, March 22, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --1

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்)
----------------------
(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')

1)
பூக்கும் மலர்கள் பொலிய இலங்கும் பொற்றாள் வினையாவும்
தீர்க்கும் அடியார்க் கருளை சேர்க்கும் திருத்தாள் எரிகானில்
சேர்க்கும் லயத்தில் துடியார் நடமே செய்தாள் புகழ்சேர்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே.
2)
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தர்தாம் சாற்றித் தொழும்நற்றாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே.

Saturday, March 17, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை) -- 2

வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே....6

மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே....7

நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே....8

விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே....9

விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே....10

Saturday, March 10, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை) --1

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
---------------------------------
(1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர்
அமைந்துவரப்பெற்றது)
('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்
மழுவாட் படையன் கயிலை மலையானே....1

சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்
கங்கை அணிவான் கயிலை மலையானே....2

செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே....3

காம,குரோத,மோக,லோப,மத,மாச்சர்யம் என்னும்
ஆறுவகை எதிரிகள்.

தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே....4

உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே....5

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.

இராவணன் அகம்பாவத்தில்,கைலைமலைப் பெயர்க்க
முயல்வதை,அறிந்த ஈசன்,தன்கால்விரலாலழுத்த,
இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான்.
ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு,சந்திரஹாசம் எனும் வாளை
அளித்தார்.

Monday, March 5, 2012

திருக்கூடலையாற்றூர்!--2

வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே....6

வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே....7

காளமும் அமுதென்றுண் கறைமிட றுடையானும்
நீளவெந் துயர்செய்யூழ் நீங்கிட அருள்தந்துத்
தூளவை யெனதீர்க்கும் தொண்டரின் துணையாவான்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே....8

எங்குளன் இறைவன் தான் என்றவன் அருள்தேடின்
தங்குவன் உளம்தன்னில் தாங்கிநம் வினைதீரப்
பொங்கிடும் தயைசெய்வான் பொலிவுறும் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே....9

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே....10

Saturday, March 3, 2012

திருக்கூடலையாற்றூர்-- 1

கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
...............................................................

ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே....1

மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே....2

நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே....3

தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே....4

கான்=காடு
பல்வகை நிலைகாணும் பத்திசெய் வழிதன்னில்
வெல்வழி இறைதாளை விட்டிடா நினைவாகும்
வல்வினை அகன்றோடும் வாழ்வினைத் தருமீசன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே....5