Wednesday, March 20, 2013

திருநீலக்குடி--- 2

 எல்லா மவனாய்  எங்கும் நிறைந்தானைச்
சொல் ஆர்  தமிழ்ப்பாத் துதியால் தொழுதேத்தும்
நல்லார் துணைவன் நந்த வனமோடு
நெல்லார் வயல்சூழ் நீலக் குடியாரே....6

 கழலார் திருத்தாள் கதியாய்ப் பணிவாரின்
சுழலார் வினையின் துன்பை தீர்க்கின்ற
அழலார் கரத்தர் அஞ்சல் அருள்கின்ற
நிழலார் சோலை நீலக் குடியாரே....7

ஒற்றை யாக  உடுக்கை ஒலியோடு
கற்றைச் சடையர் கானில் நடம்செய்யும்
உற்ற வரிவர் உறுநர்த் துணையாவார்
நெற்றி விழியர் நீலக் குடியாரே....8

 உறுநர்= தொண்டர்.

கூடும் அன்பில் கூம்பும் கரமோடு
சூடும் மலர்த்தாள் தொழுவார்க் கருள்செய்வார்
நாடும் முடிதாள் அயன்மால் அறியாது
நேடும் சோதி நீலக் குடியாரே....9


விஞ்சும் பரிவில் வேண தருள்வாரைத்
தஞ்சம் எனத்தாள் தன்னைத் தொழுமன்பர்க்(கு)
அஞ்சல் என்றே அந்த கனைச்செற்று
நெஞ்சில் உதைத்தார் நீலக் குடியாரே....10

Friday, March 15, 2013

திருநீலக்குடி--- 1

 திருநீலக்குடி.
('மா மா மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.)

தீயர் கல்லில் சேர்த்துக் கடல்தள்ளத்
தூய .னவன்பேர் துணைகொள் அடியாரைப்
பாய லைதனில் கலனாய் அருள்செய்யும்
நேயம் உடையார் நீலக் குடியாரே....1

நனைசேர் பூக்கள் நாடிப் பதம்சூட்டிப்
புனைவார் பூந்தாள் புனிதத் திருநாமம்
வினைசேர் கடலில் மீட்கும் கலனாக
நினைவார்க் கினியார் நீலக் குடியாரே....2
நனை=தேன் எனும்பொருளில்.

கன்றின் தாயாய்க் கனியும் அருளாளர்
மன்றில் ஆடும் மலையர் திருநாமம்
ஒன்றும் உளமோ டுன்னத் துணையாக
நின்று காப்பார் நீலக் குடியாரே....3

பதியாய் உமையோர் பங்கில் உடையாரைச்
சுதியாய்ப் பண்ணில் துதிக்கும் அடியாரின்
கதியாய் நின்று கருணை நிறையன்பின்
நிதியாய் வருவார் நீலக் குடியாரே....4

ஆரார் உறவார் அறிவார் உனையன்றி
வேறார் அருள்வார்  விமல வெனப்போற்றும்
சீரார் அடியார் தெய்வம் கயல்துள்ளும்
நீரார் வயல்சூழ் நீலக் குடியாரே....5

Friday, March 8, 2013

நஞ்சனகூடு -- 2

 சிந்தை நொந்திடர் செய்திடும் வெவ்வினை நீங்கிட
சுந்த ரேசனைத் தோத்தரித் தேயடை நெஞ்சமே
செந்த மிழ்தனில் தேன்சுவைப் பண்ணினை மாந்துவன்
நந்தி ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....6

 விட்டி டாதிடர் விஞ்சிடும் வெவ்வினை வென்றிட
நிட்டை யன் தயை நேடிடச் சென்றடை நெஞ்சமே
பிட்டை யுண்டிட பெண்ணவள் கூலியாய் ஆடிய
நட்டன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....7

நேடி=தேடி என்னும் பொருளில்.

விதிய தன்வழி மேவிடு வாழ்வினில் உய்வுறப்
பதிய வன்கழல் பற்றிடச் சென்றடை நெஞ்சமே        
கதிய வன்வழி காட்டுவன் செஞ்சடை மீதொரு
நதியன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....8

கானல் நீரெனக் காணுமிவ் வாழ்வினில் உய்வுற
மோன மா தவன்  தாள்தொழு தேயடை நெஞ்சமே
ஆனைத் தோலுடை அங்கணன் அஞ்செழுத் தானருள்
ஞானன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே. ...9


தோணி யாய்பவத் துன்பினைத் தாண்டிடச் செய்குவன்
பூணென் றேஅராப் பூண்பவன் சென்றடை நெஞ்சமே
ஆணிப் பொன்னவன் அன்பினுக் காட்படும் பாம்பரை
நாணன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....10


Thursday, March 7, 2013

நஞ்சனகூடு - 1

 நஞ்சனகூடு - 2 (நஞ்சனகூடு - Nanjangud - மைசூர்க்கு அருகுள்ள
'கலித்துறை-- மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்' - வாய்பாடு.
'
தான தானன தானன தானன தானன'. அடி ஈற்றுச் சீரைத் தவிர ஏனைய சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.)
(
சம்பந்தர் தேவாரம் - 2.9.1 -
"
களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்")
--------------------------------------------------------------------------------

பாத கம்செயும் ஊழ்வினை பாற்படு துன்பெனும்
ஏதம் நீங்குமொர் உய்வுற எய்திடு நெஞ்சமே
போதன் ஆலடி நீழலில் புண்ணிய னாயருள்
நாதன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....1

எய்தல்=அடைதல்
ஏதம்=கேடு.

என்பு மாலையன் ஏறமர் நாயகன்  பூங்கழல்
அன்பி .னால்தொழு(து)  ஆட்பட அண்டிடு நெஞ்சமே
நன்பதி யானவன் நாடுவர் நைவினை  தீர்த்தருள்
நம்பன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.... 2

சிக்க லாக்கிடும் தீவினை யால்தொடர் துன்பற
சொக்கன் சேவடிச் சீருரைத் தேகிடு நெஞ்சமே
இக்கு வில்லினை ஏந்துவேள் தீப்படச் செய்தவன்
நக்கன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....3

புயலென் றேவரும் புன்வினை தாங்கிடச் செய்திடும்
தயைநி திக்கழல் சார்ந்துய சென்றடை நெஞ்சமே
பெயலெ .னப்பொழி பெற்றியன் முப்புரம் நீறுசெய்
நயனன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....4

தொல்லை செய்வினைத் துன்பறச் சோதியன் பேரினைச்
சொல்லி அன்பரும் சூழ்ந்திடச் சென்றடை நெஞ்சமே
தில்லை அம்பலச் சிற்பரன் ஏழையர்க் கருள்செய்
நல்லன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....5