Friday, May 31, 2013

திருவாட் போக்கி-- 2

மணக்கொன்றை மலராலே அலங்கல் சூடும்
...மாசில்லா ஒளிப்பிறையை சிரமேற் றானை
குணக்குன்றை பெம்மானை நினைந்து வேண்டி
...குவிகரமோ(டு) அலர்தூவப் பவமும் தீர்க்கும்
துணைக்கென்றும் பரிவோடு வந்து நிற்கும்
...சுந்தரனை தேன்மொழியாள் கேள்வன் தன்னை
மணிப்பச்சை வயல்சூழும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....6

அகலாத அன்பினுக்கே ஆளா வானை
...ஆனந்த நடனம்செய் அழகன் தன்னை
நிகராரும் தனக்கில்லா நேயன் தன்னை
...நின்மலனை வானவர்க்காய் நஞ்சுண் டானைப்
பகையான அறுவினைசெய் துன்ப றுக்கும்
...பைநாகக் கச்சணியும் பரமன் தன்னை
மகவோடு மந்திதிரி திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....7

தீனரவர் உறுதுணையாய்த் தோன்று வானைத்
...தீராத இடர்தன்னைத் தீர்க்கின் றானை
ஆனையுரி ஆடையாக அணிந்தான் தன்னை
...அகிலமெல்லாம் படைத்தருளும் ஐயன் தன்னை
வானமுதென் றலையிலெழு நஞ்சை உண்டே
...வானவரைக் காத்தகறை கண்டன் தன்னை
வானரங்கள் பாய்ந்தோடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....8

எந்தையரன் தாயுமாகிப் பெண்ணைக் காத்த
...ஈடில்லா அருளாடல் போற்றிச் சொல்லும்
சிந்தைதனில் அன்பகலா அடியர் செய்யும் 
...பூசனையை உவந்தேற்கும் புனிதன் தன்னை
விந்தைமிகு அண்டாண்டம் காக்கின் றானை
...வேதமதை விரித்துணர்த்தும் விமலன் தன்னை
மந்திபல மகிழ்ந்தாடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....9

பிஞ்சுபிறை சூடுகின்ற சடையி னானைப்
...பித்தனென்றும் பேயனென்றும் அன்பில் போற்றி
நெஞ்சுநெகிழ் அடியார்கள் பணியும் பாடல்
...நிறைவாகச் செவிமாந்தும் நிமலன் தன்னை
நஞ்சுதனை அமுதெனவே உண்ட தேவை
...நலமருளி வினைதீர்க்கும் நம்பன் தன்னை
மஞ்சுவந்து தீண்டுகின்ற திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.....10


Thursday, May 30, 2013

திருவாட்போக்கி-- 1


(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' அரையடி வாய்பாடு)

வான்பிறையைக் கண்ணியெனச் சூடு வானை
 ...மாதொருபால் பங்குடைய பரமன் தன்னைக்
  கான்நடுவில் எரிதழலில் ஆடு வானைக்
   ...கண்டமதில் கறையுடைய அழகன் தன்னை
   ஊன்முடைசேர் ஓடுடனே பலித்தேர் வானை
    ...உன்னுதற்கும் பேசுதற்கும் இனியான் தன்னை
   வான்முகில்வந் துலவுகின்ற திருவாட் போக்கி
    ...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....1

சிரமதனில் பொன்கொன்றைச் சூடு வானைத்
...தேடிவரும் அன்பர்க்குத் துணையா வானை
வரமெனவும் வினையிடரைத் தீர்க்கும் தேவை
...மாறாத பத்தியினில் உவக்கின் றானை
சரமலர்சேர் மாலையணி அண்ணல் தன்னைச்
...சந்ததமும் பணிவாரின் நேயன் தன்னை
மரகதம்போல் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....2

மானோடு தீஏந்தும் கரங்கொண் டானை
...மணிநீல கண்டனான மதியன் தன்னைக்
கோனான பாண்டியனுக்(கு) அருளி .னாலே
...கூன்நீக்கி நலம்செய்த அண்ணல் தன்னைக்
கானாடும் பெம்மானின் மலர்த்தாள் போற்றிக்
...கண்கசியப் பணிவோரின் துணையா வானை
வானோடும் மதிதீண்டும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....3

விளைவான வினையிடர்கள் வெருட்டும் போது
...விமலனின் பூந்தாளைப் பணிந்துப் போற்றி
உளமார நினைவோர்க்குப் பரிவாய்க் காக்கும்
...உத்தமனை வெண்ணீற்றில் ஒளிர்கின் றானைக்
குளமாரும் மலர்சூழக் சுரும்பி .னங்கள்
...கூடிஒன்றாய் முரலுகின்ற சோலையோடு
வளமாரும் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....4
 
தழையோடு மலர்நீரைத் தாளில் சேர்ப்பார்
...தண்டமிழ்ப்பாத் தேனமுதை மாந்து வானைப்
பிழைசேரும் வாழ்விதனில் நலியா வண்ணம்
...பேறெனச்சீர் அருள்செய்யும் பெம்மான் தன்னைப்
பழிதீரப் பகீரதற்காய் பாயும் ஆற்றைப்
...பாந்தமுடன் சிரமேற்றச் சடையன் தன்னை
மழைமேகம் வந்துலவும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....5
 

Monday, May 20, 2013

திருவாலங்காடு --2

மண்ணீர் வான் தீ யோடு
...வளியாய்த் தோன்றும் வள்ளல்
விண்ணீர் கங்கை சூடி
...வெண்ணீ றணியும் மெய்யன்
கண்ணீர் ததும்ப வேண்டின்
...காக்கும் கழலன் ஊராம்
தெண்ணீர்ப் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங் காடே....3

பால்போல் மதியும் பாம்பும்
  ...பாயும் நதிசேர் சடையன்
  சூல்சேர் பிறப்பும் சாவும்
  ...தொடரா தருளும் ஐயன்
  ஆல்கீழ் மறையைச் சீடர்
  ...அறியச் சொல்வான் ஊராம்
  சேல்பாய் பொன்னித் தென்பால்
  ...திகழும் ஆலங் காடே ....4

 தலையோ டுடையான் கொன்றைச்
...சடையன் பேரை ஓதி
நிலையாம் அவன் தாள்  என்றே
...நினையும் அன்பர் தெய்வம்
மலைமா தோர்பால் வைத்த
...மதியன் மேவும் ஊராம்
அலைசேர் பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங் காடே....5

விரையார் மலரில் மாலை
...மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...மங்கை கொண்டான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங்காடே....6

பறவை ஏன மாகப்
...பறந்தும் அகழ்ந்தும் காணா
இறைவன் முடிதாள் இன்றி
...எரியாய் அழலாய் நின்ற
பிறையை நதியைச் சூடும்
...பெம்மான் மேவும் ஊராம்
அறையும் பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங்காடே....7

வெயிலாய் வாட்டும் வெம்மை
...வினையைத் தாங்கச் செய்வான்
செயலாய் விளைவின் துன்பைத்
...தீர்ப்பான் அன்பர் நேசன்
இயலாய் சுதிசேர் பண்ணில்
...இசைவாய் மிளிர்வான் ஊராம்
கயல்பாய் பொன்னித் தென்பால்
...கவினார் ஆலங் காடே....8

பொன்னும் மணியும் பூவும்
...பொலியும் அணியாய் மார்பில்
முன்னும் பின்னும் இல்லா
...மூல முதல்வன் பேரை
இன்னும் இன்னும் சொல்ல
..இனிக்கும் அண்ணல் ஊராம்
செந்நெல் வயல்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே....9

திறந்த வெளியில் வானில்
...சிவனின் ஆடல் காணப்
பிறந்த பயனைக் கொள்வர்
...பெம்மான் அடியார் தம்மை
நிறைந்த அருளில் வைப்பான்
...நிமலன் மேவும் ஊராம்
செறிந்த பொழில்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே...10

Friday, May 17, 2013

திருவாலங்காடு --1

திருவாலங்காடு (காவிரிக்கரைத் தலம்) (கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், ஆடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையே உள்ளது.)
---------------------------------------------------------------------------------------
(
அறுசீர் விருத்தம் - மா மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
நினைவார் நெஞ்சில் என்றும்
...நிறைவாய் உறையும் தெய்வம்
முனைநாள் மறலி தன்னை
...மூளும் சினத்தில் செற்று
வினைதீர்த் தருளில் காக்கும்
...வெண்ணீற் றனின்நல் லூராம்
புனலார் பொன்னித் தென்பால்
...பொலியும் ஆலங் காடே....1

விரையார் மலரில் மாலை
...மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...மங்கை கொண்டான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங் காடே....2