Thursday, December 31, 2009

திருவாதிரை நன்னாள்!



ஆதிரைநன் நாள்தன்னில் ஆண்டவனை வேண்டிடுவோம்!
மேதினியில் தீங்குகளை வீழ்த்திடுவான்! - வேதியனுக்(கு)
அன்பினொடுத் தொண்டானோர் ஆக்கியபா மாலைகள்
கன்மவினைப் போக்கும் களிம்பு.

Tuesday, December 29, 2009

கலைஞர்களை வாழ்த்துவோம்!


கண்ணனுக்குத் தாசனவன் கற்பனையில் சொற்புனைவில்
...கவியுணரும் தத்துவத்தில் கவிவெல்லும்!
எண்ணமதில் நீங்காத இடம்பிடித்த வரலாறாய்
...எழுத்திலுயர் கல்கியைநாம் மறப்போமா ?
வண்ணமுறு சித்திரங்கள் வரைந்தஉயர் ஓவியர்கள்
...வாழ்கின்ற நாடிதென்று பெருமைகொள்வோம் !
தண்ணமுதத் தமிழ்பாடும் தண்டபாணித் தேசிகரின்
...செம்மைகுரல் பண்ணிசையில் மயங்கார்யார்!


Sunday, December 20, 2009

சிவனைத் தொழுவாய்!


முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின் ஏகம்பம் ஏத்தவே!

பாச மாகிய பற்றதும் நீங்கிட
நேச னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச னாருறை ஏகம்பம் ஏத்தவே!

மாடு மேலமர் மாதுமை பங்கனின்
ஆடு வான்கழல் அண்டிடு நெஞ்சமே!
பாடும் பக்தரைப் பார்த்தருள் செய்குவான்
ஈடி லான் திரு ஏகம்பம் ஏத்தவே!

சோத னைமிகு துன்பில் நலிந்து
வேத னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத மில்திரு ஏகம்பம் ஏத்தவே!

அம்மை பாகனாம் ஆடலில் வல்லவன்
வெம்மை யாம்வினை வீழ்ந்திடச் செய்பவன்
இம்மை வாழ்வினில் இன்னருள் நல்குவன்
எம்மை யன் திரு ஏகம்பம் ஏத்தவே!

Friday, December 18, 2009

தெய்வத் தமிழ்!

மீனாட்சித் தாயவள் மீதுயர்ந்த பிள்ளைதமிழ்
தேனார்செந் தமிழினில் தெய்வமகன் பாடுகின்றான்!
குமரகுரு பரர்பாடல் குழந்தைமீனாள் வந்துகேட்டாள்
அமுதமொழி கவிசுவைக்க அமர்ந்தாளே கொலுவினிலே!
அரசனின் முத்தாரம் அன்பனுக்கே அணிவித்தாள்!
பரவசமாய்க் குருபரனைப் பாரேத்தச் செய்தனளே!

தெய்வீகத் தமிழ்மொழியில் திருக்கதவம் தாள்திறக்கும்!
தேயாதபவுர்ணமியாய் தேசாகும் அமாவாசை!
மெய்யாக மனந்தோய்ந்து வண்டமிழில் சொல்லெடுத்தால்
செய்கின்ற செயலினுக்குத் தெய்வீகம் கைகொடுக்கும்!
தேவாரம் திருப்புகழ் திருஓங்கும் பிரபந்தம்
நாவார இசைத்திடுவோம் நம்பிக்கை கொண்டிடுவோம்!

கையில் விழுந்தகனி!

ஏழைப்பெண் அன்றளித்த எளியநெல்லிக் கனிமுனியால்
மாழைப்பொன் கனியான மகிமைபெறும் அறக்கனியாம்!
அரசனுக்கு அவ்வைதந்த அரியநெல்லிக் கனியன்பின்
வரமாக மக்களுயர் வாழ்வுக்கே உகந்தகனி!
புனிதவதி மனங்குளிரப் புண்ணியர்க்கு அளித்தகனி
வனிதையவள் பக்திக்கே வழங்குமுயர் மாங்கனியாம்!
நாவலென்னும் பழமரத்தில் நாடகமாய்ச் சுட்டகனி
ஆவலுடன் ஊதுகையில் அறிவுசொல்லும் அளிந்தகணி!
அன்னைதந்தை உலகெனவே ஆனைமுகன் பெற்றகனி
என்னதவம் செய்தடைந்தோம் எழில்பழனி அருள்கனியை!

Sunday, December 13, 2009

மனதை வேண்டி 'சீட்டுக்கவி!'

(சந்தவசந்தக் குழுமத்தில் நடந்த 'சீட்டுக்கவி' என்னும் கவியரங்கில் கலந்து கொண்டு நான் எழுதிய கவிதைகள்.)

சிதாகாசம் மனமுனக்குள் சித்துவிளை யாடிடுமே!
நிதானத்தைப் பயிலுகின்ற நெறிதன்னை அளித்திடுவாய்!

இமயமாம் மலைகளிலும் இயற்கையிலும் தவசீலர்
அமையுமன உணர்வலைகள் அருள்செய்தத் தேசமிது!

வான்வெளியில் பறக்கின்ற வண்ணப் பறவைபோல்
நான் எண்ண வெளிபறக்க நத்திடுவேன் நல்மனமே!

மனமேநீ தோணி!யென்பேன் மக்களைக் கரைசேர்ப்பாய்!
மனமேநீ ஆழிய்!என்பேன் மந்திரமாம் உன்னொலியே!

மனமேநீ சக்தி!யென்பேன் வல்லமையே உழைப்பிலென்பாய்!
மனமேநீ! ஆலயம்! வரமாக இறைவருவான்!

மனமுன்னை வேண்டுகிறேன் வளம்பெருக வேண்டுமென்று
தனமொன்றே எண்ணமதாய்த் தடுமாறும் மானுடத்தைத்

தரமான நிலையாக்கு! தகவாகும் வலுவாக்கு!
உரமான உளமாக்கி உயர்வாக்கு! உனைக்கேட்டேன்

உன்னுள்ளில் ஒலிக்கின்ற உணர்வலைக்கு வண்ணமுண்டு!
வன்கண்ணும், வன்மமும் வன்மையும் வண்ணந்தான்!

உவகையும் சாந்தமும் உயர்த்திடும் வன்னமாம்!
தவமென்னும் சத்துவம் தருநிலையே உன்னதமாம்!

வளர்ச்சியில் பலநிலைகள் மனமேநீ! இருக்கின்றாய்!
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத் தாங்கிடுவாய்!

இளமையினில்,நடுவயதில்,இரங்கிடும் முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமேநீ! அமைந்திடுவாய்!

மனிதனுக்குள் உள்ளுணர்வாய் மனமுந்தன் சாட்சியுண்டு!
தனிமனித உயர்வினுக்கு சந்ததமும் கைகொடுப்பாய்!

மனிதனுக்கும் மனமுனக்கும் மாறாத போராட்டம்!
மனமிறுக்கம் மனமுளைச்சல் வரிசையாய் இவ்வுலகில்!

இன்றைய வாழ்க்கைமுறை இயங்குகின்ற வேகத்தில்
சென்றிடுமிந் நிலைமையினைத் தாங்கியருள்!ஓ!மனமே!

படிகின்ற மாசுகளைப் பக்குவமாய் நீக்கிவிட
முடிகின்ற விந்தையினை வரமாகக் கொடுமனமே!

கள்ளமின்றிக் கபடின்றிக் களங்கமில்லாப் பிள்ளைமனம்
வெள்ளையுள்ளச் சிரிப்பினிலே வியந்திறைவன் குடிபுகுவான்!

பிஞ்சு வயதினில் பிள்ளைமனம் தெய்வீகம்
அஞ்சும் ஆர்ப்பரிப்பில் அடங்காது வளர்ந்தமனம்!

கெஞ்சியுன்னைக் கேட்பதெல்லாம் கெடுதியில்லா நன்றினுக்கே!
தஞ்சமென்பேன்! இறையுணர்வில் தளைத்திடவை! என்மனமே!

குழந்தைமனம் வேண்டுகிறேன்! கொண்டிடுநீ கருத்தினிலே!
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!


அன்புடன்,
தங்கமணி.

Saturday, December 12, 2009

வரகவி ! பாரதி !


சந்தவசந்தத் தமிழ் குழுமத்தில்,நிகழ்ந்த 'பாரதி இன்றிருந்தால்'கவியரங்கில் பங்குப் பெற்று நான் எழுதிய கவிதைகள்.பாரதியாரின் பிறந்தநாளில் அவர் பதம் பணிந்து, இடுவதில் மகிழ்கின்றேன்!

வருவதைமுன் உணர்ந்துரைக்கும் வரகவியே!பாரதியே!
...வணங்கியுந்தன் திறம்வியந்து வாழ்த்துகின்றேன்!
பெருமையுறு தகவுடைத்துன் பீடுபெறு பக்திநிலை
...பிள்ளை யுன்சொல் கேட்கின்ற சக்திகண்டேன்!
திருநிறைவும்,நூறகவைசெம்மைசேர்வாழ்வினையும்
...தெளிவுடனே தருகென்றாய்! பெற்றிலையே!
வருவதுவும் போவதுவும் வான்சக்தி செயலதெண்ணும்
...மாண்பினையுன் வரமாக்கிக் வெற்றிகொண்டாய்!

ஐயா!உன் கனவுதனில் ஆற்றலுடன் தமிழோங்க
...அருமையான கவிதைதனில் எடுத்துரைத்தாய்!
மெய்யாகி உலகிலுயர் வான்மொழியாய் நிறைந்திலங்க
...வளர்கலைசொல் மொழிபெயர்நூல் தமிழொளிரும்
பொய்யாத தமிழமுதப் புதையலினை வெளிக் கொணர்ந்து
...புதுமையென உலகறியத் தந்திடுவோம்!
செய்யாதத் தவப்பயனாய்ச் செங்கவியாய்ப் பாரதி நீ!
...தமிழ்த்தாயின் மனங்குளிர வந்துதித்தாய்!

தண்டமிழில் நவரசத்தைச் சிறப்புற உன் கவிநயத்தில்
...தெய்வமணம் பெற உரைத்தாய் பாரதியே!
விண்டறிய ஒண்ணாத விஞ்சையையும் வியப்பினையும்
...வெள்ளந்தி மனமாக விரித்துரைத்தாய்!
கண்டுறையும் இனிமையினில் காதலினை,பக்தியினை
...கருணையையும், கனிவினையும் கலந்துரைத்தாய்!
மிண்டுகின்ற ஆளுமையில் மேவுகின்ற கவிதையினில்
...வரமெனவே சக்தியன்னை ஒளிர்ந்திடுவாள்!


Tuesday, December 1, 2009

அருணேசா! அருள்வாயே!


அண்ணா மலையே!அருணேசா!
...அருவாய் அழலாய் ஒளிர்வாயே!
பெண்ணாய் ஆணாய் அலியானாய்
...பிறைவான் நதிசேர் சடையானே!
விண்ணோர் உனையே துதிசெய்ய
...விடத்தை மிடற்றில் உடையானே!
பண்ணாய் இசையாய் இசைவோனே
...பரிவோ டெமைக்காத் தருள்வாயே !


Sunday, November 29, 2009

நிமலனே ! உனைப் பாடுவேன் !

[புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
...புளிமா கூவிளம் புளிமா கருவிளம்]
(1-௫ மோனை)


முனைந்த வேதமும் விளங்க ஓதியும்
..முயன்று தேடியும் அறிந்தி டாதெம திறைவனே!
புனைந்த பூமலர் சுகந்த மேவிடப்
..பொலிந்த மாலையை அணிந்து காணுமென் தலைவனே!
வனைந்த ஊனிதைத் தொடர்ந்த ஊழ்வினை
..வருத்தி வாட்டுமென் றிரங்கி யாளுமெம் நிமலனே!
நினைந்த போதிலும் உணர்ந்த போதிலும்
..நிறைந்த வாறுளம் நெகிழ்ந்து பாடிட விழைவனே!

முனைதல்=முற்படுதல் , முனைந்த வேதமும்=முற்படும் வேதமும்
வனைந்த=உருவாகிய

Saturday, November 21, 2009

காரைக்கால் அம்மையார் !

புடமிடு பொற்பில் புரிதவ யாக்கைக்
கடனென அம்மைக் கருதிடும் காட்சி
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்
நடமிடு கோலம் நயந்தளித் தானே.

(காரைக்கால் அம்மைக்கு ஈசன் அருள்செய்தது)

புடமிடு பொற்பில்=புடமிட்டப் பொன்னின் தன்மையில்
புரி தவ யாக்கை=செய்த தவத்தால் கிடைத்தப் பேய் யாக்கை,

"நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்" ஈசன் கூற்று.(சேக்கிழார்)
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்=சுடலையின் வெண்பொடிப் பூசிய ஈசன்.
அம்மைக் கருதிடும் காட்சி = "அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருந்து, பாடி உன்நடம் காண வேண்டும் என்ற வேண்டுதலுக்கு இறைவன் "ஆலம்காட்டில் என்நடம் காண்!" என்று காட்டுவித்தார்.

அன்புடன்,
தங்கமணி

Wednesday, November 18, 2009

அவர் நமர் !

சிவமய மாகத் திகழுருக் கொண்டே
கவருறக் கொல்லக் கருதிடு வோனை
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்
அவர்நமர் என்பார் அருள்நினை மனமே!

(மெய்ப்பொருள் நாயனார் தன்னைக் கொல்லவந்த பகைவன் முத்தநாதனுக்கும் அருள்செய்தது)

திருமுறைப் பாடல்!

சிவமய மாக்கும் திருமுறைப் பாடல்
தவமுறைக் காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் நாட்டும்
அவனியை உய்க்கும் அருமருந் தாமே!

Monday, November 16, 2009

பெம்மானே ! நம்பினேன் !

சோதித்தே ஆட்கொள்ளும் சூக்குமம்தான் நானறியேன்
போதித்தும் காத்திடுவாய் பூரணனே!-- பாதிக்கும்
துன்பவினை தீர்க்கும் துணையாவாய்! பெம்மானே
நம்பியுனைப் போற்றுமென் நா.

Wednesday, November 4, 2009

முத்தமிழ் வாழ்க


திரு.பசுபதி அவர்கள், புலவர்.குழந்தை அவர்களின் ஈற்றடியை வைத்து
ஓர் ஒன்பதின் சீரடி விருத்தம் இயற்ற,பயிற்சியாகக் கொடுத்தார். அதற்கு நான் இயற்றிய விருத்தம் இது.



குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்

படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்

பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்

முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!

Wednesday, October 28, 2009

மதிசூடி துதிபாடி-2

ஆற்றையுன் செஞ்சடைக் கற்றையுள் வைத்தவா
நீற்றனென் றுன்னெழில் நெஞ்சினில் போற்றுவேன்
ஏற்றனுன் நாமமே என்றுமென் தாரகம்
சாற்றுகின் றேன்மலர்த் தாளினைப் பற்றியே!

Wednesday, October 21, 2009

மதிசூடி துதிபாடி!

பாதியன் வேதியன் பக்தரெம் நாயகன்
சோதியன் பேர்புகழ் சொல்லிடக் கூடுமோ
ஆதியென் றொன்றிலான் அந்தமென் றொன்றிலான்
நாதியென் பேனவன் நற்றுணைப் பாதமே!

நீலகண்டனை ஏத்து மனமே!-- 3.

நுரையுடன் தோன்றும் நீர்க்கு மிழியாகும் வாழ்வில்
...நுதல்மேவு கண்ணன் தொழுவாய்!
இரைதரும் பாறைக் குள்ளும் சிறுதேரை வாழ
...இயல்பாகும் ஈசன் அருளே!
விரைமலர் மாலை மார்பில் அணியாகக் கொண்டு
...வினையாவும் தீர்க்கும் பரமன்
வரைமகள் நேயப் பங்கன் ,மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!

Sunday, October 18, 2009

சிவன் துதி!

நுதல்கண்ணால் மதனாரை
வதம்செய்தார் பதம்நாடி
நிதமோதும் சதமான
பதநாமம் இதமாமே.

தீபஒளி!

சிட்டாகப் பறந்தோடும் சிறுவயது நினைவுகளில்
பட்டாசு மத்தாப்பூ பரவசமாம் தீபஒளி!

புத்தம் புதுவுடையாம் பூப்பூத்தச் சீட்டியிலே
சுத்தி மகிழ்ந்திருப்பேன் சுவைமலரைப் படித்திடுவேன்!

தின்னத் திகட்டாதத் தேன்குழல் மைசூர்பா
என்னநான் சொல்லுவது என்னம்மா கைவண்ணம்!

ஓலைவெடி யானைவெடி ஊசிவெடி சீனவெடி
காலைமுதல் நாள்முழுதும் கலகலக்கும் வெடியொலிகள்!

பொட்டி மத்தாப்பூ புஸ்வாணம் பூமுத்தாய்க்
கொட்டி உதிந்திடுமே கொள்ளை அழகுடனே!

சர்ரென்று தரைசுழலும் சங்குச் சக்கரந்தான்
விர்ரென்று ஏரோப்ளேன் விண்பறக்கும் அதிசயந்தான்!

வெடியெல்லாம் சோதரர்கள் வெடித்திடுவர் ஆர்வமுடன்
படபடக்கும் இதயத்துடன் பார்த்திருப்பேன் பயத்தோடு!

Saturday, October 3, 2009

சிவன் வருவான்!

நிலாவோ டொளிர்வான் நெகிழ்பூஞ் சடையன்
உலாவில் திகழ்வான் உணர்வில் நிறைவான்
எலாமும் சிவன்தான் எனத்தாள் பிடித்துக்
குலாவித் துதிக்கும் குழாத்துள் வருவான்!

(புயங்கப் பெருமான் புஜங்கம்.)

Wednesday, September 23, 2009

ஈசன் அருள்!

பனிக்கின்ற கண்ணாய் படர்கின்ற நீராய்
இனிக்கின்ற தேனாய் இசைக்கின்ற பாவாய்
நினைக்கின்ற வானாய் நிறைந்துள்ள ஈசன்
தனக்கன்பு செய்தால் தயங்காத ருள்வான்

Monday, September 14, 2009

நீலகண்டனை ஏத்து மனமே



நல்லிசை பாடல் நாளும் சிவநாமம் சொல்லும்
...நமவாதை யாவு மழியும்
தொல்வினை யாலே தோன்றும் துயரான தென்றும்
...தொலைந்தோடும் ஈச நருளால்
கல்லெனும் போதும் பூவாய் அணிந்தாளும் நம்பன்
...கதியாகி அன்பில் அணைவான்
வல்லியை வாமம் கொண்ட மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!



மடலவிழ் பூவில் கோத்த அழகான மாலை
...மணமோடு தோளில் அசைய,
சுடலையின் நீறு பூசி நமையாளும் ஐயன்
...துணயாகி நாளும் அருள்வான்!
நடமிடு கோலம் காணும் அடியாரின் அன்பன்
...நலமாகும் வாழ்வு தருவான்!
மடமயி லாளின் பங்கன் மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!

Wednesday, September 2, 2009

காலை நேரக் கவிதை!

காலை நேரக் கவிதையினைக்
...காகம் தினமும் படிக்கிறது!
சோலை மணக்கும் புதுமலரால்!
...தோன்றும் விடியல் கதிரொளியால்!
பாலைப் பொழியும் பசுவினம்தான்!
...பரிவாய் அருளும் இயற்கையைப்பார்!
வேலைத் துவங்க எழுந்திடுவாய்!
...வீடும் நாடும் நலமாகும்!

'தய்ய தானன.. தனதான'

வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்வ தேஉன.. தருளாகும்!
தைய லாளுமை.. இடமாகி
...சைவ மாதிரு.. மறையோதும்
துய்ய நேசிவ.. பரமேச!
...சொல்லு வேனுன.. தெழிலாடல்!

Friday, August 28, 2009

சிவனடி விழைவாய்!

சிறையெனு கருவறை சிறுமையு மழியும்
..சிவசிவ எனவுரை! சிதறிடும் துயரே!!
முறையெது மறிகிலை! மொழிவது மவனின்
..முடிமுத லடிவரை முழுமுத லுருவே!
குறைமதி புனைசடை குழையணி இறைவன்
..குரைகழல் நடமிதில் குவிமன மடைய
மறைதொழு சிவனடி மலரிணை விழைவாய்!
..வளமிகு திருவினை வரமென அடைவாய்!

ஆனைமுகா!

ஆதாரம் நீதானே ஆனைமுகா! வேத(ம்)உரை
பாதார விந்தம் பணிந்திடுவேன்! --நாதா!
விதவித மாலை மிளிர்ந்திடச் சாற்றி
நிதநிதம் எண்ணல் நிறைவு.

அருள் தா!

காடுவரை செல்லுமுன்னே கண்வைத்துப் பார்த்திட
வீடுவரை சொந்தங்கள் வேண்டுவதே!-- தேடுமனம்
இற்றிடத் துன்புறும் ஏழை நிலைக்கு,மடி
தற்றிட வந்தருள் தா.

Monday, August 24, 2009

அறுசீர்விருத்தங்கள்!

சந்தவசந்தக் குழு (த் தலைவர்) ஆசான் கவிமாமணி.இலந்தை அவர்கள்,
சிலவருடங்களுக்குமுன் கொடுத்தப் பயிற்சிக்கு செய்த
அறுசீர்விருத்தங்கள்...

கற்களைப் பதித்து வைத்தே
...கனகமாய் பூக்கள் தைத்தே
அற்புத அணிகள் பூட்டும்
...அன்னையின் கோலம் காட்டும்!
சொற்பதம் கடந்த அன்னை
...சொக்கிடும் அழகு தன்னை
கற்றவர் மற்றோர் எண்ணி
...கனிவுடன் தொழுவர் நண்ணி!

மற்றுமோர் பாடல்!

தோல்வியும் கூட வெற்றித்
...தொடக்கமே எழுவாய்த் தம்பி!
கால்கொளும் மண்ணில் மேழி
...கடினமாய் உழவு செய்தால்
பால்கொளும் செந்நெல் காணப்
...பாங்குடன் முடியும் அன்றோ?
மேல்வரும் உயர்வு கூட
...மேவியே முயற்சி செய்க!

Tuesday, August 18, 2009

பரமாஉனைத் துதித்தேன்!

வசுதேவரின் மகனாய்ச்சிறை மறைவாயவ தரித்தாய்!
சிசுபாலனை வதைசெய்திடத் திருமாலென உதித்தாய்!
நசைநீங்கிய நலம்தந்திடும் நவகீதையை அளித்தாய்!
பசுமாடுகள் தினம்காத்திடும் பரமாஉனைத் துதித்தேன்!

Saturday, August 8, 2009

அருள் வண்ணம் !

கறைவண்ணக் கண்டனவன் கழல்வண்ணம் எழில்வண்ணம்
பிறைவண்ணன் செஞ்சடையன் பெருமைசொலல் எவ்வண்ணம்?
மறைவண்ணம் ஒலிவண்ணம் வளரொளிர்தீ செவ்வண்ணம்!
இறைவன் தன் அருள்வண்ணம் இதம்தரும்நம் மனம்கொள்வம்.

Monday, July 27, 2009

வெண்காடடை மனமே!

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்
வெற்றி தரும் அரனின் வெண்கா டடைமனமே!

பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சி தருமிறையாம்
வேத முழுமுதல்வன் வெண்கா டடைமனமே!

பண்ணீ ரொருதவமும் பாவ வினையொழிமின்!
கண்ணீ ரதிலுணர்ந்து காணும் அருள்நிதியன்
தண்ணீ ரென உயிரைத் தாங்கும் இறைவனவன்
வெண்ணீ றணிஅரனின் வெண்கா டடைமனமே!

Sunday, July 19, 2009

சரணிணை அருளாய்!

செஞ்சடை யோனே! செங்கழல் பாதா!
...திருமுக ஒளியினில் நிறைமனம் பெறவை!
நஞ்சமு துண்டாய்! நம்பிடு வோர்க்கு
...நலமுறு கருணையை நயமுடன் புரிவாய்!
அஞ்சலி செய்தே அன்புடன் ஓர்ந்தால்
...அமுதினு மினிதெனும் அகமதில் வருவாய்!
சஞ்சல மில்லா சாந்தியை வேண்டின்
...சடுதியில் அடைகென சரணிணை அருளாய்!

Saturday, July 11, 2009

ஏழிசை அரசி!

நிலைமண்டில ஆசிரியப்பா.

நல்லிசை வாணி!நான்முகன் தேவி!
கல்வியும் நீயே!கலைகளின் ராணி!
யாழிசை ஒலிநீ!ஏழிசை அரசி!
தூயநின் பதமே தொழுதேன் தாயே!
சந்ததம் உனையே சரணெனக் கொண்டேன்!
உன்றனின் அருள்தான் உற்றிடு புகலாம்!
செந்தமிழ் பாக்கள் சிறப்புறப் புனைய
செம்பொருள் தேர்சொல் செல்வமாய் அருளே!

Wednesday, July 8, 2009

முருகா! வரம்தா!

நினதுரு வேதான் நினைவாய் உணர்வால் நெகிழ்ந்தேன்!
நினதிரு தாளே நிறைவாய் பொருளாய் நினைந்தேன்!
கனலுரு வானாய்! கனியே! முருகா! கரைந்தேன்!
மனதிரு ளூடே வருவினை நீங்கும் வரம்தா!

Tuesday, July 7, 2009

நடம்காணீர்!

பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.

Saturday, June 27, 2009

அஞ்சல் அருளும் ஐயா போற்றி!

1.அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கை தீர்க்கும் சதுரா போற்றி!

2.மோன நிலையில் மொழிந்தாய் போற்றி!
ஞான ஒளியே நாதா போற்றி!
தீன தயாள சிவனே போற்றி!
கான நடத்தில் களிப்பாய் போற்றி!

3.நீறு புனைந்த நிமலா போற்றி!
கீறு பிறையோய் கீர்த்தி போற்றி!
ஏறுடையவா  ஏற்றம் போற்றி!
மாறு முலகின் மன்னே போற்றி!

4.பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயன் நதோளி மணாளா போற்றி!
தோயும் அன்பின் துணையே போற்றி!
தாயும் ஆகும் தலைவா போற்றி!

5.ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!

6.மன்றுள் ஆடும் மகேசா போற்றி!
கன்றின் ஆவாய் காப்பாய் போற்றி!
என்றும் இலங்கும் இன்னருள் போற்றி!
என்றன் தேவே இறையே போற்றி!

7.செஞ்சொல் பரவும் சிவமே போற்றி!
விஞ்சும் நடம்செய் வேதா போற்றி!
அஞ்சல் அருளும் ஐயா போற்றி!
நஞ்சம் உண்டோன் நற்றாள் போற்றி!

Monday, June 22, 2009

உனையே கும்பிடுவேன்!

தண்ணார் பொழிலே! தண்தடமே!
...தவமாய் அருளும் சிற்பரனே!
பண்ணார் இசையில் நெஞ்சினிக்கப்
...பரவும் அடியார் தம்மிறையே!
கண்ணே! மணியே! கண்நுதலே!
...கனியே! சுவையே! தெய்வதமே!
விண்ணோர் அமிழ்தே! கற்பகமே!
...விகிர்தா! உனையே கும்பிடுவேன்!

Thursday, June 18, 2009

கவிதை ஊறும்!

கோலமயில் நடமாடி அழகை வார்க்கும்!
...குமரனவன் வாகனமாய் மனதை ஈர்க்கும்!
ஓலமிடும் கடலாடும் அலையும் மோதும்!
...உவகையினில் வேலவனின் புகழை ஓதும்!
சீலமிகு அடியாரின் தெளிவில் தோணும்
...சிவகுருவின் பார்வையெனும் ஒளியில் காணும்!
மாலவனின் மருகோனை மறையும் கூறும்!
...மனமுருகும் பக்தியினில் கவிதை ஊறும்!

Tuesday, June 16, 2009

நின் தாள் புகல்!


என்றென்றும் தீனர்க்(கு) இரங்கியருள் செய்திடுவாய்
என்றுன்னை வேண்டிநின்றேன் ஈஸ்வரியே!-- இன்றெங்கும்
காணுகின்ற தீங்குகளைக் கண்டும்நீ தீர்க்கவில்லை!
பூணுகின்ற நின் தாள் புகல்.

Tuesday, June 9, 2009

மன்று ளானை வேண்டுவம்!

இளம்பிறை அணிந்தவன் இரங்கிடும் பரஞ்சுடர்
...எந்தை அன்பை நினைந்தின்பு கொள்வமே
களம்கறை அணிந்தவன் கனிந்தருள் வழங்கிடும்
...கால காலன் பதந்தன்னை வாழ்த்துவம்!!
உளம்நிறை வடைந்திட ஒளிர்ந்திடும் திகம்பரன்
...உந்து பாத நடம்தன்னை ஏற்றுவம்!
வளம்தரும் அவன்துணை வரம்தரும் தினம்தொழ
...மன்று ளானை மனம்கொள்ள வேண்டுவம்!

வேசங்கள் உன்றன் விருப்பு.

வந்தியின் பிட்டுக்கு மண்சுமந்தாய்!உன் தோழன்
சுந்தரர் சொற்படி தூதுசென்றாய்!--எந்தையே!
ஏசல்கள், ஆடல்கள், எண்ணிடக் கூடுமோ?
வேசங்கள் உன்றன் விருப்பு.

Saturday, May 30, 2009

முருகனைப் பாடுவோம்!

மலைதொறும் உறைபவன் மறைதொழும் கடம்பனை
...மாலின் செல்வ மருகோனைப் பாடுவோம்!
கலைமதிச் சடையனின் கதிர்நுதல் விழியருள்
...கந்தன் செவ்வேள் முருகோனைப் பாடுவோம்!
தொலைதரு வினைகளின் தொடரினைக் களைந்திடச்
...சுற்றும் வெல்வேல் கரத்தானைப் பாடுவோம்!
நிலைபெறும் அருளினில் நிறைவினைத் தருகென
...நெஞ்சில் நிற்கும் பெருமாளைப் பாடுவோம்!

Wednesday, May 27, 2009

பெம்மானே!அருள்வாய்!

ஆட்டிவைக்கும் ஆடவல்லோய்!ஆடுகின்றாய்!உன்னருளில்
கூட்டுவித்தத் தொண்டருள்ளம் கொண்டாடப்--பாட்டுவித்துக்
கேட்டுவக்கும் பெம்மானே! கேடனைத்தும் நீங்கநலம்
காட்டுவித்தால் பாருய்யும் காண்.

Wednesday, May 13, 2009

தாயன்பு!

துறவிகளும் அன்பாய்த் தொழுதிடுவர் தாயை;
கறவையினம் காத்தவனைக் கட்டும்-- திறமுடையத்
தாயன்பிற்(கு) கெல்லையுண்டோ? சக்தியுரு வாகிடுவாள்
கோயிலுறைத் தெய்வமெனக் கூறு.

கறவையினம் காத்தவன்=கோபாலன்
கட்டும் தாயன்பு=யசோதையின் அன்புக் கட்டுக்கு

Tuesday, April 14, 2009

சீர்பேசி உய்தல் சிறப்பு.


மண்ணுலகை வாழ்விக்க வந்துதித்த ராமனையே
எண்ணிநிதம் பண்பாடி ஏற்றிடுவோம்!-- வண்ணமதில்
கார்மேகம் மாரியெனக் காத்தருளும் பண்பாளன்
சீர்பேசி உய்தல் சிறப்பு.

Sunday, April 12, 2009

அஞ்சலென்று காட்சியருள் வேலவா!


(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)

எழுசீர் விருத்தம்.
(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)
ஆறு கூவிளங்காய் கூவிளம்
ஆறு தானதன தானனா

தேடிவரும் அன்பரெல்லாம் தீந்தமிழ்*ப்*பா மாலைகளைச்
சீர்பெறவே சூட்டிடுவர் வேலவா!
ஓடிவரும் தேனருவி உன்புகழை ஓசையிட்டே
உச்சரித்துப் பாய்ந்துவரும் வேலவா!
கூடிவரும் பக்தியினில் குன்றுதொறும் காண்பதற்கு*க்*
கூவியுன்னை வேண்டிடுவேன் வேலவா!
ஆடிவரும் தோகைமயில் அன்னைதந்த வேலுடனே
அஞ்சலென்று காட்சியருள் வேலவா!

Friday, April 10, 2009

அண்ணா மலையாம் அருணசிவம்!


எண்ணா திருப்பினும் இன்னருள் செய்திடும்
அண்ணா மலையாம் அருணசிவம்!-- விண்ணாய்
விரிந்துயர் கோபுரம் விந்தைமிகக் கண்ணால்
தெரிந்திடக் காட்டும் சிவம்.

Wednesday, April 1, 2009

அன்னைகாமாட்சியின் திருக் கோலம்!


பொன்னில் ஒளிரிழை புதுமலர்ச் சரங்கள்
...பொலியத் திகழும் அழகோடு
கன்னல் சிலைமலர்க் கணைகரம் அணைத்து*க்*
...கருணை பொழியும் விழியாளே!
மின்னல் கொடியென மிளிர்ந்திடும் இறைவி!
...வியந்து மனத்துள் தொழுகின்றேன்!
இன்னல் தருவினை இடரதும் தொலைய
...இணைபூம் பதமே சதமென்பேன்!

Tuesday, March 24, 2009

வல்லவன்சீர்ப் பாதம் மருந்து!

ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.

Sunday, March 22, 2009

பாண்டி'

ஆங்கிலத்தில் PANTOUM என்னும் பாடல்வகை
திரு.இலந்தை அவர்கள்'பாண்டி'என்னும் பெயரால் கொடுத்த பயிற்சிப் பாடலை
ஒட்டி நான் எழுதியது.)

தோயும் அன்பில் துன்பம் நீங்கும்!

காயின் புளிப்பு கனியில் தீரும்
வேயின் இசையில் விழிகள் அரும்பும்
நேயம் பண்பின் நியதி சுட்டும்
கோயில் உயர்வில் கூடும் பணிவு


வேயின் இசையில் விழிகள் அரும்பும்
சேயின் மழலை சிந்தும் இனிமை
கோயில் உயர்வில் கூடும் பணிவு
ஓயும் அலையும் உண்டோ கடலில்


சேயின் மழலை சிந்தும் இனிமை
தாயின் அருமை தளிரின் தவிப்பில்
ஓயும் அலையும் உண்டோ கடலில்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை


தாயின் அருமை தளிரின் தவிப்பில்
காயின் புளிப்பு கனியில் தீரும்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை
தோயும் அன்பில் துன்பம் நீங்கும்

Thursday, March 19, 2009

எழில்வேலன்

எனதுயிர் தெய்வம் செவ்வேள் எழில்வேலன் என்றே
...இளமஞ்ஞை மீது வருவாய்!
மனதிருள் நீக்கும் தேசாய் வினையாவும் வேலால்
...விரைவாகப் போக்கி அருள்வாய்!
கனவெனும் வாழ்வைக் கண்டு கலங்காத சித்தம்
...கனிவான பக்தி தருவாய்!
நினதிரு பாதம் போற்றி நெறியாகக் கூட்டும்
...நிறைஞான வாழ்வை விழைந்தேன்!

Sunday, March 15, 2009

கலிவிருத்தம்

கருமணியி லொளிருமொளி கருணைபொழிவிழியே!
திருவருளி லுலகுதரும் திகழபய கரமே!
பொருவினையு பொடியெனுமுன் புகலளிசெங் கழலே!
சுருதிமறை தொழுதிடுமுன் துணையடியென் கதியே!

கலிவிருத்தம்

கலிவிருத்தம்
¸ÕÁ½¢Â¢ ¦Ä¡Ç¢Õ¦Á¡Ç¢ ¸Õ¨½¦À¡Æ¢ ŢƢ§Â!
¾¢ÕÅÕÇ¢ ÖÄ̾Õõ ¾¢¸ÆÀ ¸Ã§Á!
¦À¡ÕÅ¢¨ÉÔ ¦À¡Ê¦ÂÛÓý Ò¸ÄÇ¢¦ºí ¸Æ§Ä!
ÍÕ¾¢Á¨È ¦¾¡Ø¾¢ÎÓý Ш½ÂʦÂý ¸¾¢§Â!

Tuesday, March 10, 2009

வனம்!

கருவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்
கருவிளம் புளிமாங்கனி

தனதனந் தனதான தனதனந் தனதான
தனதனந் தனதானனா


சதாக்கிர அறுசீர் விருத்தம்
(அடிக்கு 25 எழுத்து, 100 எழுத்து (சதாக்கிரப் பாடல்)

கழைநுழைந் திடுகாலு மினிதெனுஞ் சுவைகூட
..கலைமிகுந் திசையானதே

மழைவருங் குறிகாண மயிலினங் களதாட
..வனமதுங் கவினானதே

புழையறிந் திடயேலா நிழல்மிகுந் ததர்தோன்றும்
..புலமிதென் றறியாமலே

தழைபுனைந் தடர்காவும் அடல்மிகுந் திடுமாவும்
..தருவனந் தகவானதே!

கால் = காற்று, புழை = காட்டுவழி, புலம் = திக்கு, மா = விலங்கு, அதர் = வழி

Tuesday, March 3, 2009

அருளாயோ!

தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த...தன தான


குழைக ளாட முடிது லங்கு
..குளிர தான நிலவு கங்கை
..குலவ மேனி யிலகு கொன்றை...மலராட

உழுவை ஈரு ரியைய ணிந்து
..உரக மானு முடனி லங்க
..உமையை வாம மிடம ணிந்த... மறையோனே!

முழவி நோடு துடிமு ழங்க
..முடிவி லாத நடமி தென்று
..முதிரு மோன நிலைவி ளங்க...வருவாயே!

விழையு ஞான நிலைது லங்க
..விமல நாகி மருளு கின்ற
..வினையு மோட அபய மொன்றை...அருளாயோ!

தானத்..தனதான

நேசத்..துணையாம்வெண்
..ணீறைப்..புனைவோராய்ப்
பேசற்..கினியானைப்
..பேசித்..துதிபாடிப்
பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!

Friday, February 20, 2009

முடுகியல் பாடல்!

பெருமைவளர் முருகுதவழ் பெருநிதியம் கிருதிவழி
உருகிமகள் பரதமிடும் ஒருநடமும் பெருகிவரும்
துரிதகதி சரஒலியும் சுரலயமும் இயம்புதலில்
திருநிறையும் குருவருளும் தெருளுறவும் தருமுயர்வே!

Tuesday, February 17, 2009

சக்தி துதி!

மாங்காடு கோயிலுறை மங்கலத்தாய் காமாட்சி
தீங்(கு)ஓட நன்றுசெய்யும் தெய்வமவள்!-- பாங்கான
பூங்காவின் பூமணமாய்ப் பூக்கின்ற சக்தியவள்
ஓங்காரி உத்தமியென்(று) ஓது.

Friday, February 6, 2009

வெண்ணிலவே!



(அரையடி-- மா காய் காய்)

> வெள்ளித் தகடெனவே விண்வெளியில்
> ...மிளிரும் வடிவழகே! வெண்ணிலவே!
> கொள்ளை இளமையுடன் கூடிடுவாய்!
> ...கோடி யுகங்களிலும் தோன்றிடுவாய்!
> துள்ளும் சிறுவயதில் சொந்தமடி!
> ...துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்!
> உள்ளம் களித்திருப்பேன் நீவருவாய்!
> ...உருவில் குறைந்துவளர் வெண்ணிலவே!

> அன்புடன்,
> தங்கமணி.

Monday, February 2, 2009

அம்மானை

அம்மானை

ஏறுமயில் வாகனனார் ஏறுகந்தார் தம்குருவாம்
மாறுபடு கோல மலையர்காண் அம்மானை
மாறுபடு கோல மலையரே ஆமாகின்
வேறுபடு கோலத்தின் மேன்மையென்ன அம்மானை?
ஆறுதலை கொண்ட அருளாளர் அம்மானை

Thursday, January 29, 2009

நித்தியானந்த! தாள் பணிந்தேன்!

குறையால் மலியும் கொள்கையிலாக்
...குணங்கொண் டேனை ஆண்டருள்வாய்!
சிறையாம் வாழ்க்கைத் தத்துவத்தில்,
...தெளிவாய் ஞானம் ஊட்டிடுவாய்!
முறையாய் பக்தி மூழ்குமனம்
...முகிழ்த்தே யோங்கும் சூட்சுமம்தா!
நிறைவாய் நிருத்தம் நெஞ்சினிக்கும்
...நித்யா நந்த! தாள்பணிந்தேன்!

Wednesday, January 28, 2009

பதமலர்!

கடலலையும் தவழ்நிலவும் கதிரொளியும் இறைவனவன் கனிவைக் கூறும்!
சடமெனவும் உயிரெனவும் சகலவிதப் படைப்புமவன் சதுரில் கூடும்!
விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்,
நடமிடுபொற் சதங்கையொலி நரலுகின்ற பதமலரை நயந்து கொள்வோம்!!

நரலுகின்ற=ஒலிக்கின்ற

(1-௩-௫ மோனை.)

Friday, January 23, 2009

'கட்டுக்குள் மாட்டாத கட்டு' .

பிட்டுக்கு மண்சுமந்த பெம்மானும் பக்தருக்காய்
இட்டமுடன் பூசனையை ஏற்பாரே!---திட்டுக்கும்
எட்டுகின்ற ஈசனின் இன்னருளே பந்தவினைக்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.

Thursday, January 15, 2009

கற்றை கனல் வித்து!

முத்துநிகர் பத்திநகை முத்தையனின் வித்தகத்தை
பத்திமனச் சுத்தியுடன் பத்திடுவோம்!-- நித்தனவன்
சத்திசிவன் சித்தமகிழ் சத்குருவாய் உத்தவனோர்
வித்தையொளிர் கத்தைகனல் வித்து.

Tuesday, January 13, 2009

ஆதிரையான் நர்த்தனம்!



பன்மலர்கள் மாலைகளாய் பாங்குடன்தோள் சேர்ந்திலங்க,
புன்னகையில் கூத்தன் பொலிகின்றான்!--என்னென்பேன்!
கண்கொண்டேன்!ஆதிரையான் கால்நடிக்கும் நர்த்தனமே
மண்ணில்நான் வேண்டும் வரம்.

பச்சை வண்ணங்கள்!-௨.(தொடர்ச்சி)

பச்சை பசுங்கிளிகள் பச்சைமயில் தோகையெழில்
கச்சைக் கட்டிநின்று காட்டுமுயர் பச்சையென்று

பரந்த வயல்வெளியில் பசுமையே பாய்விரிக்கும்
விருந்தென இயற்கைத்தாய் விஞ்சைகள் புரிகிறாள்

விசும்புயரும் தருஇனங்கள் விருட்சங்கள் சோலைகள்
திசைமறைக்கும் வழிமறக்கும் தேடரிய பசுவனங்கள்

மருத்துவ குணமுடைய மரம்செடிகள் செல்வங்கள்
கருத்தினில் கொண்டிடுவோம் காத்திடுவோம் பசுமையினை

கண்நிறைந்த பச்சைக்காய் கறிகளுடன் கீரைகள்
உண்ணநல் உணவாகும் உடல்நலமும் உயர்வாகும்

திருமண மண்டபத்தில் திகழ்குலையாய் வாழைமரம்
தருகின்ற வெற்றிலைச்சீர் தாம்பூலம் நிறைவுபெறும்

வீட்டினிலே செடிகொடிகள் விதவிதமாய் வளர்த்திடுவோம்
தோட்டமாய்க் காய்கனிகள் தோதாக விளைவிப்போம்

பச்சைக் குதிரையெனும் பாங்கான விளையாட்டும்
இச்சையுடன் விளையாடார் எவருண்டு சொல்லிடுவீர்?

பச்சைக் குழந்தைஎனப் பகன்றிடுவர் சிசுவினையே
பச்சை யெனும்பெயரும் பருவமாம் புனிற்றிளமை

பச்சைநிற விளக்கெரிய படபடக்கும் வாகனங்கள்
அச்சமின்றி சாலையினை அலையெனவே கடந்திடுவர்

பச்சைக் கொடியசைய பச்சைநிற விளக்கெரிய
புஸ்புஸ் பெருமூச்சாய்ப் புறப்படுதே தொடர்வண்டி

பசுமைநிறம் நம்கொடியில் பண்பாய் விளங்கிடுதே!
திசையெங்கும் புதுமைதனைத் தேடி உழவுசெய்வோம்!

கற்றவர்க்கு எளிதாகக் காட்சிதரும் பச்சையட்டை
பெற்றிடுவர் வெள்நாட்டில் பெரிதுவந்துத் தங்கிடுவர்!

அயல்நாட்டில் வாழ்ந்திடவே அலைந்திளைஞர் வாடுகின்றார்!
இயலாதப் பெரியோர்கள் ஏங்கிடுவர் மக்களுக்காய்!

மங்கையர்கை சிகப்பழகு மருதாணி இலைகளினால்
செங்கையாய் அழகுபெறச் சிறுமியரும் விரும்பிடுவர்!

பூங்கொடிகள் மான்மீன்கள் பொலிவான கோலங்கள்
பாங்குடனே குத்திடுவர் பச்சையினில் கலைதிகழ!

பச்சையெனும் உயர்நிறத்தைப் பாராட்டி மதித்திடுவோம்!
நிச்சயமாய்க் கருணையெனும் நித்தியமும் பசுமையன்றோ?

அஞ்சனையின் தவப்புதல்வன் அனுமனவன் ராமபக்தன்
சஞ்சீவிப் பருவதத்தைத் தந்ததுமோர் அருஞ்செயல்தான்!

பச்சை நிறத்தழகா! பார்வதியின் சோதரனே!
துச்சமென வினைநீங்கத் துதித்திடுவேன் நலமருள்வாய்!

(தமிழ் எழுத்துரு பிரச்சினையால் மறுபடியும் இடுகிறேன்)

Friday, January 9, 2009

தமிழைப் போற்றுவோம்!

சங்கம் மூன்றில் வாழ்ந்த
...தமிழில் காணும் யாவும்
பொங்கும் ஆர்வம் ஓங்க
...புதையல் என்னக் காண்போம்!
தங்கும் காதல் வீரம்
...சாற்றும் பக்தி கூறும்
தங்கம் மிஞ்சும் துங்கத்
...தமிழைப் போற்றிக் கற்போம்!

Wednesday, January 7, 2009

மணல் கோவில்!(படக் கவிதை)

கடலலையில் விளையாடிக் கையளைந்து மணல்வெளியில்
...கலைவண்ணம் விஞ்சிடவே என்னசெய்தாய்?
சுடரெனவும் வெங்கதிரோன் சுடுவதும்நீ உணர்ந்திலையோ?
...தொடர்ந்திடுமுன் செயலதனில் கண்ணானாய்!
தடமெனவும் மதிலெனவும் தலமமைத்து இறையவனார்
...சிவரூபம் லிங்கமென உருவமைத்தாய்!
படமெனவே இளமனதில் பதிந்திருந்த நினைவுகளும்
...பக்குவமாய் ஆலயமாய் வளர்ந்ததுவே!

காற்றுமழை வாராமல் கருணைசெய வேண்டுகிறேன்
...கலைந்திடாமல் ஆலயமும் விளங்கிடவும்
சாற்றிமலர் தூவிடவும் சந்நிதியில் பாடிடவும்
...சரம்சரமாய் கொன்றைதும்பை பூத்திருக்கும்!
ஏற்றமுடன் மண்சுமந்து எளியவந்திக் காளெனவே
...இறைவனவன் பிட்டுக்காய் அடிபட்டான்!
மாற்றறியாப் பொன்னான மகேசனின் அன்பினையே
...மனமுருகச் சொல்லிடுவேன் கேள்!குழந்தாய்!

கண்மூடித் துதிசெய்யும் கண்மணியே!கருத்துடன்நீ
...கட்டிவைத்த ஆலயமுன் கைவண்ணம்!
வெண்ணீறன் நீலகண்டன் விளையாடல் அறிந்திடுவாய்!
விழைந்தமைத்த மனக்கோவில் உறைபவனாம்!
தொண்டாகி நின்றவூர் தூயோனின் அம்பலத்தைத்
...தொழும்பூச லார்மனமே குடிலென்றான்!
மண்ணாலே சிவலிங்கம் மனங்கொள்ள நீசமைத்தாய்!
...மறையாமல் கணினியில் நின்றிடுமே!

நின்ற ஊர்--திருநின்ற ஊர்

Tuesday, January 6, 2009

சர்வமும் சக்தி!



விதமாய் அருளில் விளங்கிடும் தாயை வியந்திருக்கும்
பதமாய் உலகின் பசுமை வளங்கள் படர்ந்திடுதே!
நிதமாய் யுகமென நின்றிவ் உலகை உயிர்ப்பவளை
சதமாய் பணிந்துடன் சாற்றுவம் சர்வமும் சக்தியென்றே!

சக்தி!உனைக் கேட்டேன்!

சக்தி!உனைக் கேட்டேன்!

நிலையான அருளினுக்கோர் உறைவிடம்நீ!
...நிஜமென்று நம்புகின்றேன் பொய்யோ?
சிலையான உன்னிடத்தில் இரக்கமுண்டோ?
...சிறிதேனும் நடந்தவற்றைக் காண்பாய்!
கொலையான உயிர்களெல்லாம் உயிர்த்திடுமா?
...குமுறலினில் மானிடமும் பாழோ?
குலையாத அன்பினிலே திகழுலகைக்
...கொடுத்திடடி!சக்தி!உனைக் கேட்டேன்!

Monday, January 5, 2009

குழந்தையெனும் வரமே!



விழிநிறைந்த வியப்பே!--முகை
...விரியுமண மலரே!
மொழிமயங்கும் கவியே!--தவழ்
...முழுமதியின் அழகே!
பொழியுமழைத் துளியே!-- வளர்
...புதியபசும் பயிரே!
குழந்தையெனும் வரமே!--உயிர்
...குளிரவரும் இதமே!

Friday, January 2, 2009

உதிரி மலரே!



இறைவன் தாளில் ஏற்றமிக
...இயைந்து மிளிரும் உதிரிமலர்!
மறையின் உயர்ந்த வாழ்த்தொலியில்
...வணங்கித் தூவும் மலராவாய்!
குறையும் ஏனோ கொண்டிடுவாய்?
...குவளை நீரில் மலர்ந்திவாய்;
நிறைந்த வமைதி வேண்டிடுவோர்
...நெஞ்சில் நிறைவைத் தந்திடுவாய்!

செங்கதிரோன் வந்துதித்த தேசு.

செங்குடுமிச் சேவல் சிலிர்த்துடன் கூவிடவும்
பங்கயப்பூ உள்ளம் பரவசத்தில்--பொங்கிடவும்
தங்கமென மஞ்சலெழில் தாரணியும் பெற்றிடவே
செங்கதிரோன் வந்துதித்த தேசு.