Monday, August 24, 2009

அறுசீர்விருத்தங்கள்!

சந்தவசந்தக் குழு (த் தலைவர்) ஆசான் கவிமாமணி.இலந்தை அவர்கள்,
சிலவருடங்களுக்குமுன் கொடுத்தப் பயிற்சிக்கு செய்த
அறுசீர்விருத்தங்கள்...

கற்களைப் பதித்து வைத்தே
...கனகமாய் பூக்கள் தைத்தே
அற்புத அணிகள் பூட்டும்
...அன்னையின் கோலம் காட்டும்!
சொற்பதம் கடந்த அன்னை
...சொக்கிடும் அழகு தன்னை
கற்றவர் மற்றோர் எண்ணி
...கனிவுடன் தொழுவர் நண்ணி!

மற்றுமோர் பாடல்!

தோல்வியும் கூட வெற்றித்
...தொடக்கமே எழுவாய்த் தம்பி!
கால்கொளும் மண்ணில் மேழி
...கடினமாய் உழவு செய்தால்
பால்கொளும் செந்நெல் காணப்
...பாங்குடன் முடியும் அன்றோ?
மேல்வரும் உயர்வு கூட
...மேவியே முயற்சி செய்க!

2 comments:

Geetha Sambasivam said...

//கால்கொளும் மண்ணில் மேழி
...கடினமாய் உழவு செய்தால்
பால்கொளும் செந்நெல் காணப்
...பாங்குடன் முடியும் அன்றோ?//

அற்புதமான வரிகள். பால் கொள்ளும் செந்நெல், வயலிலில் இருந்து வரும் புது நெல் வாசனையை உணர முடிகிறது.


//மேல்வரும் உயர்வு கூட
...மேவியே முயற்சி செய்க! //

முயற்சிக்கணும், ஒரு காலத்தில் சுலபமாய் எழுத முடிஞ்ச கவிதைகள் இப்போ வரதில்லை! என்ன பண்ணறது? :( கற்பனையே வறண்டு விட்டதுனு நினைக்கிறேன். :D

Thangamani said...

அன்புள்ள கீதா!
உங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றி!

'முயற்சிக்க வேண்டும்' என்பது பிழை.
முயல வேண்டும்.
முயலுவேன்.
முயன்றேன்.
என்று சொல்லலாம்.
முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லலாம்.
கீதா, நானும் தவறாக 'முயற்சிக்கிறேன்'
என்று எழுதி,தவறு திருத்தப்பட்டேன்.

நான் இன்னும் வெவ்வேறு உத்திகளில் எழுத
ஆசை இருக்கு.முடியுமா ந்னு தெரியவில்லை.
நிறையபேர் எழுதுவதைப் படித்து ரசிக்கவே
நேரம் போதவில்லை.

அன்புடன்,
தங்கமணி.