(சந்தவசந்தக் குழுமத்தில் நடந்த 'சீட்டுக்கவி' என்னும் கவியரங்கில் கலந்து கொண்டு நான் எழுதிய கவிதைகள்.)
சிதாகாசம் மனமுனக்குள் சித்துவிளை யாடிடுமே!
நிதானத்தைப் பயிலுகின்ற நெறிதன்னை அளித்திடுவாய்!
இமயமாம் மலைகளிலும் இயற்கையிலும் தவசீலர்
அமையுமன உணர்வலைகள் அருள்செய்தத் தேசமிது!
வான்வெளியில் பறக்கின்ற வண்ணப் பறவைபோல்
நான் எண்ண வெளிபறக்க நத்திடுவேன் நல்மனமே!
மனமேநீ தோணி!யென்பேன் மக்களைக் கரைசேர்ப்பாய்!
மனமேநீ ஆழிய்!என்பேன் மந்திரமாம் உன்னொலியே!
மனமேநீ சக்தி!யென்பேன் வல்லமையே உழைப்பிலென்பாய்!
மனமேநீ! ஆலயம்! வரமாக இறைவருவான்!
மனமுன்னை வேண்டுகிறேன் வளம்பெருக வேண்டுமென்று
தனமொன்றே எண்ணமதாய்த் தடுமாறும் மானுடத்தைத்
தரமான நிலையாக்கு! தகவாகும் வலுவாக்கு!
உரமான உளமாக்கி உயர்வாக்கு! உனைக்கேட்டேன்
உன்னுள்ளில் ஒலிக்கின்ற உணர்வலைக்கு வண்ணமுண்டு!
வன்கண்ணும், வன்மமும் வன்மையும் வண்ணந்தான்!
உவகையும் சாந்தமும் உயர்த்திடும் வன்னமாம்!
தவமென்னும் சத்துவம் தருநிலையே உன்னதமாம்!
வளர்ச்சியில் பலநிலைகள் மனமேநீ! இருக்கின்றாய்!
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத் தாங்கிடுவாய்!
இளமையினில்,நடுவயதில்,இரங்கிடும் முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமேநீ! அமைந்திடுவாய்!
மனிதனுக்குள் உள்ளுணர்வாய் மனமுந்தன் சாட்சியுண்டு!
தனிமனித உயர்வினுக்கு சந்ததமும் கைகொடுப்பாய்!
மனிதனுக்கும் மனமுனக்கும் மாறாத போராட்டம்!
மனமிறுக்கம் மனமுளைச்சல் வரிசையாய் இவ்வுலகில்!
இன்றைய வாழ்க்கைமுறை இயங்குகின்ற வேகத்தில்
சென்றிடுமிந் நிலைமையினைத் தாங்கியருள்!ஓ!மனமே!
படிகின்ற மாசுகளைப் பக்குவமாய் நீக்கிவிட
முடிகின்ற விந்தையினை வரமாகக் கொடுமனமே!
கள்ளமின்றிக் கபடின்றிக் களங்கமில்லாப் பிள்ளைமனம்
வெள்ளையுள்ளச் சிரிப்பினிலே வியந்திறைவன் குடிபுகுவான்!
பிஞ்சு வயதினில் பிள்ளைமனம் தெய்வீகம்
அஞ்சும் ஆர்ப்பரிப்பில் அடங்காது வளர்ந்தமனம்!
கெஞ்சியுன்னைக் கேட்பதெல்லாம் கெடுதியில்லா நன்றினுக்கே!
தஞ்சமென்பேன்! இறையுணர்வில் தளைத்திடவை! என்மனமே!
குழந்தைமனம் வேண்டுகிறேன்! கொண்டிடுநீ கருத்தினிலே!
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!
அன்புடன்,
தங்கமணி.
வயசு கோளாறு
1 year ago
3 comments:
வளர்ச்சியில் பலநிலைகள் மனமே நீ
இருக்கின்றாய்
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத்
தாங்கிடுவாய்
இள்மையில்,நடுவயதில்,இரங்கிடும்
முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமே நீ
அமைந்திடுவாய்.......ஒவ்வொரு வரியும் மனம்தொடும் பதிவுகள் அம்மா....
அன்புள்ள வட்டுகோழி!
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!
என் கவிதை தளத்தில் இருப்பதற்கு
மிக்க நன்றி!!
(உங்கள் பெயரை எப்படி தமிழில்
சொல்வது?)
அன்புடன்,
தங்கமணி.
குழந்தைமனம் வேண்டுகிறேன்! கொண்டிடுநீ கருத்தினிலே!
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!//
ஆஹா, அருமை அம்மா, அருமையான வேண்டுகோள்
Post a Comment