முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின் ஏகம்பம் ஏத்தவே!
பாச மாகிய பற்றதும் நீங்கிட
நேச னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச னாருறை ஏகம்பம் ஏத்தவே!
மாடு மேலமர் மாதுமை பங்கனின்
ஆடு வான்கழல் அண்டிடு நெஞ்சமே!
பாடும் பக்தரைப் பார்த்தருள் செய்குவான்
ஈடி லான் திரு ஏகம்பம் ஏத்தவே!
சோத னைமிகு துன்பில் நலிந்து
வேத னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத மில்திரு ஏகம்பம் ஏத்தவே!
அம்மை பாகனாம் ஆடலில் வல்லவன்
வெம்மை யாம்வினை வீழ்ந்திடச் செய்பவன்
இம்மை வாழ்வினில் இன்னருள் நல்குவன்
எம்மை யன் திரு ஏகம்பம் ஏத்தவே!
4 comments:
//சோத .னைமிகு துயரில் நலிந்து
வேத .னைதனில் வீழ்வ தறிகிலாய்! //
அருமையான வரிகள். உணர்வுகளை நன்கு எடுத்துச் சொல்லி இருக்கு.
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே! //
உன்னுவை அர்த்தம் புரியலையே??
உன்னுகனு இருந்தால் புரிந்திருக்குமோ???
//உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே! //
//உன்னுவை அர்த்தம் புரியலையே??
உன்னுகனு இருந்தால் புரிந்திருக்குமோ???//
மிக்கநன்றி!கீதா!
உன்னுவை=உன்னுவாய்,எண்ணுவாய்,என்னும் பொருளில் எழுதினேன்.
அன்புடன்,
தங்கமணி.
//சோத .னைமிகு துயரில் நலிந்து
வேத .னைதனில் வீழ்வ தறிகிலாய்! //
'சோத .னைமிகு துன்பில் நலிந்து'
தளைதட்டலைச் சரிசெய்துள்ளேன்.
னைமிகு துயரில்= வெண்டளை பிறழ்கிறது(எடுத்துச் சொன்ன
சிவசிவாவிற்கு என் நன்றி!)
//அருமையான வரிகள். உணர்வுகளை நன்கு எடுத்துச் சொல்லி இருக்கு.//
மிகவும் நன்றி! கீதா!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment