Saturday, December 12, 2009

வரகவி ! பாரதி !


சந்தவசந்தத் தமிழ் குழுமத்தில்,நிகழ்ந்த 'பாரதி இன்றிருந்தால்'கவியரங்கில் பங்குப் பெற்று நான் எழுதிய கவிதைகள்.பாரதியாரின் பிறந்தநாளில் அவர் பதம் பணிந்து, இடுவதில் மகிழ்கின்றேன்!

வருவதைமுன் உணர்ந்துரைக்கும் வரகவியே!பாரதியே!
...வணங்கியுந்தன் திறம்வியந்து வாழ்த்துகின்றேன்!
பெருமையுறு தகவுடைத்துன் பீடுபெறு பக்திநிலை
...பிள்ளை யுன்சொல் கேட்கின்ற சக்திகண்டேன்!
திருநிறைவும்,நூறகவைசெம்மைசேர்வாழ்வினையும்
...தெளிவுடனே தருகென்றாய்! பெற்றிலையே!
வருவதுவும் போவதுவும் வான்சக்தி செயலதெண்ணும்
...மாண்பினையுன் வரமாக்கிக் வெற்றிகொண்டாய்!

ஐயா!உன் கனவுதனில் ஆற்றலுடன் தமிழோங்க
...அருமையான கவிதைதனில் எடுத்துரைத்தாய்!
மெய்யாகி உலகிலுயர் வான்மொழியாய் நிறைந்திலங்க
...வளர்கலைசொல் மொழிபெயர்நூல் தமிழொளிரும்
பொய்யாத தமிழமுதப் புதையலினை வெளிக் கொணர்ந்து
...புதுமையென உலகறியத் தந்திடுவோம்!
செய்யாதத் தவப்பயனாய்ச் செங்கவியாய்ப் பாரதி நீ!
...தமிழ்த்தாயின் மனங்குளிர வந்துதித்தாய்!

தண்டமிழில் நவரசத்தைச் சிறப்புற உன் கவிநயத்தில்
...தெய்வமணம் பெற உரைத்தாய் பாரதியே!
விண்டறிய ஒண்ணாத விஞ்சையையும் வியப்பினையும்
...வெள்ளந்தி மனமாக விரித்துரைத்தாய்!
கண்டுறையும் இனிமையினில் காதலினை,பக்தியினை
...கருணையையும், கனிவினையும் கலந்துரைத்தாய்!
மிண்டுகின்ற ஆளுமையில் மேவுகின்ற கவிதையினில்
...வரமெனவே சக்தியன்னை ஒளிர்ந்திடுவாள்!


5 comments:

Geetha Sambasivam said...

திருநிறைவும்,நூறகவைசெம்மைசேர்வாழ்வினையும்
...தெளிவுடனே தருகென்றாய்! பெற்றிலையே!//

ஆம், பாரதி சீக்கிரம் இறந்தது இத்தனை வருஷங்கள் கழிச்சும் வருத்தமாய்த் தான் இருக்கு.


//விண்டறிய ஒண்ணாத விஞ்சையையும் வியப்பினையும்
...வெள்ளந்தி மனமாக விரித்துரைத்தாய்!//
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன். அருமையாய்ச் சொல்லி இருக்கீங்க. நல்ல அருமையான கவிதைகளுக்கு நன்றி. இதைவிடச் சிறந்த நினைவுப் பரிசு பாரதிக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

jeevagv said...

ஆகா, அருமை, வேறெனசொல வாயெழமலே

வியக்கிறேன், வாழ்க கவிதை!

Thangamani said...

அன்புள்ள கீதா!
நன்றி!கீதா!
பாரதியின் நினைவு நம்மைப் புதுப்பிக்கும்!
அவன் புகழ் பாடுவோம்!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்புள்ள ஜீவா!
மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

chinathambi said...

நல்ல இடுகை..
Download Bharathiar Songs MP3
http://chinathambi.blogspot.com