சிட்டாகப் பறந்தோடும் சிறுவயது நினைவுகளில்
பட்டாசு மத்தாப்பூ பரவசமாம் தீபஒளி!
புத்தம் புதுவுடையாம் பூப்பூத்தச் சீட்டியிலே
சுத்தி மகிழ்ந்திருப்பேன் சுவைமலரைப் படித்திடுவேன்!
தின்னத் திகட்டாதத் தேன்குழல் மைசூர்பா
என்னநான் சொல்லுவது என்னம்மா கைவண்ணம்!
ஓலைவெடி யானைவெடி ஊசிவெடி சீனவெடி
காலைமுதல் நாள்முழுதும் கலகலக்கும் வெடியொலிகள்!
பொட்டி மத்தாப்பூ புஸ்வாணம் பூமுத்தாய்க்
கொட்டி உதிந்திடுமே கொள்ளை அழகுடனே!
சர்ரென்று தரைசுழலும் சங்குச் சக்கரந்தான்
விர்ரென்று ஏரோப்ளேன் விண்பறக்கும் அதிசயந்தான்!
வெடியெல்லாம் சோதரர்கள் வெடித்திடுவர் ஆர்வமுடன்
படபடக்கும் இதயத்துடன் பார்த்திருப்பேன் பயத்தோடு!
வயசு கோளாறு
10 months ago
2 comments:
//தின்னத் திகட்டாதத் தேன்குழல் மைசூர்பா
என்னநான் சொல்லுவது என்னம்மா கைவண்ணம்//
எத்தனை வயசானாலும் அம்மா, அம்மா தான்! இப்போல்லாம் யாரும் வீட்டிலே எதுவும் பண்ணறதும் இல்லை. எங்க வீட்டிலே வீட்டுப் பட்சணங்கள் தான் இன்னி வரைக்கும்.
//வெடியெல்லாம் சோதரர்கள் வெடித்திடுவர் ஆர்வமுடன்
படபடக்கும் இதயத்துடன் பார்த்திருப்பேன் பயத்தோடு! //
ம்ம்ம்ம் அண்ணா, தம்பியோட சண்டை போட்டுப் போட்டி போட்டு வெடிக்கப் போவேன். அப்பா திட்டுவார்! :)))))))))
அன்புள்ள கீதா!
உங்கள் பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.
பொறுமையாகவும்,அழகாகவும் பின்னூட்டம்
இடுவதில் முன்னால் நிற்கிறீர்கள்!என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!
(பின்குறிப்பு:இதுபோல் நானும் உங்கள் அனைவரின் பதிவுக்கும்
பின்னூட்டம் இடும் ஆவல் நிறைய உண்டு.)
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment