மாரியம்மன் பண்டிகையில் மனமுருகும் பக்தியுடன்
தேரிழுக்க ஊர்முழுக்கத் திரண்டு வந்திடும்!
சொந்தபந்த உறவுகளும் சுற்றமுடன் ஒன்றாக
வந்தகதை போனகதை மகிழ்ந்து பேசுவார்!
வீட்டினிலே காய்கறிகள் விருந்துக்குப் பலகாரம்
பாட்டிசொன்ன சமையலினைப் பக்குவமாய் செய்கையிலே
இரவுநேரம் முதலாட்டம் இடைவேளை விடும்போதில்
பிரியமாக மாமனுடன் பிள்ளைகளும் சென்றனரே!
அஞ்சுவயது சின்னமகன் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்
பிஞ்சுமனம் மகிழ்ந்திடவே பின்னாலே அனுப்பிவைத்தேன்!
பரிவாக மாமனுமே பந்துகளூம் பொம்மைகளும்
பெரிதான வண்ணபலூன் பிள்ளைகளின் பரிசென்றார்!
ராட்டினத்தில் ஏற்றிவிடும் பொழுதினிலே
கூட்டத்திலே சிக்கியஎன் குட்டிமகன் பிரிந்துவிட்டான்!
மாமனுடன் பிள்ளைகளும் மனம்பதறி ஓடியெங்கும்
ஏமாந்தோம் என்றலறி ரோடெல்லாம் தேடுகையில்,
வீடுவரத் தெரியாமல் விழிமல்க அழுகின்றான்!
தேடுகின்ற மனமுழுதும் திகில்நிறைந்து காண்கின்றது!
வண்ணபலூன் கைப்பிடித்து வழியெல்லாம் நடக்கின்றான்
கண்ணெதிரில் பால்கார கண்ணனெனும் நண்பனவன்
ஆசையுடன் பலூன்பார்த்து அழகாக இருக்குதென்று
பேசுமுன்னே என்மகனும் பெரிதாக அழுகின்றான்!
வீட்டுக்குப் போகும்வழி மறந்துவிட்டேன் என்றவுடன்
காட்டுகிறேன் உன்வீடு கவலையின்றி வாவென்றான்,
திரையரங்கு வரும்போதுத் தெளிவாக சொல்கின்றான்
விரைவாக என்மகனும் வீடிங்கே இருக்குதென்றான்
அங்கிருந்து ஓட்டம்தான்! அடுத்துவீடு வந்தவுடன்
பொங்கிவரும் அழுகையுடன் புகல்கின்றான் மைந்தனும்தான்!
"காணாமே போனேன்மா!" கைப்பிடித்த பலூனுடன்,
காணாமே போனாயோ1" கண்ணேஎன்(று) அணத்(து)அழுதேன்!
வயசு கோளாறு
11 months ago
3 comments:
அருமை! என் மனத் திரையில் என்றென்றும் பதிந்திருக்கும் வாழ்க்கை நினைவை கவிதையாக பதிவித்திருக்கிறாய்! நன்றிகள்! எப்போதும் குற்ற உணர்வுடன் ந்யாபகம் வரும் நிகழ்ச்சியினை கவிதையாகப் பார்க்கும்போது மாறுதலாயுள்ளது! பின்னாளில் என் மகனை பாரீஸில் அவனது ஐந்து வயதில் மொனலிசா ஒவியம் முன் தொலைத்த போது வந்து போன உணர்வலைகள் உன் எண்ணத் தவிப்புகள் என்னவாக இருந்திருக்குமென்று உணர வைத்தன;ஆனால் என்னால் உன் போல் அழகு கவிதையாக எழுத ஒருக்காலும் முடியாது!
(கண்டு பிடித்து கொணர்ந்தது ஒரு ஆங்கிலம் பேசிய ஐரோப்பிய பெண்மணி! விக்கி சூழ் நிலையின் தீவிரம் சற்றுமின்றி யதார்த்தமாக சற்றும் கவலையின்றி சொன்னதோ 'I went with this lady!')
திப்பிலி.
விக்கி தொலைந்து கிடைத்த விவரம்
இந்தப் பாடலினால் தெரிந்தது!
இல்லாவிடில் தெரிந்திருக்காது!
எவ்வளவு பெரிய ஷாக்!
வெளிநாட்டில் காணாம போனா கிடைக்கறது கஷ்டம்தானே?
தெய்வாதீனமா ஆங்கிலம் பேசும் பெண்ணினால் கிடைத்தான்!
நன்றி சொல்லணும் அந்த முருகனுக்கு!
அன்புஅம்மா,
தங்கமணி.
அழகு :) நிறைய எழுதுங்க :)
Post a Comment