Sunday, November 30, 2008

மோனசக்தி!

காலதன் மூலம் எங்கு?
...கதிதொடர்ந்(து) ஏகல் எங்கு?
சூலுறைக் கருவும் கொள்ளும்
...சூக்கும வளர்ச்சி என்ன?
தாலுறப் பாடும் பாட்டில்
...தனிச்சுவை காணும் சேய்போல்
மூலமாம் சக்தி சுட்டும்
...மோனமாம் செய்கை கொள்வோம்!


கால்=காற்று.

Saturday, November 29, 2008

புண்ணிய சோதியைப் போற்றுவோம்!

விண்ணதி கூன்பிறை வேணி சூடியும்
பெண்ணிட மணிந்தொரு பதந்தந் தாடிடும்
கண்ணுத லாதியாய்க் கருணை காட்டும் அப்
புண்ணிய சோதியைப் பொலியப்போற்றுவம்.

Thursday, November 27, 2008

இயற்கைக் காட்சி!

மனதை ஈர்த்து மகிழும் காட்சி
...மாந்தக் கோடி கண்களாம்!
கனவோ? மெய்யோ? களிக்கும் உள்ளம்
...கவிதைப் பொங்கச் செய்திடும்!
நினைவில் பசுமை காவியம்!
...நிகரில் லாத ஓவியம்!
வனங்கள்,தருக்கள்,மலைநீர் வீழ்ச்சி
...வளமை கூட்டும் இயற்கையே!

பிழைசரிசெய்து இட்டேன்.

Monday, November 24, 2008

இறை செயலாம்!

விந்தைமிகு சக்தியில் விரைந்திடும் கோள்களின்
...வேகமும் நெறிகளும் எவர்பொறுப்பாம்?
முந்தையபல் யுகங்களாய் முறையுடன் நீதியின்
...ஒழுங்குடன் சுழலுதல் எவர்செயலாம்?
பந்தவினைத் துன்பினைப் பற்றிடும் மாந்தரைப்
...பரிவுடன் காத்திடும் இறைசெயலாம்!
சந்ததமும் அவனையே சார்ந்திடும் சிந்தையும்,
...,தளர்விலா வாழ்வையும் வேண்டுவமே!

Friday, November 21, 2008

ஈசன் கோலம்!





ஆடிடும் தாண்டவம் அளித்திடும் பரவசம்
...அய்யனின் ஞான ரூபம்!
நாடிடும் கொன்றையும் நலம்தரும் மருவுடன்
...நறுமண,மல்லி,ரோஜா
சூடிடும் மாலைகள் சொன்னமாய் அணியுடை
...ஜொலித்திடும் ஈசன் கோலம்!
கோடியே கொடுப்பினும் கொண்டிடா மகிழ்ச்சியை
...கூத்தனின் பாதம் சேர்க்கும்!

Wednesday, November 19, 2008

இசைக்கீடில்லை!





கீதம் மனம்கொள கேட்க மகிழ்வுறும்
...கீர்த்தி யுறுமுயர் பாடலில்
நாத முடன்சுர ஞானம் கமகமும்
...நாடும் சுருதியும் ராகமாய்
வேதம் நிகருறும் மேலாம் கிருதியும்
...மேன்மை பெறுமுயர் சாதனை
போத நிலையெனும் பூதி அடைந்தவர்
...போற்றித் தருமிசை கீடிலை!

Tuesday, November 18, 2008

புரிந்திடா நீதி!

தென்றல் காற்றதன் இங்கித இதமுடன்
..தெம்பினைத் தந்திடு தல்போல்,
அன்னை சக்தியின் கருணையும் அருளுமே
..அழிவிலா சாந்தியை சேர்க்கும்!
வன்மை புயலெனும் சூறையின் பயங்கரம்
..வையகம் கலங்குதல் போல
உன்ன நடுக்குறும் சக்தியாம் காளியின்
..உருவமும் புரிந்திடா நீதி!

Monday, November 17, 2008

ஊ(ஞ்)சல்!

ஊச லாடும் உள்ளமே! ஓடி யாடித் துள்ளுமே!
தேசு லாவும் தண்மதி!தேய்ந்தி டாத வெண்மதி!
பூசை யாகும் பண்ணிசை!போற்றி மோதும் எண்டிசை!
ஈசன் நாமம் எண்ணமே!ஏற்றம் வாழ்வில் திண்ணமே!

Sunday, November 16, 2008

இறையருள் துணையே!

வாழ்வில் எதுவும் வசப்படக் கூடும்
..வழியை வகுத்திடு மனமே!
தாழ்வும் உயர்வும் சமமென ஏற்கும்
..தகவை உணர்ந்திடு உளமே!
காழ்ப்பை விடுத்துக் கருணையில் ஆழ்ந்து
..கருத்தில் பக்குவ நிலைகொள்!
சூழும் வினையாம் சுழல்தனை நீக்கும்
..சுகமாம் இறையருள் துணையே!

Saturday, November 15, 2008

சிவம்பெறுவோர் சீர்!

சிலப்பதிகார வரிப்பாடல்போல் அமைத்த பாடல்.

கத்திதனைக் கவளிகையில் மறைத்துப் பொய்யாய்
சுத்தசிவ வேடமுடன் சுரியெடுத்தல் அறிந்தும்
"தத்த!"நமர் என்றவர்தம் தகவினைவான் உயர்த்தும்
சித்துடையார் சீர்கேளாச் செவியென்ன செவியே!
சிவம்பெறுவோர் சீர்கேளாச் செவியென்ன செவியே!

நாண்மலர் தூவுவோம்!

ஏடு தந்தவன் ஏறு கொண்டவன்
...ஏற்றம் சொல்லிடக் கூடுமோ?
பாடு கின்றவர் பாட்டை தீர்ப்பவன்
...பக்தி கொண்டவர்ப் பாங்குளான்
காடு (உ)கந்தவன் கான மன்றினில்
...காலம் காலமாய் ஆடுவான்
தேடு நற்கழல் தேர்ந்து சிந்தையில்
...தேக்கி நாண்மலர் தூவுவோம்!

Friday, November 14, 2008

வெண்பா

பொதுவாகும் மேடை புரிந்தாடும் கூத்தும்
அதிலாடும் யாவும் அவனால்!--எதுவும்
விதியாகிக் காட்டும் வினைதீரச் செய்யும்
மதிசூடி பூந்தாள் மலர்ந்து.

பாடல்

கண்ணில் தெரியும் கனவில் தெளிவுறும்
எண்ணம் வெளிப்பட ஏதுசெய்தீர்?--எண்ணும்
கருத்தினில் ஓங்கிக் கதிரொளி வீச்சாய்
திருத்திகழ் பாடல்செய் தேன்.

Wednesday, November 12, 2008

ஓவம் உணர்த்தல் உயர்வு.

படப் பாடல்!

தென்னைமரக் கீற்றினிலே தீங்குரலில் பாட்டிசைக்கும்
கன்னங் கருங்குயிலின் காட்சிசொல்லும்-- என்னசெய்தி
சீவன் பரம்பொருளைத் தேடும் தவநிலையை
ஓவம் உணர்த்தல் உயர்வு.

Tuesday, November 11, 2008

முத்திக்கு உத்திதரும் முத்து!

தித்திக்கும் பத்திக்கும் சித்திக்கும் நித்தனவன்
எத்திக்கும் சத்திக்க ஏத்திடுவோம்-- சித்தனருள்
பத்திநகை புத்தொளியாம்;பத்துவிட சத்திதரும்,
முத்திக்கும் உத்திதரும் முத்து.

Monday, November 10, 2008

ஒரு படப்பிடிப்புக் கவிதை!

மாரியம்மன் பண்டிகையில் மனமுருகும் பக்தியுடன்
தேரிழுக்க ஊர்முழுக்கத் திரண்டு வந்திடும்!

சொந்தபந்த உறவுகளும் சுற்றமுடன் ஒன்றாக
வந்தகதை போனகதை மகிழ்ந்து பேசுவார்!

வீட்டினிலே காய்கறிகள் விருந்துக்குப் பலகாரம்
பாட்டிசொன்ன சமையலினைப் பக்குவமாய் செய்கையிலே

இரவுநேரம் முதலாட்டம் இடைவேளை விடும்போதில்
பிரியமாக மாமனுடன் பிள்ளைகளும் சென்றனரே!

அஞ்சுவயது சின்னமகன் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்
பிஞ்சுமனம் மகிழ்ந்திடவே பின்னாலே அனுப்பிவைத்தேன்!

பரிவாக மாமனுமே பந்துகளூம் பொம்மைகளும்
பெரிதான வண்ணபலூன் பிள்ளைகளின் பரிசென்றார்!

ராட்டினத்தில் ஏற்றிவிடும் பொழுதினிலே
கூட்டத்திலே சிக்கியஎன் குட்டிமகன் பிரிந்துவிட்டான்!

மாமனுடன் பிள்ளைகளும் மனம்பதறி ஓடியெங்கும்
ஏமாந்தோம் என்றலறி ரோடெல்லாம் தேடுகையில்,

வீடுவரத் தெரியாமல் விழிமல்க அழுகின்றான்!
தேடுகின்ற மனமுழுதும் திகில்நிறைந்து காண்கின்றது!

வண்ணபலூன் கைப்பிடித்து வழியெல்லாம் நடக்கின்றான்
கண்ணெதிரில் பால்கார கண்ணனெனும் நண்பனவன்

ஆசையுடன் பலூன்பார்த்து அழகாக இருக்குதென்று
பேசுமுன்னே என்மகனும் பெரிதாக அழுகின்றான்!

வீட்டுக்குப் போகும்வழி மறந்துவிட்டேன் என்றவுடன்
காட்டுகிறேன் உன்வீடு கவலையின்றி வாவென்றான்,

திரையரங்கு வரும்போதுத் தெளிவாக சொல்கின்றான்
விரைவாக என்மகனும் வீடிங்கே இருக்குதென்றான்

அங்கிருந்து ஓட்டம்தான்! அடுத்துவீடு வந்தவுடன்
பொங்கிவரும் அழுகையுடன் புகல்கின்றான் மைந்தனும்தான்!

"காணாமே போனேன்மா!" கைப்பிடித்த பலூனுடன்,
காணாமே போனாயோ1" கண்ணேஎன்(று) அணத்(து)அழுதேன்!

Friday, November 7, 2008

சிவன் துதி.


மஞ்சுதவழ் வளரிமய மலைமகளுன் இடமாக,
...மதிநதியும் விரிசடையும் இலங்கிடவும்,
நெஞ்சுநெகிழ் பக்தியுடன் நீலகண்ட! உன்கோலம்
...நினைந்தென்றன் வினைதீர்க்க வேண்டிடுவேன்!
தஞ்சமெனில் அபயமெனும் சர்வேச!உன்கரமே!
...தாண்டவத்தில் மோனதவ முகமொளிரும்!
செஞ்சிலம்பு மலரணிதாள் சீர்த்தியினில் மனமுருகச்
...செய்திடுமுன் அருள்திறத்தை என்னசொல்வேன்!

Wednesday, November 5, 2008

"மிஞ்சும் மிருதங்க மே"

வெண்பாவின் ஈற்றடி:

"மிஞ்சும் மிருதங்க மே"

சொக்கவைக்கும் தாளங்கள் சொற்கட்டில் மின்னிடியாம்
பக்குவமாய்ப் பாட்டிசைப்போர்ப் பக்கபலம்!--மிக்குயர்ந்த
அஞ்சருவி பாறைமேல் ஆர்ப்பரிக்கும் சந்தநடை
மிஞ்சும் மிருதங்க மே.

Tuesday, November 4, 2008

"சேலை அவிழ்ந்தது"

வெண்பாவின் முதற்சீர் "சேலை அவிழ்ந்தது"

சேலை அவிழ்ந்தது; சீராகக் கட்டுகின்றாள்
சோலை மலரழகுச் சுந்தரியாள்!--வேலைசெலும்
தாயறியாப் போதிலவள் தானுடுத்த ஆசைகொண்ட
சேயவளும் சின்னப்பெண் தான்.

Monday, November 3, 2008

சொல்லால் அழியும் துயர்!

சொல்லால் அழியும் துயர்!

வெல்வேல் முருகன் தாள் வேண்டித் துதித்திட்டால்
வல்வினையும் தீர்ந்துவிடும் வாழ்வுயரும் -- பல்விதமாய்
நல்மனதால் நாடிடவே ஞானவடி வேலனெனும்
சொல்லால் அழியும் துயர்.

Sunday, November 2, 2008

"காரம் இனித்திடுமே காண்."

வெண்பாவின் ஈற்றடி:

"காரம் இனித்திடுமே காண்."

சிந்தை குடிகொண்ட சிங்கார வேலவனை
வந்தனை செய்து வணங்கிடுவாய்! -- சந்ததமும்
வீரவேல் சக்திநிறை வெற்றியினில் கந்தரலங்
காரம் இனித்திடுமே காண்.

Saturday, November 1, 2008

என்றன் மகனாம் இவள்.

வெண்பா ஈற்றடி
"என்றன் மகனாம் இவள்"
நான் இட்ட வெண்பா:

பொன்னழகுப் பாவையிவள்!புத்தழகுப் பூவையிவள்!
பெண்ணழகுக் கோலம் பெரிதுவந்தார்! --மன்றமதில்
வென்றிடவே பெண்ணாக வேடமிட்டோன் தாய்சொன்னாள்
என்றன் மகனாம் இவள்.

"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சந்தவசந்த மட்டுறுத்துனர்(மாடரேட்டர்)
கவிமாமணி திரு.இலந்தை அவர்கள் சந்தவசந்தக் குழுமத்தில்
அளித்த பலவிதக் கவிதைப் பயிற்சிகள் உன்டு.அவற்றில் ஒன்று
வெண்பாவின் ஈற்றடி:
"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சேயெனக்குக் காட்டிவிட்டாய் செம்மைநெறி!சூழும் உன்
நோயினில் என் சேயாக நோக்கிடுவேன் -- பாயுமன்பில்
தாயன்றி யாருமில்லை!தாங்குகின்ற தெய்வந்தான்
நீயென்றேன் நீயென்றாய் நீ.

பிழை சரிசெய்தபின்னர் இட்ட வெண்பா.