சின்ன வயதினில் சிரித்திடும் வாழ்வினில் ...சேர்ந்தே கூடி மகிழ்ந்ததுமேன்? பின்னர் வறுமையின் பிடிதனில் மூழ்கியே ...பீழையாகிப் போனதுமேன்? இன்னல் வளர்ந்திடும் ஏழ்மையில் உறவுகள் ...எங்கோ காணோம் என்றதுமேன்? என்ன நினைவுகள்! எத்தனை நிகழ்வுகள்! ...இன்று காலம் மருந்தாகும்!
கண்ணால் காணும் பொருளாய் ...காட்சி அருளும் ஒளிப் பிழம்பே! தண்ணார் புனலாய் வளியாய் ...தரணி காக்கும் பரஞ்சுடரே! விண்ணோர் பரவும் விடையூர் ...விமலன் அருணா சலசிவமே! பண்ணார் இசையில் உனையே ...பணிந்து பாடும் வரமருள்வாய்!