Friday, August 13, 2010

சிவனைத்துதி மனமே! --7

குந்தகம் செய்யும் பந்தமாம் கட்டில்
...கொண்டிடு துன்பம் மண்டிடும் வேளை
இந்தினைச் சூடும் செந்தழ லோன் தாள்
...எண்ணிடத் தீரப் பண்ணிடு வானே!
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற
...ஒப்பிலாத் தேவைத் துப்பெனக் கொள்வாய்!
சுந்தரன் நஞ்சக் கந்தரன் தன்னைச்
...சுற்றமென் றேற்றிப் பற்றிடு நெஞ்சே!

துப்பு=பற்றுக்கோடு.

முந்திடு அன்பால் இந்தனம் விற்ற = இசைவாணன் பாணபத்திரனுக்காய் விறகு விற்பவனாய் வந்து, சிவபெருமான் அருளியது.

1 comment:

Geetha Sambasivam said...

மதுரை ஆவணி மூலத் திருநாளின் வளையல் விற்ற படலமும், விறகு விற்ற படலமும் நினைவில் வந்தது. தலையில் விறகுச் சுமையோடு சொக்கநாதர் ஆவணி மூல வீதிகளில் வலம் வருவார். அற்புதமான காட்சி! பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு! :(