Wednesday, December 31, 2008

வறுமை நலிக!

வறுமை நலிக!
(படக் கவிதை)

வசிக்கும் குடிசையில் மக்களின் வாழ்வை
நசிக்கும் வறுமை நலிக!--பசிக்கு
விசித்த வயிறடங்கும் விற்றபொம்மை காசாய்
புசிக்கும் உணவாகும் போது.

Tuesday, December 30, 2008

பச்சை வண்ணம்!

பச்சை வண்ணம்!

எண்ண வியப்பளிக்கும் இனியநல் வண்ணங்கள்
என்னைக் கவர்ந்திடுதே ஈடில்லாப் பச்சைநிறம்!

பச்சை வண்ணனணி பசும்துழாய் மாலைகளும்
இச்சைமண மரிகொழுந்து, இன்மருவும் பைந்நிறமே!

வெள்ளைநிறம் செவ்வண்ணம் மஞ்சளொடு வான்நீலம்
கொள்ளை நிறங்களுடன் குவிந்திருக்கும் மலர்க் கூட்டம்!
அத்தனையின் பின்னணியில் அண்டிநிற்கும் பசுங்காம்பும்
சித்திரமாய் அழகுதரும் செழுமைபெறு இலைகளுமே
(thodarum)

Monday, December 29, 2008

"சாயம் வெளுத்த சரக்கு"

வெண்பாவின் ஈற்றடி"சாயம் வெளுத்த சரக்கு"

சித்தருடன் ஞானியரும் சிந்தித்துச் சொன்னவை
சித்திபெறும் மெய்வழிச் சேர்வதையே!--நித்தியமில்
மாய மலக்கினில் மையல் முடிவில்மெய்
சாயம் வெளுத்த சரக்கு.

Sunday, December 28, 2008

மனதில் நினைவாக

மனதில் நினைவாகப் பதிந்த
..வழிச்சுவடு மங்கி மறைந்திடுமா?
கனவில் நிஜம்காணும் மயக்கம்
..கரைந்துவிடும் மணலில் அலையாக
நினைவில் சிறுவயதின் நிகழ்வை
..நிழலெனவேத் தோன்றும் கதையாக
புனைந்து அனுபவமாய் உணர்த்தும்
..புதுமையினை கூறும் திரைப்படமே!

Saturday, December 27, 2008

குமரன் அழகு!





மழையில் கலவம் மகிழ்வுற விரித்திடும்
...மஞ்ஞையின் நடனம் அழகு!
பொழிலில் மணமாய்ப் புதுப்புது நிறங்களில்
...பூத்திடும் மலர்கள் அழகு!
விழையும் உளமாம் வெளியினில் நிலைத்திடும்
...சித்தமும் மவுன அழகு!
இழையும் அணியும் இசைவுடன் இலங்கிடும்
...இன்னருள் குமரன் அழகு!

Friday, December 26, 2008

"என்னால் முடிந்த திது"

வெண்பாவின் ஈற்றடி "என்னால் முடிந்த திது"

பொன்னான எண்ணங்கள் பூக்கின்ற உள்ளமிதில்
தன்னாலே மேன்மை தழைத்திடும்!-- பன்னாளும்
தொன்னூல் பலகற்கத் துய்யறிவு வேண்டுவேன்
என்னால் முடிந்த(து) இது.

பாரதிநீ!



சக்திச் சுடரொளிநீ!சத்துவத்தின் சாட்சியும்நீ!
பக்திக் கடலொலிநீ!பாரதிநீ!-- திக்கின்றி
திண்டாடும் பாரதத்தைத் தேசுமிகு பாக்கனலால்
பண்பாடி ஊக்கியதுன் பாங்கு

Sunday, December 21, 2008

கூட்டம்!

கண்ணுக்குக் காட்சிகளே கூட்டம், சிந்தைக்
...களத்துக்கு எண்ணங்கள் கூட்ட மாகும்!
உண்ணிற்கும் நினைவலைகள் ஒருகூட் டம்தான்,
...உருவாகும் கருத்தினிலே கலைகள் தோன்றும்!
மண்ணுக்குப் பெருகுகின்ற மக்கள் கூட்டம்
...விண்ணுக்குப் பொழியுமழை மேகக் கூட்டம்
பண்ணுக்கு அருட்பாக்கள் படைப்புக் கூட்டம்!
...பலவிதமாய் திருவருளைப் பாடிப் போற்றும்!

Friday, December 19, 2008

தீரர் மாண்பு போற்றுவோம்!

சுதந்திரமாம் வேள்வி தன்னில்
...சுத்தவீரர் தேசம் காத்த
விததன்னை உரைக்கப் போமோ?
...விடுதலைக்காய் சுற்றம் நீங்கி
இதந்தருநல் வாழ்வும் நீத்து
...இன்னல்கள் கோடி ஏற்றார்!
பதம்பணிவோம்! தீரர் மாண்பை
...பார்புகழ உயர்த்திச் சொல்வோம்!

Thursday, December 18, 2008

பொன் மாலை!

எத்தனை நிறங்களோ எத்தனை வகைகளோ
...எத்தனை கோலங்களோ?
புத்தியில் தெரிந்திடும் போதியாய் ககனமும்
...பொற்புறும் மாலைஅந்தி யே!
வித்தினில் மரமென விறகினில் நெருப்பென
...வெண்ணையாய்ப் பாலுக்குள் ளே!
வித்தைகள் காட்டிடும் வித்தகன் பெருமையை
...விரித்திடும் பொன்மாலை யே!

Wednesday, December 17, 2008

அருளைப் பொழிவாயே!

மழுமான் உடுக்கை மதி,ஆறு,
...மடவாள் உமையும் உடனாகக்
எழுமுன் நடனம் எழிலாகும்!
...இறைவா! நீயும் உயர்ந்தோங்கிக்
கழலும் முடியும் மறைத்தாயோ?
...கனலாய் அருணை ஒளியானாய்!
விழலாய்ப் பிறவி அழியாமல்
...விழைந்துன் அருளைப் பொழிவாயே!

Monday, December 15, 2008

மார்கழி தரிசனம்!

குளிர்பனி விடியலில் இறைவனின்
..கொலுவினை அடியவர் பரவுவர்!
தளிர்விரல் சிறுமியர் கவினுறத்
..தரையினில் கோலமும் இடுவரே!
ஒளிமலர் பூக்களும் இடைஇடை
..உயர்ந்தநல் திருவினை அளித்திடும்!
களியினில் பிறந்திடும் பரவசம்!
..கண்கவர் மார்கழி தரிசனம்!

Thursday, December 11, 2008

காலைக் காட்சி!

காலைக் காட்சி!

கவிமாமணி.இலந்தை அவர்கள் கொடுத்த ஈற்றடி:

"சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!"


காலையில் உலகினை கதிரொளி எழுப்பிடும்
...கடமையை கண்டுகொள் வாய்!
வேலையின் அலைகளில் விரிகதிர் ஒளிசெயும்
...வியத்தகு பொன்னிறம் காண்!
பாலையில், கானகப் பரப்பினில் வெயில்தரல்
...பகலவன் நோக்கமொன் றே!
சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!

காலைக் காட்சி (தொடர்ந்து)

சாலையில் இயங்கிடும் சந்தடி அரவமும்
...சாற்றிடும் காலையென் றே!
கோலமும் திருப்புகழ் கூறிடும் பாடலும்
...கோவிலாய் வீடுதோன் றும்!
பாலமாய் இணைந்திடும் பண்பினைக் கூட்டிடும்
...பயணமும் விடியலா கும்!
காலையின் ஆட்சியில் கண்டிடும் காட்சிகள்
...கலையென மகிழ்வுசேர்க் கும்!

காலைக்காட்சி

ஆடவும் பாடவும் அருமுடல் பயிற்சியும்
...அமையுநற் காலையா கும்!
ஓடவும் மனந்தனை ஒருமுகப் படுத்தவும்
...உயர்ந்திடும் காலையா கும்!
பாடமும் கருத்தினில் படிப்புமாய் இளைஞரின்
...பள்ளிநாள் சென்றுபோ கும்!
வேடமாம் முதுமையை வெறுத்திடா வாரிசின்
...விரிந்தநல் அன்புவாழ் க!

Monday, December 8, 2008

கலைமகள் துதி!

தாயே வாணி! வருவாய்நீ!
...தஞ்சம் அடைந்தேன் அருள்வேண்டி,
தூயே! எழுதும் திறம் ஊக்கி
...சொல்லும் கருத்தும் இசைவாக்கு!
ஓயா துன்னை இதுகேட்பேன்!
...உனக்கே அருளத் தடையுண்டோ?
சேயேன் தாயுன் தயைப்பெற்றுத்
...திகழும் மேலாம் கவிசெய்வேன்!

Saturday, December 6, 2008

மலர்கள்!

மலர்கள்!
=======
தென்றலினில் அசைந்தாடும் தேமதுரப் பூஞ்சிரிப்பில்
...செம்மலரும் மழலையுந்தான் ஓரினமே!
மின்னொளிரும் பொன்பூக்கும் மென்மையினில் மிஞ்சுகின்ற
...வண்ணமலர் மணம்கூடும் கோலமென்ன!
தன்னிகரில் இயற்கைத்தாய் தவமாகப் பெற்றனளோ?
...சந்ததமும் இறையழகை நினைவூட்டும்!
என்னவிதம் புகழ்வமிந்த எழில்மலர்கள் கொள்ளைதனை
...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1

Thursday, December 4, 2008

நகைச்சுவைப் பாடல்!

பள்ளிசெல்லும் அவசரத்தில் பரபரப்பாய் சிறுமியவள்;
...பலவகையாய்ப் பேனாவால் இன்னலுற்றாள்!
எள்ளிநகை யாடுமண்ணன் "என்னஎன்ன சொல்லிடுநீ
...எளிதாகச் சரிசெய்வேன்!" தங்கையவள்
சிள்ளெனவே சொல்கின்றாள் "திருகதிரு கதிருகுது"
..."திகிடதிகி டதிகிடதொம்"அண்ணனவன்
தெள்ளமுதச் சொற்கட்டில் சிரிப்பலைகள் மிஞ்சிடவே,
...சேர்ந்தொன்றாய் பள்ளிசெல்ல விரைந்தனரே!

யாதும் அன்பின் ஆட்சி !

வாதம் மோதும் பேச்சில்
...வாழ்வின் மேன்மை தோன்றுமோ?
பேதம் நீங்கி உண்மை
... பேசும் உள்ளம் வேண்டுமே!
தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்!
யாதும் அன்பின் ஆட்சி
...என்று கொண்டால் சாந்தியே!

Monday, December 1, 2008

மனமே! வாழி!

கடலாய் வானாய் தோணியுமாய்
...காற்றாய் கடுகிச் செல்லுவதாய்
படமாய்ப் பசுமை காட்சிகளைப்
...பற்றிப் படரும் நினைவுகளாய்
தடமாய் நெறியைக் காட்டுகின்ற
...தகவாய் விளங்கும் உள்ளுணர்வாய்
புடமாய்ச் சுடரும் பொன்னிகர்த்த
...புரையில் மனமே நீவாழி!