Saturday, September 27, 2008

விகிர்தா!அருள்வாய்!

விழுதாய் மனதுனை விழைந்தே படர்ந்திட
...வேண்டி உனையே நாடேனோ?
அழுதே பலமுறை அகந்தை அழிந்திட
...அருள்வாய் எனவே பாடேனோ?
தொழுதே பதமலர் துணையாய்க் கருத்தினில்
...சுடராய் ஒளிரத் தேடேனோ?
மழுமான் கரம்திகழ் மதிவான் நதிசடை
...விகிர்தா அருள வாராயோ?

வேலவனின் அழகு!




நெஞ்சமதில் தோன்றுதொரு காட்சி வண்ண
..நீலமயில் வேலவனின் மாட்சி!
கொஞ்சிவரும் தென்றலுமே வீசும்! கந்தன்
..கொலுவிருக்கும் பேரழகைப் பேசும்!
விஞ்சுமெழில் வள்ளிமகிழ் நாதன்! பக்தர்
..வினையகற்றி வெற்றிதரும் வேதன்!
தஞ்சமென்று தாளிணையைச் சூடும் அன்பர்
..தங்குமுள்ளம் பொங்குமின்பம் கூடும்!

Friday, September 19, 2008

கவிதை பாயும் நேரம்!

பண்மண்டும் சந்தயிசை பயிலுகின்ற பாடலுடன்
...பனிதவழும் விடியல் நேரம்!
மண்விண்டு தளிரிலைகள் வெள்ளந்தி மழலையென
...வெளிவந்தே விழித்துப் பார்க்கும்!
கண்கண்ட மஞ்சலெழில் கதிர்வரவால் கீழ்க்காணும்
...கடல்வெளியும் பொன்னாய் மாறும்!
விண்கொண்ட களிப்பினிலே மனமும்தான் துள்ளியெழ
...வெள்ளமெனக் கவிதை பாயும்!

Wednesday, September 17, 2008

இயற்கையே வியப்புதான்!

நீலவெளி வெள்ளியலைக் கோலமோ?
...நெளிந்துயர்ந்துத் தெறித்துவிழும் ஜாலமோ?
ஓலமிடும் ஆழியொலி வேதமோ?
...உறுமுகின்ற இடியொலியே நாதமோ?
பாலமொன்று விண்புவியை சேர்க்குதோ?
...பாதையொன்றை வானவில்லும் ஆக்குதோ?
காலமெனும் சக்கரந்தான் வெல்லுமே!
...கணக்காக விதிவழியே செல்லுமே!

Friday, September 12, 2008

அருமருந்து!

அருமருந்து!
--------------
பதம்தூக்கி ஆடுகின்ற பாங்குகண்டேன்!--எண்ணம்
...பனிமேவும் நிலவாடும் விரிசடைக்கே!
விதமாகும் உன்னடியார் விசனமற--நீயேன்
...வேடமிட்டு துன்பமுற்று சிறுமையுற்றாய்!
நிதமேஉன் தொண்டினுக்கே நினைவுடையார்--பாக்கள்
...நிறையுமன பக்தியுடன் கனிந்துதந்தார்!
சதமாகும் உன்னிருதாள் தொழுவதொன்றே--பிறவித்
...தளைநீக்கும் வினைதீர்க்கும் அருமருந்தாம்!

குமரனருள் போற்றுவோம்!



கண்குளிர சிவகுருவைப் பாடியே!
...கண்டுநிதம் தொழுதிடுவோம் நாடியே!
விண்மகிழ சூர்வதைத்த சக்திவேல்!
...வினையகற்றி வெற்றிதரும் முத்துவேல்!
பண்ணழகு அருணகிரி சந்தமே!
...பழகுதமிழ் தந்திடுமா நந்தமே!
எண்டிசையும் குமரனருள் போற்றுவோம்!
...இசைமலரில் சரம்தொடுத்துச் சாற்றுவோம்!

பட்டதாரி F.C.

பூணூல் உள்ளவரை போராட்ட மாமிங்கு
போகும் இடமெல்லாம் ஃபார்வேர்ட் காஸ்ட்- வேலை இன்றி
பைத்தியமாய் வீதியோரம் படுத்திருக்கும் ப்ராமணனே
அய்யரென் றிருமாப்பு கொள்!

திப்பிலி

Thursday, September 11, 2008

நதியே..

நதியே..
நதியே..
வளைந்துநெளிந்து
யவ்வனம் காட்டுவதால்..
பெண் என்றா ரோ சிலர்?????????
பாவ மூட்டைகள்
பலரது சுமந்ததால்..
தாய் என்றாரோ சிலர்????????

நான் சொல்வேன்...
நீ பெண்ணே அல்ல என்று..

செங்காலை கதிரவனும்
குளுமை தரும் வெண்ணிலவும்
என்னதான் பேசும் உன்னிடம்.????????
சொல்லி இருப்பாயா... யாரிடமாவது?????????

துள்ளி ஓடும் மீன்கள்
துக்கம்என்ன என்றே
உனக்கு மட்டுந்தானே தெரியும் ????
சொல்லித்தான் இருப்பாயா.. யாரிடமாவது???????

சத்தமின்றி , சலனமின்றி
ஆர்பாட்ட ஆரவாரமின்றி ...
ஆடி அசைந்து வரும் நீ..
.நிச்சயமாய் பெண்ணா என்ன???????/

பிடித்து வைத்த பிள்ளையார் எல்லாம்
கரைத்து போட்டனர் உன்மேலே..
மறைத்தே உன்துக்கத்தை ...
மறுகும் நீ பெண்ணா என்ன??????????
நதியே..நான் சொல்வது சரியா???????????????

நல்லதை நினை மனமே!

நினைப்பதில் நலத்தை நாடிடு!
...நிறைவுறு உளமும் கூடிடும்!
முனைப்புடன் உழைப்பை ஏற்றிடு!
...முறையுடன் உயர்வும் சேர்ந்திடும்!
சினத்தையுன் பொறையால் வென்றிடு!
...தெளிந்திடும் அமைதி வாய்த்திடும்!
மனத்தினில் இறையைச் சார்ந்திரு!
...வளம்தரும் அறிவும் ஓங்கிடும்!

இயக்க இணையும் இனிமை!

Thursday, 11 September, 2008
இயக்க இணையும் இனிமை!
வீசு கின்ற தென்றல்தான்
...வெய்யிலினில் வாட்டம் தீர்க்கும்!
நேசிக் கின்ற மனத்தில்தான்
...நிறைவான அன்பு வாழும்!
வாசிக் கின்ற வரையில்தான்
...வசமாகும் வீணை நாதம்!
பூசிக் கின்ற பக்தியில்தான்
...புதிதான பாதை தோன்றும்!


அன்புடன்,
தங்கமணி.
Posted by Thangamani on Thursday, September 11, 2008 0 comments

Tuesday, September 9, 2008

மெட்டுக்கு பாட்டு !

புது சுதந்திரம்
நிதம் வளம் தரும்
இனி தினந்தொரும்
தரம் நிரந்தரம்

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

பணம் வளர்ந்திடும் தினம் தினம்
குணம் நிரைந்திடும் நிதம் நிதம்
முகம் மலர்ந்திடும் இனம் புரிந்திடும்
புகழ் பிறந்திடும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

மரம் விளைந்திடும் உறம் உறம்
கரம் இணைந்திடும் அகம் புறம்
பழம் கனிந்திடும் விதை விளைந்திடும்
சுகம் தினம் வரும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்...

(1990-ல் சங்கர் மெட்டுக்கு எழுத ஆரம்பித்து பிறகு முடித்தது- மெட்டு நினைவிருக்கிறதா உங்களுக்கு?)

மாற்றமும் மறைத்தலும்

மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!

நிழல்கள் ஒன்றை ஒன்று ஒளியது ஒன்றை ஒன்று
பெரியது சிறிதை மற்றும் சிறியதே சிறிதாய் பெரிதை,
உறவுகள் ஒன்றை ஒன்று அறிவது ஒன்றை ஒன்று
பணமது குணத்தை என்று பிணமது ஆகும் வரையில்

மறைத்தலே மனிதர் தத்துவம்.

காற்றினில் ஏறி என்றும் கற்பனைக் குதிரை ஓட்டி
கனவிலே இன்பம் கண்டு கண்ணிலே பொய்மை பேசும்.
பொய்யது கண்டு கொண்டால் வாயது இளித்து நிற்கும்
பாசாங்கு செய்தல் என்றால் பல்லது இளித்து காட்டும்
மாற்றமா மனிதம் ? என்றும் மறைத்தலே மனிதம்.

விலங்குகள் மறைத்தல் அறியா.
கோபமோ கண்கள் காட்டும்; ஆத்திரம் வாயில் வடியும்
காதலோ இதயம் காட்டும் இன்பமோ உடம்பே சொல்லும்
மாக்கள் மனிதம் ஆகா; மறைத்தலை மாக்கள் அறியா.

உணர்ச்சிகள் திரையில் அடங்கா; உண்மைகள் கரைக்குள் அடங்கா.
வெளிப்பாடு என்றும் எதற்கும்;வடிந்தது மனமென்றாகும்.

ஆனால் மறைத்தலே மனிதம்.

பூட்டிய உணர்வே பின்னாள் விஷமாகும் என்றான் நீட்ஷெ.
உண்மையும் விஷமும் அறிவோம்; அனைத்தையும் பூட்டி வைப்போம்!

சங்கிலி இடுவோம் நமக்கே; சட்டிக்குள் சுற்றும் குதிரை!
பொங்கிட ஆசை கொள்ளும் மனமதை மறைத்து காப்போம்.

கோபமும் க்ரோதம் வேட்கை, குமைந்திடும் ஆசை மோகம்,
ஏளனம் கண்கள் சொல்லும் இகழ்ச்சியும் வெறுப்பு மற்றும்
துன்பமும் சோகம் வருத்தம், துவண்டிடும் சோர்வு தளர்ச்சி
நாணமும் மருட்சி வெட்கம், நால் வகை குணமுமென்று
அனத்தையும் மறைத்து வைப்போம்.மறைத்தலால் மனிதராவோம்!

மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
மறைப்பதால் மாற்றலாகி மாற்றமும் மாறி மாறி....
மறைத்தலே மனிதர் தத்துவம்!
மறைந்தவர் சொல்லிச்சென்றார் மாற்றமே மனிதமென்று,
மாற்றமே தத்வமென்றால் தத்துவம் மாறுவதென்றோ !
திப்பிலி

(இருட்டு பாதையில் நீள இரவில் ஒரு நாள் நடக்க நேரிட்ட போது தோன்றிய எண்ணக் குழப்பங்கள் கவிதையானது- 1989)

Saturday, September 6, 2008

யதார்த்தம்

இலக்கின்றி திரியுமந்த
செம்மேகப் பொதிகளில்
எம்மேகம் என் மேகம்?

பறந்து திரிந்து
பிரிந்து விரிந்து பின்
கலைந்து போவது

பிறப்பின் நிதர்சனமும்
இறப்பின் சாஸ்வதமும்
புரிந்த பின்
வாழ்வின் யதார்த்தம்
விளங்கிடலாச்சு !

திப்பிலி

(கணையாழியில் வந்த என் கவிதை. முழுவதுமாக தயாரித்தது(manufactured) கணையாழியின் style-ல். மணியுடனான bet . நான் வென்றேன்!(1989)

நுணல் (அ) விடியல்

விடிந்தும் விடியாத
அதிகாலை திரிசங்கில்

எந்த விடியலுக்காய்
இவை இப்படிக் கூவுகின்றன?

வாலது விரிய
கொண்டை சரிய
குரல் கிழிய

கசாப்புக் கடையின்
கம்பிக் கூண்டிலிருந்து...

மானுட வல்லமையின்
போலி நிரூபணங்களாய்

எட்டு மணிக்கு
இறக்கைக் குவியலாகவா?

திப்பிலி

பிறிதொரு மரணம் !

(எனது உறவினர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புக்களின் ப்ரதிபலிப்பு (1988))

---------
பெற்று வளர்த்து நம்மை பெரியவராக்கும் தாய்.
கற்றுக் கொடுத்து குடும்பக் கலை வளர்க்கும் சுற்றம்
முற்றி முதிர்ந்து உடலும் முதுமையால் மாறும் தானாய்
இற்று விழுந்திடும் நாளை எதிர்பார்திருப்பாய் நீயும்.

பெற்று வளர்த்த பிள்ளை பேசிடுவான் 'கிழம் தொல்லை'
சுற்றிடும் மாயை தன்னில் சூதுவாதறியா மகனும்
பற்றது விட்டே மரணப் படுக்கையை தயாராய் வைப்பான்
பிற்பகல் அறியாதான்; முற்பகல் ஆடுகின்றான்!

மருத்துவரும் வந்திடுவார் 'மறு நாள் மாலைக்குள்
பருத்த உடலை விட்டே பறவையும் பறந்திடும்' என்றே
இறப்புக்கு நாள் குறிப்பார்;இவனும் கேட்பான் ' நாளை
இறக்காவிடில் என்று இறந்திடுவார்?' என்றே!

உயிரது பிரியும் முன்னே உண்மைகள் புரிந்து போகும்
மரணம் வரும் முன்னே மடிந்தது மனம் என்றாகும்.
உறவுகள் சுற்றம் எல்லாம் உன்னருகே சூழ்ந்து நின்று
பெருமைகள் பேசி அழுவர்; பிளந்தவாய் முதலைக் கண்ணீர்!

உயிரது பிரியும் நேரம் உடனே வாராதா என்று பாசக்
கயிரது தேடி அலைவாய்; கண்களில் வழியும் கண்ணீர்.
பேசுதல் நின்று போகும்;பார்வையும் மங்கிப் போகும்
சேற்றுழல் யானை போல சோர்ந்தது மனம் என்றாகும்.

மூச்சதும் நிற்கும் முடிந்தது கதையென் றறிந்து
காத்திடும் சுற்றமெல்லாம் கலங்குதல் போலக் காட்டும்.
அழு குரல்,கதரல்,கத்தல் அரற்றல் புலம்பலென்று
மறுபடி முதலைக் கண்ணீர்,மாண்ட பின் மாற்றமென்ன?

சாவது வந்த பின்னே சடங்குகள் பெரிதாய் நடக்கும்
ஆவது என்ன? பிரிந்த ஆவி தான் திரும்பி வருமோ?
கூவிடும் கோழி மறு நாள் கும்பலும் பறந்து போகும்
காடது வரையில் வந்த காயமும் பிரிந்த தாகும் !

திப்பிலி

Friday, September 5, 2008

அந்தி வரும் நேரம் !

அந்தியின் வெட்கமா, அழகிய கவிதையா
...அழகினை என்ன சொல்வேன்?
சிந்திடும் ரத்னமா, சிவந்தநற் பவளமா
...செறிந்திடும் செக்கர் வானம்?
செந்தழல் கோலமா, குங்குமக் கமலமா
...சிந்தையைத் தூண்டும் காட்சி?
சுந்தர மெகந்தியா, குல்மொகர் மலர்களா
...சொக்கிடும் மாலை நேரம்?


மாலையில் ஆநிரை மந்தையாய் வந்திடும்
...மணியொலி ஓசை கேட்கும்!
சோலையில் பறவைகள் சொந்தமாய்க் கூட்டினுள்
...சுகமுடன் பார்ப்பைக் கொஞ்சும்!
மாலையின் காட்சியும் மாறிடும் வானமும்
....மங்கலாய் சாம்பல் தோற்றம்!
ஆலயம் தொழுதெம் அன்பரும் வேண்டுவர்
...அகிலமும் நன்றாய் வாழ!