Friday, November 4, 2011

தாயுமானவனே! !--4

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திருவீழிமிழலையில் சக்கராயுதம் வேண்டித் திருமால் தினம் ஆயிரம்
தாமரைமலர்களைக் கொண்டு பூசித்துவரும்போது ஒருநாள் ஒரு மலர் குறையத் தன் கண்
ஒன்றை இடந்து மலராக இட்டு வழிபட்டுச் சிவனருள் பெற்றதைச் சுட்டியது.

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை நசுக்கிப் பின் அவன் இசைபாடித்
துதிக்கவும் அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும் அருளியதைச்
சுட்டியது.

No comments: