Wednesday, November 30, 2011

நஞ்சன்கூடு கண்டனே!-- 3

கீதா குரவர் திருமுறை
...கேட்டு மகிழ்ந்து நடமிடு
பாதா நதியும் மதியுடன்
... பாம்பும் அணிந்த தயைநிறை
போதா ஆலின் கீழமர்
...புனிதா நீயே எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே....5

விதியாய் வினையாய் வாட்டியே
....மிரள வைக்கும் துன்பறக்
கதியாய் கழலைப் பற்றியே
....கந்த மலர்கள் தூவியும்
துதியாய் இசையாய் ஆனவா
....தூயா பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
....நஞ்சன் கூடு கண்டனே....6

Tuesday, November 29, 2011

நஞ்சங் கூடு கண்டனே!-- 2

பொற்றா ளமதில் ஒலியவள்
...புடையில் பங்காய் ஏற்றவ!
பெற்றார் எனிலுன் அன்பினைப்
...பெற்றார் தாமே புண்ணியர்?
மற்றா ருளரிங் குற்றவர்
...மறைகள் ஓதி இன்புறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே!....3

குவியும் மலரில் கோத்திடும்
...கோல மாலை சூட்டியே
பவள வண்ணா என்றுனைப்
...பாடி நாளும் வணங்கினேன்
துவியென் றிரண்டாம் வினைதனை
...தூர ஓட்டிக் காவென
நவிலும் அன்பர்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே....4

Sunday, November 27, 2011

நஞ்சன்கூடு கண்டனே!

நஞ்சனகூடு (nanjangud)
மைசூரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் நஞ்சனகூடு என்ற தலம் உள்ளது.
தினமலர்த் தளத்தில் தகவல்களையும் படங்களையும் காணலாம்:

http://temple.dinamalar.com/New.php?id=135
நஞ்சங் கூடு கண்டனே (Nanjangud (Kannada ನಂಜನಗೂಡು)

பம்பை உடுக்கை தாளமாய்ப்
...படர்தீ கானில் ஆடிடும்
நம்பன் உனது தாளினை
...நறும்பூத் தூவி சாற்றியே
செம்பொன் மேனி வண்ணனே
...தெம்பு சேர்க்கும் நாமமே
நம்பி .னாருக் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...1

கோளும் தினமும் நன்றுறக்
...கூத்தன் உனையே எண்ணியும்
நீளும் பவமாம் தொடரற
...நிறைவாய்ப் பணியும் அன்புடன்
கேளும் துணையும் நீயெனும்
...கீர்த்தி மிகுதாள் சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...2

Monday, November 21, 2011

திருமழபாடி!--2

பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3

பணி=பாம்பு,பொடி=சாம்பல்.
மதவேள்= செருக்குள்ள மன்மதன்.

செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4

Sunday, November 20, 2011

திருக்கோடிகா!--5

ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9

மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10

Thursday, November 17, 2011

திருக்கோடி கா!--4.

நீறு திகழ்மெய்யன் நீல மணிகண்டன்
ஆறு தலையோனென் றறைந்தே அடைநெஞ்சே
ஊறும் மதுநாடி ஒலிசெய் மலர்வண்டாய்
கூறும் அடியார்சேர் கோடி காவையே...7

தலையில் சுடர்கொன்றை தண்ணார் நதியேந்தும்
மலையன் மறையோன் தாள் வணங்கி அடைநெஞ்சே
அலைசெய் மருதம்சூழ் அணியார் பசும்பொற்பூங்
குலைகள் மலி சோலைக் கோடி காவையே...8

மருதம்=மந்தமாருதம், தென்றல்

Monday, November 14, 2011

திருக் கோடிகா!-- 3

மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5

பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6

Saturday, November 12, 2011

திருக் கோடிகா! -- 2

வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3

அளி=வண்டு.

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4

போது=மலர்.

Thursday, November 10, 2011

திருக் கோடிகா!

"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்.
==============================================================


புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1

பெயல்=மழை.

பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2

Monday, November 7, 2011

தாயுமானவனே!-- 5

கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....9

தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்தார்.

கருவி .னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....10

திருமணம் செய்ய விரும்பிய 'தருமி' என்னும் வறிய அந்தண பிரமசாரிக்கு அவன்
பொற்குவை பெறக், 'கொங்கு தேர் வாழ்க்கை' என்ற பாடலை அளித்ததைச்
சுட்டியது. திருவிளையாடற்புராணம்
'தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்'.

Friday, November 4, 2011

தாயுமானவனே! !--4

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திருவீழிமிழலையில் சக்கராயுதம் வேண்டித் திருமால் தினம் ஆயிரம்
தாமரைமலர்களைக் கொண்டு பூசித்துவரும்போது ஒருநாள் ஒரு மலர் குறையத் தன் கண்
ஒன்றை இடந்து மலராக இட்டு வழிபட்டுச் சிவனருள் பெற்றதைச் சுட்டியது.

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை நசுக்கிப் பின் அவன் இசைபாடித்
துதிக்கவும் அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும் அருளியதைச்
சுட்டியது.

Wednesday, November 2, 2011

தாயுமானவனே!- 3

ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5

திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிச் சமணர்கள் கடலுள் ஆழ்த்தியபோது, சிவன்
அருளால் அக்கல்லே ஓர் தெப்பம் போல் மிதந்து அவர் கரைசேர்ந்ததைச் சுட்டியது.

கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6

திருப்பனந்தாளில் தாடகை என்ற பெண் பூசிக்கும்போது மாலை அணிவிக்கவரும்போது
அவள் ஆடையும் நெகிழ, அவள் முழங்கைகளால் ஆடையை அழுத்திப்பற்றிக்கொள்ள,
இலிங்கத்திருமேனியைச்
சாய்த்து இறைவன் அம்மாலையை ஏற்றுக்கொண்டான். இந்நிகழ்ச்சியைச் சுட்டியது.

புடைவையும் நெகிழ்வுற - அவள் மனம் நெகிழ்ந்தது மட்டுமன்றி அவள் அணிந்த ஆடையும்
நெகிழ்ந்தது என்பதைப் புலப்படுத்தும் பிரயோகம்;

நெகிழ்தல் - குழைதல்; இளகுதல்; நழுவுதல் (To slip off, as a garment);

Tuesday, November 1, 2011

தாயுமானவனே!--2

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

* கண்ணில்லாத தண்டியடிகள் திருவாரூரில் குளத்தில் திருப்பணி செய்வதற்கு
இடையூறு செய்த சமணர்கள் எல்லாரும் கண்ணிழந்து அஞ்சும்படியும்
தண்டியடிகளுக்குப் பார்வை கொடுத்தும் திருவருள் புரிந்த நிகழ்ச்சியைச்
சுட்டியது.
தண்டியார் - தண்டி அடிகள்; (அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; பிறவிக்குருடராக
இருந்தவர்);

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

சிவபூசைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமர்க்குச்
சண்டேசுர பதவி அருளியதைச் சுட்டியது.