Sunday, July 31, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 5

மழவிடை ஏறி வலம்வரு வாயே
...மறைதொழு தேத்திடும் ஈசா
முழவுடன் துடியின் முந்துறு ஒலியில்
...முடிவிலி யுன்நடம் பேறே
கழலினை அணைத்துக் கதறிடு வோனைக்
...காத்தருள் செய்தவன் நீயே
பழமலி சுவைதேர் பைங்கிளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே!....9


சின்மய உருவில் திகழ்குரு வானாய்
...தெளிவுறு சிந்தையை தாராய்
பொன்மன அடியார் பொழிதமிழ்ப் பாடல்
...புகழ்ந்திடும் உனதருள் திறமே
நன்மையில் இருப்பாய் நலமிகச் செய்வாய்
...நதிமதி சூடிடும் தேவே
பன்மலர்த் தேனுண் பூவளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....10

Friday, July 29, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 4

திரணமிவ் வாழ்வில் தெளிமதி தந்தே
...திகழுறச் செய்தருள் ஈசா
சரணென உன்றன் தாளிணை வீழும்
...தமியனைக் காத்திட வேண்டும்
கிரணமென் றொளிசேர் கீர்த்தியில் நிற்பாய்
...கெடுவினை யொழியவும் அருளாய்
பரவிய பொன்னி பாய்கிற பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....7

அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....8

Thursday, July 28, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 3

சுடர்கிற விடியல் சுதியொலி பாடல்
...சொலுமுன தருளதன் திறமே
தொடர்கிற அன்பில் துணையெனக் கொண்டேன்
...துன்பினில் ஆதரம் தருவாய்
குடர்படு கருக்கொள் கொடிதெனும் பவமே
...குலைவினை அடைவழி அருளாய்
படர்கிற மருதம் கமழ்வுறு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....5

விண்ணிழி கங்கை வெண்மதி சூடி
...வெண்பொடி மெய்யணி ஈசா
கண்ணிய துன்றன் கருணையை யன்றோ
...கயல்விழி பங்குடை யோனே
எண்ணிய எய்தல் இறையரு ளாலே
...எனைஇடர் செய்வினைத் தீராய்
பண்ணிய வண்டும் பாடிடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே.


கண்ணியது=கருதியது
பண்ணிய=சுதிலய

Wednesday, July 27, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 2

சொலவரு மின்பம் சுவைமிகு நாமம்
...துதிசெயு மடியரின் தேவே
அலமரு வேனென் அடைக்கல மாகி
...அருள்கிற துணையென வாராய்
நிலவணி சடையில் நிர்மல கங்கை
...நிலவிடு மெழிலினில் ஒளிர்வாய்
பலநிற மலரின் மணமிகு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....3

நசிவறு மேன்மை நலமிகக் காட்டி
...நலிவுறு எளியரைக் காப்பாய்
பசியினில் ஊணாய் பரிவினில் தாயாய்ப்
...பரவிடும் அன்பதும் நீயே
மசியிருள் மாய மலக்கினில் வீழா
...வழியினைக் காணவும் அருள்வாய்
பசியநல் இலைசேர் மணமலர் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....4

Monday, July 25, 2011

பராய்த்துறை மேவிய பரனே!--1

எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு

மறலியை அன்று சினமிக எற்றி
...வழிபடும் சிறுவனைக் காத்தாய்
பிறவிசெய் நோயால் பிணியுறு வேனைப்
...பெருகுமுன் கருணையில் காப்பாய்
கறவையின் அன்பில் களித்திடும் கன்றாய்க்
...கண்ணுதல் உனருளில் உய்வேன்
பறவைகள் நாடிப் பைம்பொழில் கூடும்
...பராய்த்துறை மேவிய பரனே....1

சகடென உருளும் சகமுறு வாழ்வில்
...தளைவினை விடவருள் எந்தாய்
சகலமும் உன்றன் சரணிணை என்றே
...தண்மலர் தூவினேன் காப்பாய்
பகடதில் ஊரும் பரமனுன் நாமம்
...பரவிடும் பேறினைத் தாராய்
பகலவன் ஒளியில் பூமலர் தடம்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....2

Thursday, July 21, 2011

அன்னை அருள்!

பொன்னை நிலையெனப் போற்றும் அறிவிலாப் பூரியரும்
புன்னை மலர்கொடு பூசை செயவருள் பூத்திடவும்
தன்னை நினைந்திரு தாளைத் தொழுபவர் தம்துணையாய்
முன்னை வினைதனை முற்றும் அழியவும் முன்னுகந்தே
மின்னை நிகர்த்தவள் மிஞ்சும் தயைபுரி மீன்விழியாள்
அன்னை விழிமலர் அஞ்சல் அருளுவள் அன்பருக்கே.

Tuesday, July 19, 2011

சிவனருள் நினை!

தஞ்சம டைந்தவன் தண்ணருள் வேண்டிநி னைந்திடில்
...தளை பவ வினை உளை செயுமிடர் அகலும்,
பிஞ்சிள வெண்மதி செஞ்சடை அந்திய தன்வணன்
... பிடி உமை இட மணி களிறென வருவான்
கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...குதி நதி குளிர் செய சிரசணி எழிலில்
அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே.

(1--௬ சீர்கள் மோனை.)

Monday, July 4, 2011

சிவன்கழல் தொழுவாய்!

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான்
சிந்தையில் சந்ததம் அஞ்செழுத் தோதியு ணர்கையில்
...சித றிடும் பவ மெனு சிறுமையும்..தொலையும்
அந்தமில் ஆதியும் பாதியும் ஆனவொர் மெய்யனாம்
...அரி அயன் அவர் தொழும் அழலொளி..சிவனே....1

பூத்திடும் கொன்றையம் பொன்மலர் இன்எழில் மார்பிடை
...புனை சரம் புரள் கவின் திகழுற நிறைவாய்
தோத்திர மாகிய சொற்றமிழ் மாமறை வேட்பவன்
...துடி யடி யொலி நட மிடுமரன் அவனே
பாத்திர மாயவன் பத்தியில் கூடிடும் அன்பினில்
...பரன் அரன் பதம் சரண் புகலென அடைவார்;
சூத்திர தாரியின் சொற்படி ஆடிடும் பொம்மைநம்
...சுழல் பழி அழி வழி செயுநம திறையே!....2