Showing posts with label ஆலவாய் அண்ணல். Show all posts
Showing posts with label ஆலவாய் அண்ணல். Show all posts

Friday, December 3, 2010

ஆலவாய் அண்ணல் - (திருஆலவாய்) - 2



விதித்த வாழ்வும் வெருதா கிடாதுளம்
பதித்த நாமம் பரவினால் உய்யலாம்
கதித்து ஆடுவான் கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த வர்துயர் தீர் ஆல வாயரே....6.

கதித்து=விரைந்து

மாலை வண்ணனாய் மன்றதில் ஆடிடும்
நீல கண்டனாய் நெஞ்சுறைத் தெய்வமாய்ச்
சூலை நோயுறு தூயடி யார்க்கருள்
ஆல வாயுறை அங்கண் அடிகளே....7.

கல்லேன் பொன்னார் கழல்தொழு துய்வழி
வல்லான் இன்னருள் வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத் தீவினைப் பொடியெனச் செய்குவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே....8.

ஆர்=அழகு என்னும் பொருளில்

கால காலனாய்க் கண்ணுதல் அண்ணலாய்க்
கோல மாகவேக் கொண்டிடும் ஆடலை
ஞால முய்ய நடித்தநம் ஐயனாம்
ஆல வாயரற் கன்புசெய் நெஞ்சமே....9.

சேவி லூர்பவன் சிந்தையில் நிற்பவன்
கூவி யன்பர் குரல்கொடுத் தாலுமே
தாவி வந்தருள் தந்திடும் மெய்யனாய்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே.....10.

(கலிவிருத்தம்)

Sunday, November 28, 2010

ஆலவாய் ஈசனே!-- 1


விரிவான் கங்கையன் வெண்ணீ றணிசிவன்
பொரியார் வண்டுசூழ் பூம்பொழில் தளியான்
தரியான் அன்பிலார் தம்முளம் அவர்க்கே
அரியான் ஆலவாய் மேவிய அண்ணலே....1

முன்பின் இல்லா ஆதியாம் மூலமாம்
அன்பில் ஆளும் அருள்நிறை வள்ளலாம்
துன்பில் தோன்றாத் துணையாய்த் தோன்றிடும்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.....2

வீற்ற இன்னருள் கோலமும் வெவ்வினை
மாற்றும் ஆறுதல் தந்திடும் மாயமென்?
போற்றும் அன்பரின் பற்றெனும் பூரணன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே...3

புறவும் ஆழியும் நின்னருள் போற்றிடும்
கறவைக் கன்றென உன் தாள் கருதியே
நறவு சேர்மலர் தூவினேன் நைவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே....4

புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு.....

கல்லால் தாக்கினும் கனிந்ததைத் தாங்குவான்
ஒல்லாச் சாட்டையின் ஊறினை ஒப்புவான்
சொல்லால் கூடிடாத் தூயமெய் அன்பினால்
எல்லாம் நல்கும்நம் ஆலவாய் அண்ணலே....5

கல்லால்=கல்லினால்.(சாக்கிய நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.

Tuesday, October 26, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 5


(தானனா தானன..தந்த தான-- 5)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...கூலியா ளாகுவை..சுந்த ரேசா
ஆரியா ஆதர..வென்று மானாய்
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

Sunday, October 24, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 4

(தானனா தானன.. தந்த தான--4)

ஓடுமே தீவினை யஞ்சி யேதான்
...ஓதுமோர் ஆதியு .னன்ப தாலே
பாடுவோ ராயிர முன்ற னாமம்
...பாகுசேர் தேனத னின்ப மாமே
தோடுடை யாயுனை அன்று நாவால்
...சூடுபா மாலைசெய் விஞ்சை என்னே
ஆடுவாய் வானெழில் மிஞ்சு மாடல்
...ஆலவாய் மேவிய எம்பி ரானே.

Saturday, October 23, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 3

(தானனா தானன.. தந்த தான)

மாறலா தாடிடு .. மன்று ளானே
...மாசிலா மாமணி.. யென்று மானாய்க்
கூறதாய் மாதுமை..தங்கு மீசன்
...கோலமார் சோதியி.. .லின்பு சேரும்
பேறதாய் ஆகுமு.. .னன்பி .னாலே
...பீடதே யாகிடும்.. தஞ்ச மீவாய்
ஆறலை வேணிய.. சுந்த ரேசா
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

மாறு=ஒப்புமை.

Thursday, October 21, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 2

(தானனா தானன .. தந்ததான--2)

மோனமாய் ஆலமர்.. கின்ற தேவே
...மோகமோ டாறையும்.. வென்றி டேனோ?
கூனலாய் வான்மதி.. கங்கை சூடும்
...கோதிலா வேணிய..னென்று வேத
கானமாய் ஓதிடும்.. அன்பர் நேசா
...காவலாய் ஆதர மென்று தாயும்
ஆனவா மாதுமை.. பங்க .னாகி
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ டாறையும்= மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.

Tuesday, October 19, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே !

(தானனா தானன .. தந்ததான)

பூரணா நீறணி..கின்ற ஈசா
...போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...ஆலவாய் மேவிய..எம்பி ரானே.

Friday, April 23, 2010

ஆலவாய் அண்ணல்! -- 3



விரியும் வானில் மிதந்திடும் கோள்களை
உரிய பாதை ஒழுங்கில் சுழன்றிடப்
புரியும் அந்தமில் புண்ணியச் சோதியர்
அரிவை பாகர் எம் ஆலவாய் அண்ணலே!

தந்த இன்னலைத் தாங்கிடும் பக்தியில்
நந்தன் தில்லையின் நாதனைக் கண்டனன்
அந்த மொன்றிலா அன்பினுக்(கு) ஆட்படும்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

Saturday, April 17, 2010

ஆலவாய் அண்ணல் -- 2

நீண்ட பாதையில் நீளிருள் சூழ்ந்திட
வேண்டும் நல்லொளி மேவுமோ? நெஞ்சமே!
தாண்ட வப்பதம் தந்திடும், வானதி
பூண்ட ஆலவாய் அண்ணலைப் போற்றவே!

மூல மானவன் மோ(து)அலை கங்கையைக்
கோல மாகக் குளிர்சடை ஏற்றவன்
ஓல மேயிட உய்வை அளிப்பவன்
ஆல வாய் அமர் கண்ணுதல் அண்ணலே!

Friday, April 16, 2010

ஆலவாய் அண்ணல் -- 1

ஆலவாய் அண்ணல் (திருஆலவாய் - மதுரை)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
முதல் சீர் 'மா'. இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும். 2௩௪ சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வரும்.
நேர் அசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்துகள்.)


சிவ சிவாவுக்கு என் மனமுவந்த நன்றி!


நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!

எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!