Saturday, January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 2

பூலா வனத்துப் பெருமானே!
--------------------------

கல்லார் கற்றார் எவரிடத்தும்
...கருணை பொழியும் அருநிதியே!
இல்லா இடமென் பதுமிலையே
...ஈசா! எங்கும் நிறைந்திருப்பாய்!
சொல்லாய் ஒலியாய்த் திகழுமுனைத்
...துதித்தே கேட்பேன் உனதடிக்கீழ்ப்
புல்லாய்ப் பிறக்கும் வரமருள்வாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

பித்தன் நீயென் றுரைத்தவரைப்
..பேணிக் காத்த திறம்சொலவோ?
சித்தம் நிறைவாய் உனதருளில்
...சித்தித் திருக்க அருளுவையோ?
கத்தும் குயில்கள் இசைபொழியும்
...கமழும் வண்ணப் பொழிலுனக்காய்ப்
புத்தம் புதுப்பூச் சொரிந்திலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

2 comments:

sury siva said...

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
எல்லோருக்கும் எல்லாம் தரும் இறையின் புகழைப் பாடும் தங்களது இவ்வற்புதமான‌
பாடலை இங்கே ஆரபி ராகத்தில் கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=uqrV5SapBgA

//பூலா வனத்துப் பெருமானே ...//
பூலா வனம் எங்குள்ளது ?

சுப்பு ரத்தினம்.

Thangamani said...

சூரி அவர்களுக்கு,
மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி!
பாடியதைக் கேட்டோம்!சிறப்பு!
பூலாநந்தீசுவரம் என்னும் ஊர்பற்றிய
லின்க்:
http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam68.htm

http://temple.dinamalar.com/New.aspx?id=782

அன்புடன்,
தங்கமணி.