Tuesday, January 12, 2010

ஏன்?

(நவம்பர்,2007,சந்தவசந்தக் கவியரங்கம்'ஏன்?'என்னும் தலைப்பில்
நான் எழுதியது)

'ஏன்'எனும் சொல்லில்தான் எத்தனை வீச்சுகள்!
தானதில் முன்நின்று தரும்ரசங்கள் எத்தனையோ!

பள்ளிகொண்ட பெருமானைப் பாடலிலே கவிராயர்
துள்ளிவரும் வெள்ளமெனத் தொடுத்தகவி ஏனில்தான்!

சுந்தராம்பாள் தேனிசையில் சுழன்றுவரும் என்ன என்ன?
கந்தனவன் ஆண்டியுரு கண்டுருகும் நிலையிலன்றோ?

ஏனென்ற கேள்விதனை இளமழலை கேட்கையிலே
தேனென்ற சுவை இனிக்கும் செவிநிறைக்கும் பரவசமாய்!

எதிர்பார்க்கும் ஆய்வுகளில் 'ஏன்'களால் வளர்ச்சியுறும்
எதிர்பாரா ஈகையியினில் 'ஏன்'களே உயர்வுபெறும்!

தத்துவ விசாரங்கள் சந்தேகம் எழுகின்ற
வித்துவ மேதமையில் விரிந்துயர்ந்த அறிவியலில்

சத்துவத் தவநெறியில் சழக்கிடும் வாதமதில்
நித்தியக் காட்சியினில் நெகிழ்மன சாட்சியினில்

கோபத்தின் வேகத்தில் குமுறுகின்ற துக்கத்தில்
தாபத்தில் தீர்க்கவொணாச் சதிபுரியும் விதியதனில்

இளமையின் நாதத்தில் எழுகின்ற கீதத்தில்
விளைகின்ற மனலயத்தில் தெறித்துவிழும் 'ஏன்'களே!

விளக்கிடும் இயற்கையில் விரைந்துசுழல் பருவங்களில்
உளத்தினில் எப்போதும் ஊடுருவும் 'ஏன்'தானே?

பயத்தினில் இயற்கையைப் பணிந்தவன் மனத்தில்'ஏன்'
வியந்திடப் புகுந்துடன் மிஞ்சிடவே சாதித்தான்!

இயற்கையின் நியதியில் இறைநீதிப் பேரிடரைச்
செயற்கரிய அறிவியலால் தவிர்க்கமுயல் சாதனங்கள்!

புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!

நவயுகத்தில் வருகின்ற நாகரிக நடைமுறைகள்
தவபலமாம் பண்பாட்டை தாக்காமல் இருந்திடட்டும்!

2 comments:

Geetha Sambasivam said...

//புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!//
பாதிப்பு அதிகமாய் இல்லாமல் இருக்கப் பிரார்த்திப்போம், நல்ல கருத்துள்ள கவிதைக்கு நன்றி அம்மா. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும். சங்கராந்தி நல்வாழ்த்துகள்.

Anonymous said...

எல்லா கவிதைகளையும் படித்துப் பார்த்து ரசித்தேன்.மகிழ்ச்சி!!
உமா.