(கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்)
அலைகடலிலும் புலர்விடிவிலும் அலர்மலரிலும் உறைபவன்
கலைநிலவெழில் பொலிஅலைநதி துலங்கிடவருள் இறையவன்
நிலைகுலைவுற மயலிருள்வினை தொலைந்திடவரு கதிரவன்
சிலையழகுமை உளமிலங்குவன் சிலம்பொலிகழல் பணிவமே!
விடிவு= விடியல்
வயசு கோளாறு
1 year ago
10 comments:
இசையுயிர்கொடு திகழ்செயுள்தரு தமிழ்கவியினி திலங்குக!
ஒலியினில்வரும் கருவிளங்கனி சுவையினில்செயுள் இனிக்குதே!
(செயுள் - செய்யுள்)
ஒரு ஐயம்: புலர்வு, விடிவு இரண்டும் ஒரே பொருள்தானே? அடுக்கிவருதல் பிழையாகாதோ?
அருமை!
//ஒரு ஐயம்: புலர்வு, விடிவு இரண்டும் ஒரே பொருள்தானே?
அடுக்கிவருதல் பிழையாகாதோ?//
அன்புள்ள விஜய்! கருத்துரைத்ததற்கு நன்றி!மகிழ்ச்சி!
புலர் விடியல்=வினைத்தொகை.
இரண்டு சொல்லும் ஒன்றாகாது என்பது என் கருத்து.
சரியாக எடுத்துச் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள தமிழநம்பி!
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
”எடுத்துச் சொல்லும்” அளவிற்கு நான் இல்லை, தெரிந்ததை சொல்லிவிட்டேன், அவ்வளவே! “பொழுது விடிகிறது” “பொழுது புலர்கிறது” என்பவற்றை கவனிக்க, பொழுதாகிய எழுவாய் விடியல் அல்லது புலர்தலாகிய வினையை செய்கிறது, விடிவதால் தான் விடியல், அதன்மேல் மீண்டும் புலர்தல் என்ற வினையை ஏற்றலாமா? - இது என் கருத்து! தெளிவாய் அறிந்தவர் எவரேனும் எது சரி என்று சொன்னால் நன்றாய் இருக்கும்! மேலும், தங்கள் பாடலின் ஓசை நயம் என்னைக் கவர்ந்ததன் பயனாய் அது என் எண்ணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது நேற்றெல்லாம், அப்பொழுது, மற்றுமொரு ஐயம் உதித்தது - “சிலம்பு” பெண்கள் அனிவது, “கழல்” ஆண்கள் அனிவது, “சிலம்பொலிகழல்” என்பதும் பிழை என்று எண்ணுகின்றேன்! அம்மா, தங்கள் பாடலில் மேலும் மேலும் பிழைகள் இருப்பதாய் கூறுவதற்கு பொறுத்தருளுங்கள், அழகான் இசைபொதிந்த பாவில் பிழைகள் இருக்கலாகாதே என்னும் வாஞ்சையே காரணம்! ”நான் பிழை என்பதுவே பிழையாகட்டும்” என்பதே என் விருப்பம்!
பணிவுடன்,
விஜய்
அன்புள்ள விஜய்!
உன் தமிழ் ஆர்வம் என்னை வியக்கச் செய்கிறது!
'இசையுயிர்கொடு திகழ்செயுள்தரு தமிழ்கவியினி திலங்குக!
ஒலியினில்வரும் கருவிளங்கனி சுவையினில்செயுள் இனிக்குதே!'
அருமை!
உன்கவிதை இனிமை!
புலர் விடிவு= வினைத்தொகை.
புலர்ந்த விடிவு,புலர்கின்ற விடிவு,புலரும் விடிவு
என்று மூன்று காலத்திற்கும் வரும்.
வீரக் கழல் இதை சிலம்பு என்பதும் உண்டு.
சிலம்பு=கழல் என்ற பொருளிலும் வரும்.
கழல்=கால்,பதம்.
இங்கு,
சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களுடைய சிவன் என்னும் பொருள்.
அன்புடன்,
தங்கமணி.
மிக மிக அருமையான விளக்கங்களுடன் கூடிய ஆரோக்கியமான வாதம், நன்றாக இருந்தது அம்மா. கவிதையும் சேர்த்துத் தான்.
follow up
சிறுமதியினன் தவறெனசொலும் குறைவுரைகளை மதித்திடும்
கருத்துரைக்கொரு மதிப்புரைதரு பொறைநிறைகுண கவிஞரே
தமிழுளவரை புகழொடுநின தருகவிதைகள் நிலைக்கவே!
நன்றி...!
விஜய்
அன்பு விஜய்!
மிகச் சிறப்பாக முடுகியல் பாடல் இயற்றுகின்றாய்!
வாழ்த்துகள்!பாராட்டுகள்!
ஐயம் தெளிவுறக் கேட்பது ஒருபோதும் தவறில்லை!
நானும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவிதான்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment