Thursday, January 29, 2009

நித்தியானந்த! தாள் பணிந்தேன்!

குறையால் மலியும் கொள்கையிலாக்
...குணங்கொண் டேனை ஆண்டருள்வாய்!
சிறையாம் வாழ்க்கைத் தத்துவத்தில்,
...தெளிவாய் ஞானம் ஊட்டிடுவாய்!
முறையாய் பக்தி மூழ்குமனம்
...முகிழ்த்தே யோங்கும் சூட்சுமம்தா!
நிறைவாய் நிருத்தம் நெஞ்சினிக்கும்
...நித்யா நந்த! தாள்பணிந்தேன்!

Wednesday, January 28, 2009

பதமலர்!

கடலலையும் தவழ்நிலவும் கதிரொளியும் இறைவனவன் கனிவைக் கூறும்!
சடமெனவும் உயிரெனவும் சகலவிதப் படைப்புமவன் சதுரில் கூடும்!
விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்,
நடமிடுபொற் சதங்கையொலி நரலுகின்ற பதமலரை நயந்து கொள்வோம்!!

நரலுகின்ற=ஒலிக்கின்ற

(1-௩-௫ மோனை.)

Friday, January 23, 2009

'கட்டுக்குள் மாட்டாத கட்டு' .

பிட்டுக்கு மண்சுமந்த பெம்மானும் பக்தருக்காய்
இட்டமுடன் பூசனையை ஏற்பாரே!---திட்டுக்கும்
எட்டுகின்ற ஈசனின் இன்னருளே பந்தவினைக்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.

Thursday, January 15, 2009

கற்றை கனல் வித்து!

முத்துநிகர் பத்திநகை முத்தையனின் வித்தகத்தை
பத்திமனச் சுத்தியுடன் பத்திடுவோம்!-- நித்தனவன்
சத்திசிவன் சித்தமகிழ் சத்குருவாய் உத்தவனோர்
வித்தையொளிர் கத்தைகனல் வித்து.

Tuesday, January 13, 2009

ஆதிரையான் நர்த்தனம்!



பன்மலர்கள் மாலைகளாய் பாங்குடன்தோள் சேர்ந்திலங்க,
புன்னகையில் கூத்தன் பொலிகின்றான்!--என்னென்பேன்!
கண்கொண்டேன்!ஆதிரையான் கால்நடிக்கும் நர்த்தனமே
மண்ணில்நான் வேண்டும் வரம்.

பச்சை வண்ணங்கள்!-௨.(தொடர்ச்சி)

பச்சை பசுங்கிளிகள் பச்சைமயில் தோகையெழில்
கச்சைக் கட்டிநின்று காட்டுமுயர் பச்சையென்று

பரந்த வயல்வெளியில் பசுமையே பாய்விரிக்கும்
விருந்தென இயற்கைத்தாய் விஞ்சைகள் புரிகிறாள்

விசும்புயரும் தருஇனங்கள் விருட்சங்கள் சோலைகள்
திசைமறைக்கும் வழிமறக்கும் தேடரிய பசுவனங்கள்

மருத்துவ குணமுடைய மரம்செடிகள் செல்வங்கள்
கருத்தினில் கொண்டிடுவோம் காத்திடுவோம் பசுமையினை

கண்நிறைந்த பச்சைக்காய் கறிகளுடன் கீரைகள்
உண்ணநல் உணவாகும் உடல்நலமும் உயர்வாகும்

திருமண மண்டபத்தில் திகழ்குலையாய் வாழைமரம்
தருகின்ற வெற்றிலைச்சீர் தாம்பூலம் நிறைவுபெறும்

வீட்டினிலே செடிகொடிகள் விதவிதமாய் வளர்த்திடுவோம்
தோட்டமாய்க் காய்கனிகள் தோதாக விளைவிப்போம்

பச்சைக் குதிரையெனும் பாங்கான விளையாட்டும்
இச்சையுடன் விளையாடார் எவருண்டு சொல்லிடுவீர்?

பச்சைக் குழந்தைஎனப் பகன்றிடுவர் சிசுவினையே
பச்சை யெனும்பெயரும் பருவமாம் புனிற்றிளமை

பச்சைநிற விளக்கெரிய படபடக்கும் வாகனங்கள்
அச்சமின்றி சாலையினை அலையெனவே கடந்திடுவர்

பச்சைக் கொடியசைய பச்சைநிற விளக்கெரிய
புஸ்புஸ் பெருமூச்சாய்ப் புறப்படுதே தொடர்வண்டி

பசுமைநிறம் நம்கொடியில் பண்பாய் விளங்கிடுதே!
திசையெங்கும் புதுமைதனைத் தேடி உழவுசெய்வோம்!

கற்றவர்க்கு எளிதாகக் காட்சிதரும் பச்சையட்டை
பெற்றிடுவர் வெள்நாட்டில் பெரிதுவந்துத் தங்கிடுவர்!

அயல்நாட்டில் வாழ்ந்திடவே அலைந்திளைஞர் வாடுகின்றார்!
இயலாதப் பெரியோர்கள் ஏங்கிடுவர் மக்களுக்காய்!

மங்கையர்கை சிகப்பழகு மருதாணி இலைகளினால்
செங்கையாய் அழகுபெறச் சிறுமியரும் விரும்பிடுவர்!

பூங்கொடிகள் மான்மீன்கள் பொலிவான கோலங்கள்
பாங்குடனே குத்திடுவர் பச்சையினில் கலைதிகழ!

பச்சையெனும் உயர்நிறத்தைப் பாராட்டி மதித்திடுவோம்!
நிச்சயமாய்க் கருணையெனும் நித்தியமும் பசுமையன்றோ?

அஞ்சனையின் தவப்புதல்வன் அனுமனவன் ராமபக்தன்
சஞ்சீவிப் பருவதத்தைத் தந்ததுமோர் அருஞ்செயல்தான்!

பச்சை நிறத்தழகா! பார்வதியின் சோதரனே!
துச்சமென வினைநீங்கத் துதித்திடுவேன் நலமருள்வாய்!

(தமிழ் எழுத்துரு பிரச்சினையால் மறுபடியும் இடுகிறேன்)

Friday, January 9, 2009

தமிழைப் போற்றுவோம்!

சங்கம் மூன்றில் வாழ்ந்த
...தமிழில் காணும் யாவும்
பொங்கும் ஆர்வம் ஓங்க
...புதையல் என்னக் காண்போம்!
தங்கும் காதல் வீரம்
...சாற்றும் பக்தி கூறும்
தங்கம் மிஞ்சும் துங்கத்
...தமிழைப் போற்றிக் கற்போம்!

Wednesday, January 7, 2009

மணல் கோவில்!(படக் கவிதை)

கடலலையில் விளையாடிக் கையளைந்து மணல்வெளியில்
...கலைவண்ணம் விஞ்சிடவே என்னசெய்தாய்?
சுடரெனவும் வெங்கதிரோன் சுடுவதும்நீ உணர்ந்திலையோ?
...தொடர்ந்திடுமுன் செயலதனில் கண்ணானாய்!
தடமெனவும் மதிலெனவும் தலமமைத்து இறையவனார்
...சிவரூபம் லிங்கமென உருவமைத்தாய்!
படமெனவே இளமனதில் பதிந்திருந்த நினைவுகளும்
...பக்குவமாய் ஆலயமாய் வளர்ந்ததுவே!

காற்றுமழை வாராமல் கருணைசெய வேண்டுகிறேன்
...கலைந்திடாமல் ஆலயமும் விளங்கிடவும்
சாற்றிமலர் தூவிடவும் சந்நிதியில் பாடிடவும்
...சரம்சரமாய் கொன்றைதும்பை பூத்திருக்கும்!
ஏற்றமுடன் மண்சுமந்து எளியவந்திக் காளெனவே
...இறைவனவன் பிட்டுக்காய் அடிபட்டான்!
மாற்றறியாப் பொன்னான மகேசனின் அன்பினையே
...மனமுருகச் சொல்லிடுவேன் கேள்!குழந்தாய்!

கண்மூடித் துதிசெய்யும் கண்மணியே!கருத்துடன்நீ
...கட்டிவைத்த ஆலயமுன் கைவண்ணம்!
வெண்ணீறன் நீலகண்டன் விளையாடல் அறிந்திடுவாய்!
விழைந்தமைத்த மனக்கோவில் உறைபவனாம்!
தொண்டாகி நின்றவூர் தூயோனின் அம்பலத்தைத்
...தொழும்பூச லார்மனமே குடிலென்றான்!
மண்ணாலே சிவலிங்கம் மனங்கொள்ள நீசமைத்தாய்!
...மறையாமல் கணினியில் நின்றிடுமே!

நின்ற ஊர்--திருநின்ற ஊர்

Tuesday, January 6, 2009

சர்வமும் சக்தி!



விதமாய் அருளில் விளங்கிடும் தாயை வியந்திருக்கும்
பதமாய் உலகின் பசுமை வளங்கள் படர்ந்திடுதே!
நிதமாய் யுகமென நின்றிவ் உலகை உயிர்ப்பவளை
சதமாய் பணிந்துடன் சாற்றுவம் சர்வமும் சக்தியென்றே!

சக்தி!உனைக் கேட்டேன்!

சக்தி!உனைக் கேட்டேன்!

நிலையான அருளினுக்கோர் உறைவிடம்நீ!
...நிஜமென்று நம்புகின்றேன் பொய்யோ?
சிலையான உன்னிடத்தில் இரக்கமுண்டோ?
...சிறிதேனும் நடந்தவற்றைக் காண்பாய்!
கொலையான உயிர்களெல்லாம் உயிர்த்திடுமா?
...குமுறலினில் மானிடமும் பாழோ?
குலையாத அன்பினிலே திகழுலகைக்
...கொடுத்திடடி!சக்தி!உனைக் கேட்டேன்!

Monday, January 5, 2009

குழந்தையெனும் வரமே!



விழிநிறைந்த வியப்பே!--முகை
...விரியுமண மலரே!
மொழிமயங்கும் கவியே!--தவழ்
...முழுமதியின் அழகே!
பொழியுமழைத் துளியே!-- வளர்
...புதியபசும் பயிரே!
குழந்தையெனும் வரமே!--உயிர்
...குளிரவரும் இதமே!

Friday, January 2, 2009

உதிரி மலரே!



இறைவன் தாளில் ஏற்றமிக
...இயைந்து மிளிரும் உதிரிமலர்!
மறையின் உயர்ந்த வாழ்த்தொலியில்
...வணங்கித் தூவும் மலராவாய்!
குறையும் ஏனோ கொண்டிடுவாய்?
...குவளை நீரில் மலர்ந்திவாய்;
நிறைந்த வமைதி வேண்டிடுவோர்
...நெஞ்சில் நிறைவைத் தந்திடுவாய்!

செங்கதிரோன் வந்துதித்த தேசு.

செங்குடுமிச் சேவல் சிலிர்த்துடன் கூவிடவும்
பங்கயப்பூ உள்ளம் பரவசத்தில்--பொங்கிடவும்
தங்கமென மஞ்சலெழில் தாரணியும் பெற்றிடவே
செங்கதிரோன் வந்துதித்த தேசு.