Thursday, July 19, 2012

திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி--4

 மொய்குழலாள் உமைபங்கன் முக்க ணானை
...மூலவனாம் பூரணனை  முதல்வன் தன்னைப்
பெய்கிறவான் மழையவனைப் பிட்சாண் டானைப்
...பிறைமதியைச் சூடுவானைப் பெம்மான் தன்னைக்
கொய்தமலர் தூவுமன்பர் குறைதீர்ப் பானைக்
...கோதில்லா குணநிதியைக்  குழகன் தன்னைச்
செய்வினையின் துன்புதன்னைத் தீர்க்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....7


ஆர்த்தவனை நாகத்தை அரைக் கச்சாய்
...ஆராத அன்பினிலே அடியார் தம்மை
ஈர்த்தவனை வெள்ளைநிற இடபத் தானை
...இன்னமுதாய் நஞ்சையுண்ட எம்மான் தன்னைப்
பார்த்தவனை மதனெரியால் படவைத் தானைப்
...பரிவுடனே உமையாளைப் பங்காய் ஆகம்
சேர்த்தவனை செஞ்சடையில் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....8 

No comments: