Tuesday, July 31, 2012

திருவேடகம் ---1

திருவேடகம்
-----------------
(திருமுக்கால் அமைப்பில்.
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா) 


பற்றன லிலேடதும் பசுமையாம் ஏடகப்
புற்றர வினையணி வீரே
புற்றர வினையணி வீருமைப் புகலென
உற்றவர் உறுவதும் உய்வே....1

(பற்றும் அனலில் ஏடதும் பசுமையாம்.)

அலைபுனல் எதிர்த்தெழு அந்தமிழ் ஏடக
கலைமதி புனைசடை யீரே
கலைமதி புனைசடை யீருமை வணங்கிட
இலையென விலகிடும் இடரே....2


வையையி லேடெதிர் வந்தடை ஏடக
மெய்யணி வெண்பொடி யீரே
மெய்யணி வெண்பொடி யீருமை நினைபவர்
வெய்யவல் வினைத்தளை விடுமே.


ஆற்றிலி டருந்தமிழ் அவையடை ஏடக
நீற்றினைப் புனைநுத லீரே
நீற்றினைப் புனைநுத லீரும தலர்க்கழல்
ஏற்றிட நிறைந்திடும் இனிதே....4


தெறிபுனல் எதிரெழு செந்தமிழ் ஏடக
வெறிமலர் புனைசடை யீரே
வெறிமலர் புனைசடை யீருமை நினைபவர்
நெறிதனில் அடைவதும்  நிறைவே....5


Friday, July 20, 2012

திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி-- 5

அங்கயற்கண் அம்மையுறு ஆகத் தானை
...அடலேறு தனிலமரும் அண்ணல் தன்னைத்
திங்களுடன் கங்கையையும் சிரமேற் றானைச்
...தென்மதுரை தனிலாடல் செய்தான் தன்னை
வெங்கடத்தில் இரவாடும் மெய்யன் தன்னை
...வீதியுலா வருகின்ற விமலன் தன்னை
செங்கமலத்(து) அளிமுரலும் தடங்கள் சூழும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....9


வைதிடினும் ஏசிடினும்  வஞ்ச மின்றி
...வாழ்வருளிக் காக்கின்ற வள்ளல் தன்னை
மெய்ம்மையெனும் அன்புருவாய் மிளிர்வான் தன்னை
...மெய்யடியார் குறைதீர்க்கும் விடையன் தன்னைக்
கைலைதனின் மன்னவனாய்க் காணும் தேவைக்
...கைத்தலத்தில் அழலேந்திக் காப்பான் தன்னைத்
தெய்வமென நம்பிடுவார் தெளிவா வானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....1o 

Thursday, July 19, 2012

திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி--4

 மொய்குழலாள் உமைபங்கன் முக்க ணானை
...மூலவனாம் பூரணனை  முதல்வன் தன்னைப்
பெய்கிறவான் மழையவனைப் பிட்சாண் டானைப்
...பிறைமதியைச் சூடுவானைப் பெம்மான் தன்னைக்
கொய்தமலர் தூவுமன்பர் குறைதீர்ப் பானைக்
...கோதில்லா குணநிதியைக்  குழகன் தன்னைச்
செய்வினையின் துன்புதன்னைத் தீர்க்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....7


ஆர்த்தவனை நாகத்தை அரைக் கச்சாய்
...ஆராத அன்பினிலே அடியார் தம்மை
ஈர்த்தவனை வெள்ளைநிற இடபத் தானை
...இன்னமுதாய் நஞ்சையுண்ட எம்மான் தன்னைப்
பார்த்தவனை மதனெரியால் படவைத் தானைப்
...பரிவுடனே உமையாளைப் பங்காய் ஆகம்
சேர்த்தவனை செஞ்சடையில் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....8 

Sunday, July 15, 2012

திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி-- 3

நாகா பரணமணி நாதன் தன்னை
...நயமாய்ப் பொற்சபையில்  நடம்செய் வானை
வாகா யுமையம்மை வாமத் தானை
...வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப்
...பாட்டால் பரவுமன்பர் பற்றும் கோனை
சேகார் நிறச்சடையன்  திங்கள் சூடும்
...திருமாற்பேற்  றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே.... 5


சேகு=செம்மை
தாய்வழியில் வெள்ளத்தால் தவித்து நிற்கத்
...தாயாகப் பெண்ணைவந்து காத்தான் தன்னைப்
பேய்வடிவ அன்னையினைப் பெற்றான் தன்னைப்
...பித்தனென்ற சுந்தரர்க்குத் தூதா .னானைக்
காய்வினையைத் தீர்க்கின்ற  கழலன் தன்னைக்
...கரியுரியை உடுத்தவனைக் கதியா வானைச்
சேய்மையனாய் அண்மையனாய்த் திகழ்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....6 

Thursday, July 12, 2012

திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி-- 2

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா  வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....3 



தெம்பழிசெய் ஊழ்வினையை விரட்டவேண்டில்
...சித்தமெல்லாம் சிவமாக உய்விப்பானை
வம்பலரார் சிலைமதனை எரிசெய் தானை
...வார்சடையில் மதிசூடும் அண்ணல் தன்னை

அம்பலமே நடிக்கின்ற மேடை  யாகி
...ஆடலிலே உயிரனைத்தும் புரக்கின் றானை
ச்
செம்பரமாய் இலங்குமம்மை அப்பன் தன்னைத்

...திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....4
செம்பரம்=செம்பொருள்

Monday, July 9, 2012

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)
---------------------------------------------
(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற
அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம்/மா வரும். அவ்விடத்தில்
மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்) 



துள்ளலைகள் அலைக்கின்ற துரும்பைப் போல
...துயரலைக்கும் வினையெல்லாம் மாற வேண்டில்
அள்ளியருள் வழங்குகின்ற ஐயன் தன்னை
...அஞ்சனவேல் விழியன்னை வணங்கும் தேவை
வெள்ளிநிலாச் சூடுகின்ற விடையன் தன்னை
...விந்தைமிகு ஆடலினை நடிக்கும் வேந்தை
தெள்ளுதமிழ்ப் பதிகத்தால் குரவர் போற்றும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....1


தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா  வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....2 


Tuesday, July 3, 2012

ஊன்றாப்பு (Uentrop) --2

தான்றான் உலகைத் தாங்கி அருள்பவனாம்
ஊன்றான் பதத்தை உள்ளன் பிலரகத்தில்
தேன்றான் சுவையோ திருப்பேர் சொலச்சுவைக்கும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.

 
கூன்றான் விழுந்து குமையும் முதுமையிலும்
ஆன்றான் அமரும் ஐயா எனவழுதால்
ஈன்றா னாகி இரங்கிக் காப்பவனை
ஊன்றாப்(பு) அரனை ஓதி உய்ம்மனமே....7


 ஏன்றான் நதியை எழிலார் சடைதன்னில்
தோன்றா அருவன் சோதி யானவனை
கோன்றான் நடத்தில் கோலங் கொண்டவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....8


தான் தோன் றியெனும் தந்தை தாயில்லா
வான் தோய் சிகர மலையன் சங்கரனை
ஊன் தேய் முதுமை உறினும் தொழவருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே. ...9


தான் தோன்றி=சுயம்பு.

மான் தீ மழுவாள் சூலப் படைக்கரத்தன்
வான்சூழ் கோள்கள் மாறா தியக்குபவன்
ஊன்சேர்ந் துருக உன்னு வார்க்கருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....10