Saturday, March 3, 2012

திருக்கூடலையாற்றூர்-- 1

கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
...............................................................

ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே....1

மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே....2

நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே....3

தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே....4

கான்=காடு
பல்வகை நிலைகாணும் பத்திசெய் வழிதன்னில்
வெல்வழி இறைதாளை விட்டிடா நினைவாகும்
வல்வினை அகன்றோடும் வாழ்வினைத் தருமீசன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே....5

3 comments:

Geetha Sambasivam said...

கூகிள் ரீடர் உங்க போஸ்டை உடனே காட்டி விட்டது! ம்ம்ம்ம்? ஆனால் கவிதை இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வரேன். இது ஒரு சோதனைப் பின்னூட்டம். :))))

Thangamani said...

வாங்க கீதா! வருகைக்கு நன்றி!

Geetha Sambasivam said...

சிரமீது
கொக்கிற கணிவானூர் //

இது எந்த நிகழ்வைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ள இயலவில்லை அம்மா. :(((