Saturday, March 10, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை) --1

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
---------------------------------
(1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர்
அமைந்துவரப்பெற்றது)
('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்
மழுவாட் படையன் கயிலை மலையானே....1

சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்
கங்கை அணிவான் கயிலை மலையானே....2

செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே....3

காம,குரோத,மோக,லோப,மத,மாச்சர்யம் என்னும்
ஆறுவகை எதிரிகள்.

தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே....4

உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே....5

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.

இராவணன் அகம்பாவத்தில்,கைலைமலைப் பெயர்க்க
முயல்வதை,அறிந்த ஈசன்,தன்கால்விரலாலழுத்த,
இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான்.
ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு,சந்திரஹாசம் எனும் வாளை
அளித்தார்.

4 comments:

sury siva said...

கைலாச பர்வதத்தில் அமர்ந்து, உலகெல்லாம் பரிபாலித்து, ஒன்பது கிரகங்களையும் ஆளும் சிவ பெருமான் பெருமைதனை அழகாகச் சொல்லும் இக்கவிதையினை யானும் ஒன்பது ராகங்களில் பாட எண்ணினேன்.

முதலாக பூபாளம் , அடுத்தது அடானா, சஹானா , ஷண்முக பிரியா எனத் துவங்கி காம்போதியில் முடிகிறது, இந்த முதல் வரிசை

இங்கே வாருங்கள்.

subbu rathinam

sury siva said...

you may visit here also to listen to this highly devotional song

http://menakasury.blogspot.com

subbu rathinam

Thangamani said...

திருசூரி அவர்களே,
பக்தியோடு ராகங்கள் இசையப் பாடியது
அருமை!நன்றி!பாராட்டுகள்!மிக்கநன்றி!

Geetha Sambasivam said...

அற்புதமாய் இருக்கிறது அம்மா, அதற்கேற்ப சூரி அவர்களின் இசையும் அருமை.