Saturday, January 14, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி (திருச்சிராப்பள்ளி)

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
----------------------------------------------------------------------
ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1

நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2

நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்.

11 comments:

sury siva said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்

இங்கு வாருங்கள்.
http://vazhvuneri.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை


சிவனைச் ஜீவனுடன் சிந்திக்கவைக்கும் வரிகள்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Thangamani said...

உங்கள் அழகிய கருத்துக்கு மிக்கநன்றி ராஜராஜேஸ்வரி!

Thangamani said...

உங்களுக்கும்,உங்கள் அன்புகுடும்பத்திற்கும்
என் இனிய பொங்கல்வாழ்த்துகள்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//..தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....//

எங்கள் திருச்சியில் இருக்கும் “சிராப்பள்ளிக் குன்றுடையானை” ( சம்பந்தர்) இறைவன் தாயுமானவனைப் பற்றிய அருமையான பாமாலை.

ஷைலஜா said...

சிராப்பள்ளி என்றதும்
புறாபோல பறந்துவந்தேன்!
சிந்தித்து வணங்கும் என் சிவனை
வந்தித்து நீர் எழுதிய கவிதை அருமை!

sury siva said...

சிந்தித்து வணங்கும் என் சிவனை
வந்தித்து நீர் எழுதிய கவிதை இங்கு...

http://youtu.be/qZCNGrK5xRU

subbu rathinam

Thangamani said...

பாராட்டுக்கு மிக்கநன்றி ஷைலஜா!
உங்கள் பாராட்டுக் கவிதை வெகுஅருமை!
உங்கள் குடும்பத்திற்கும்,உங்களுக்கும்
இனியபொங்கல் வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி

Thangamani said...

உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி!
தமிழ் இளங்கோ!உங்கள் ஊர்ப்பாசம் தெரிகிறது!
இனிய பொங்கல்வாழ்த்துகள்!

Geetha Sambasivam said...

மனதிலே சிராப்பள்ளியை நினைத்தவண்ணம் வந்தேன்; இங்கேயும் சிராப்பள்ளிச் சிவன் காட்சி கொடுத்தார். நன்றி அம்மா.