Tuesday, January 24, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி!-- 5

'கூவிடுஇன் குரலினிலே குயிலே!' என்று
...குயில்பத்துப் பாட்டிசைக்கும் குழகன் தன்னை
பாவடியில் தாண்டகம்சொற் பதங்கள் ஆடும்
...பாங்கினிலே நடனம்செய் பரனை போற்றிப்
பூஅடியில் தூவியன்பர் பூசை செய்தே
...புங்கவனின் அஞ்செழுத்தைப் பொலிய ஓதிச்
சேவடியால் கூற்றுதைத்துச் சிறியன் காத்தச்
...சிராப்பள்ளி சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....9

தீங்கன்னல் இன்சுவைசேர் சீரார் நாமம்
...சிந்திக்கும் அன்புக்குள் சிக்கு வானை
ஆங்கன்று மழலைக்காய் அம்மை யோடே
...அமுதீந்துப் பசிதீர்த்தே அருள்செய் தானை
தாங்கொண்ணா வல்வினைசெய் சஞ்ச லத்தைச்
...சாடியென்றும் தயைசெய்துத் தாங்கு வானைத்
தீங்கில்லா நிலையருளும் செல்வன் தன்னைச்
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....10

தேம்,தீம்=இனிமை
தீம்+கன்னல்=தீங்கன்னல்
ஆங்கு+அன்று= ஆங்கன்று

1 comment:

Geetha Sambasivam said...

ஆங்கன்று மழலைக்காய் அம்மை யோடே
...அமுதீந்துப் பசிதீர்த்தே அருள்செய் தானை //

இது எந்தத் திருவிளையாடல்?? நினைவுக்கு வரலை! :(