Friday, January 20, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி!--4

கூடிவந்த அன்பரெலாம் கோவில் கொண்ட
...கூத்தன்தாள் அடைக்கலமாய்க் கொள்வார் தம்மை
நாடிவந்த வினைதன்னை நலியச் செய்யும்
...நற்றவனை உலகினையே நடத்து வானை
வாடிநொந்து பார்த்திருக்கும் மகளை எண்ணி
...வருவெள்ளப் பெருக்கதனால் வாரா தாய்க்காய்த்
தேடிவந்து தாயுமானத் தெய்வ மான
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....7

நேத்திரங்கொள் நுதலானை நேயன் தன்னை
...நீலமணி மிடற்றானை நிதமும் போற்றிப்
பாத்திரமாய் அவனுக்குப் பத்தி பண்ணிப்
...பற்றிடும்தாள் கதியென்றே பரவு மன்பில்
பூத்திரள்கை நிறைந்திடவே பூசித் தேத்தும்
...புண்ணியம்செய் அடியாரின் புனிதத் தேவைத்
தீத்திரள்போல் மேனியனைத் திருநீற் றானைச்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....8

பாத்திரம்= தகுதி என்னும் பொருளில்.

1 comment:

Geetha Sambasivam said...

தாயுமானவர் வரலாறு சுருக்கமாய்த் தெளிவாய். நன்றி அம்மா