Sunday, December 4, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 5

ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9

அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10

2 comments:

Geetha Sambasivam said...

உண்மை அம்மா, ஓடிச் செல்வம் சேர்க்கும் உள்ளம் அமைதி காண்பதில்லை; :(


//புனிதா, பழமையானவா, நவனே//

இந்த வரிகள், திருவெம்பாவையின் இந்தப் பாடலை நினைவூட்டியது.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!

Thangamani said...

அன்பு கீதா,
இலக்கியநயத்துடன் கூடிய உங்கள் இரசனை சிறப்பு!
ம்கிழ்ந்தேன்!