Monday, October 31, 2011

தாயுமானவனே !--1

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

* திருவாவடுதுறையில் தந்தையாரின் வேள்விக்கெனச் சம்பந்தர் வேண்டி 'இடரினும்
தளரினும்' என்ற பதிகம் பாடி ஆயிரம்பொன் பெற்றதைச் சுட்டியது.

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா .னவனே....2


பஞ்சம் ஏற்பட்டபோது திருவீழிமிழலையில் அடியவர்கள் பசிதீர்க்கவேண்டி
அப்பருக்கும் சம்பந்தருக்கும் சிவன் படிக்காசு அளித்ததைச் சுட்டியது.

பிள்ளையார்= ஆளுடை பிள்ளையார்,சம்பந்தர்.

1 comment:

Geetha Sambasivam said...

ஆளுடை பிள்ளையார் என்ற பெயரிலேயே பிள்ளையார் இருப்பதைப் பற்றிப் படிச்சேன் நேற்று. இன்று இங்கே அவரைக் குறித்த பாடல். நன்றி அம்மா.