('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை)
மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.
பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென வேண்டி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே....2.
மணைமீதமர் இளையோன்மணம் தடுத்தாட்கொள வந்தே
பிணைநீஎன தடியானென அருளேசெயும் பெம்மான்
அணைமீறிடு அன்பாலுன தடியேபிடித் தழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....3.
(சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.)
மழைக்கேங்கிடும் பயிராகவுன் தயையேஉறு வரமாய்க்
கழைக்கூத்தெனும் புவிவாழ்விலுன் கழல்பாதமே கதியாய்ப்
பிழைக்கேப்பிறப் பெடுத்தேனுன தருளேபெரும் பேறென்
றழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்ப்பிறப் பவர்க்கே....4.
துளியேபிறை அணிவார்சடை யொளிர்பூஞ்சரம் இலங்கக்
கிளிதோளமர் வடிவாள்கயல் விழியாள்துணை அரனே
களியாய்நட மிடுவாய்சிவ பரனேஎனைக் காவென்(று)
அளிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....5.
வயசு கோளாறு
1 year ago
2 comments:
அரனின் அருள் பெற
அவனடியிலமர்ந்து
ஆனந்தமாய் ஒரு
இசைவெள்ளம்.
ஈசா !
என்னே நின் அருள் !
சுப்பு ரத்தினம்.
இதை விரைவில் காம்போதி ராகத்தில் பாடுவேன்.
http://vazhvuneri.blogspot.com
திரு.சூரி அவர்களுக்கு,
உங்கள் பக்தி பூர்வமான மடலுக்கு மிக்கநன்றி!
காம்போதியில் நீங்கள் பாடியதைக் கேட்டு மகிழ்கிறேன்.
மீண்டும் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment